AppamAppam - Tamil

செப்டம்பர் 20 – செழிப்பான்!

“உன்னதத்திலிருந்து நம்மேல் ஆவி ஊற்றப்படுமட்டும் அப்படியே இருக்கும்; அப்பொழுது வனாந்தரம் செழிப்பான வயல்வெளியாகும்” (ஏசாயா 32:15).

‘வனாந்தரம் செழிப்பான வயல்வெளியாகும்’ என்பதே இன்று கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கும் வாக்குத்தத்தமாகும். அவர் பாலைவனத்தை சோலைவனமாக்குகிறவர். இல்லாமையிலிருந்து எல்லாவற்றையும் உருவாக்குகிறவர். வனாந்தரத்தை செழிப்பான வயல்வெளியாக்குகிறவர்.

ஒருவேளை கடந்த காலங்களிலே நீங்கள் வறட்சியான பாதைகளைக் கடந்து வந்திருக்கலாம். உங்களுடைய வருமானம் போதுமானதாயிராததால், கடன் பிரச்சனைகள் திரும்பத் திரும்ப மோதி அடித்திருக்கலாம். ஆனால் இந்த துக்கமும், துயரமும் என்றென்றைக்கும் நீடித்திருப்பதில்லை. உன்னதத்திலிருந்து ஆவியானவர் உங்கள் மேல் இறங்கி வரும்போது, உங்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையைச் செழிப்பாக்குவார். வானத்திலுள்ள பலகணிகளைத் திறந்தருளும்போது, இம்மைக்குரிய ஆசீர்வாதங்களை அளவில்லாமல் பெற்றுக்கொள்வீர்கள்.

என்னுடைய தகப்பனார் இரட்சிக்கப்பட்ட ஆரம்ப காலத்தில், தன்னுடைய பொருளாதாரத் தேவைகளை சந்திக்க முடியாமல் அவதிப்பட்டார். இதற்காக ஒரு நாள் வீட்டிலே உபவாச ஜெபம் ஒழுங்கு செய்து, “ஆண்டவரே வனாந்தரம் செழிப்பான வயல்வெளியாய் மாறவேண்டும்” என்று ஊக்கமாய் ஜெபித்தார். அன்று உபவாசக் கூட்டத்தை நடத்த வந்த தேவனுடைய தாசன் என் தகப்பனாரை ஆசீர்வதித்து, “கர்த்தர் இன்று முதல் உங்களுக்கு செழிப்பான நாட்களைக் கட்டளையிடுவார்” என்று சொன்னார். என் தகப்பனாரும் அதை அப்படியே விசுவாசித்து ஏற்றுக்கொண்டார். கர்த்தர் அன்று முதல் செழிப்பான நாட்களைத் தந்தார். மட்டுமல்ல, அவருடைய ஆவிக்குரிய வாழ்க்கையிலும் ஆவியின் வரங்கள் செயல்பட ஆரம்பித்தன.

ஏசாயா சொல்லுகிறார், “வனாந்தரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, கடுவெளி களித்து, புஷ்பத்தைப்போலச் செழிக்கும். அது மிகுதியாய்ச் செழித்துப் பூரித்து ஆனந்தக் களிப்புடன் பாடும்; லீபனோனின் மகிமையும், கர்மேல் சாரோன் என்பவைகளின் அலங்காரமும் அதற்கு அளிக்கப்படும்; அவர்கள் கர்த்தருடைய மகிமையையும், நமது தேவனுடைய மகத்துவத்தையும் காண்பார்கள்” (ஏசாயா 35:1,2).

செழுமையான ஆசீர்வாதங்கள் உங்களுக்கு உண்டு. சாலொமோன் ஞானி மூன்று பிரிவினரைச் சுட்டிக்காண்பித்து, அவர்கள் செழிப்படைவார்கள் என்று கூறுகிறார். முதலாவது, “கர்த்தரை நம்புகிறவனோ செழிப்பான்” (நீதி. 28:25) என்றும், இரண்டாவது, “செம்மையானவனுடைய கூடாரமோ செழிக்கும்” (நீதி. 14:11) என்றும், மூன்றாவது “உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்” (நீதி.11:25) என்றும் சொன்னார்.

சாதாரணமாக எந்த இடத்தில் மழை இருக்கிறதோ, அங்கேதான் மரம் செடி கொடிகள் செழிப்பாக வளரும். ஆனால் கர்த்தரோ, வனாந்தரத்தில் நான் உங்களுக்கு செழிப்பைக் கட்டளையிடுவேன் என்று வாக்களிக்கிறார். தேவபிள்ளைகளே, எந்த நிலைமையிலே நீங்கள் நடப்பட்டிருந்தாலும் கர்த்தர் உங்களைச் செழிக்கச் செய்வார்.

நினைவிற்கு:- “நீதிமான் பனையைப் போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப் போல் வளருவான். கர்த்தருடைய ஆலயத்திலே நாட்டப்பட்டவர்கள் எங்கள் தேவனுடைய பிராகாரங்களில் செழித்திருப்பார்கள்” (சங்.92:12,13).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.