No products in the cart.
செப்டம்பர் 17 – உதவி செய்கிற தேவன்!
“நானோ தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்; கர்த்தர் என்னை இரட்சிப்பார். அந்திசந்தி மத்தியான வேளைகளிலும் நான் தியானம்பண்ணி முறையிடுவேன்; அவர் என் சத்தத்தைக் கேட்பார்” (சங். 55:16,17).
இந்த உலகத்தில் உங்களுக்கு உதவிச் செய்யக்கூடிய ஒருவர் உண்டென்றால், அவர் இயேசு கிறிஸ்து ஒருவரே. உங்களுடைய பிரச்சனைகளின் நேரத்தில், போராட்டத்தின் நேரத்தில் மனிதர்களுடைய உதவியையே நீங்கள் நாடுகிறீர்கள். ஆனால் “மனுஷனுடைய உதவி விருதா” (சங். 108:12) என்று வேதம் சொல்லுகிறது.
என்னுடைய தகப்பனார் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்ததும், அதற்குமேல் அவரை படிக்க வைக்க வீட்டில் வசதியில்லை. காரணம், என்னுடைய தாத்தா அதற்கு முன்னரே வேலையிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். அப்படியிருக்கும்போது, என்னுடைய தாத்தாவின் நண்பர் ஒருவர் வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி என் தந்தையை சென்னைக்கு அழைத்துக்கொண்டு வந்தார். சென்னைக்கு வந்ததும், அவரை அழைத்துக்கொண்டு வந்தவர், அவரைத் தனியாக விட்டுவிட்டுப் போய்விட்டார். என் தகப்பனார் ஒவ்வொருநாளும் தன் சொந்த முயற்சியிலேயே வேலையைத் தேடினார். அவருடைய கையிலிருந்த பணம் அவ்வளவும் செலவழிந்துபோனது.
பிறகு ஒரு நாள், அவர் பசியோடு வெயிலிலே அலைந்துக் கொண்டிருந்தபோது, தற்செயலாகத் தன் அண்ணன் தெருவிலே நடந்து போய்க்கொண்டிருந்ததைக் கண்டார். அவர் சென்னையில் வந்து அரசாங்க வேலையில், நல்ல நிலைமையில் இருந்தார். அவரை பார்த்தவுடன் என் தகப்பனாருக்கு மிகுந்த சந்தோஷம். எல்லா பிரச்சனைக்கும், அலைச்சல்களுக்கும் ஒரு முடிவு வந்துவிடும் என்று எண்ணி அவர் பின்னால் ஓடினார். அவரும் உதவ முன்வரவில்லை.
யாரும் உதவ முன்வராத நிலையில், என் தகப்பனாரின் உள்ளம் சுக்குநூறாய் உடைந்தது. அவர் தன் வேதனையையெல்லாம் முழங்காலில் நின்று கர்த்தருடைய பாதத்தில் வைத்து கதறினார். இனிமேல் எந்த மனிதனுடைய உதவியையும் ஒருநாளும் நாடப்போவதில்லை என்று முடிவு செய்தார். மனுஷனுடைய உதவி விருதா என்ற சத்தியத்தைப் புரிந்துகொண்டார். கர்த்தரை அதிகமாய்த் தேடினார். அன்றையிலிருந்து கர்த்தர் அவருடைய வாழ்க்கையிலே மாற்றத்தை ஏற்படுத்தினார். மேல்படிப்பைப் படிக்க அற்புதமாய் அவருக்கு உதவி செய்தார். பிறகு அவருக்கு கணித ஆசிரியராக வேலை கிடைத்தது. இன்னும் சில நாட்களில், அரசாங்கத்திலே வருமான வரித்துறையிலே வேலையைக் கர்த்தர் கொடுத்தார். கர்த்தர் அவரைக் கொஞ்சம் கொஞ்சமாய் உயர்த்த ஆரம்பித்தார்.
ஒரு நாள் வந்தது. கர்த்தர் அவரைத் தம்முடைய ஊழியத்திற்காய் அழைத்தார். நூற்றுக்கணக்கான ஆவிக்குரிய தமிழ்ப் புத்தகங்களை அவர் எழுதக் கர்த்தர் உதவினார். கர்த்தர் தமது சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க உலகமெங்கிலும் அவரைக் கொண்டு சென்றார். கர்த்தரே அவருக்கு எல்லா உதவிகளையும் செய்தார். தேவபிள்ளைகளே, ஒருவேளை நீங்களும்கூட, இப்படிப்பட்ட சூழ்நிலையைக் கடந்து போய்க்கொண்டிருக்கலாம். எனக்கு உதவி செய்ய யாருமே இல்லையே என்று அங்கலாய்க்கலாம். கர்த்தரை நோக்கிக் கூப்பிடுங்கள். கர்த்தர் உங்களுடைய சத்தத்திற்குச் செவிகொடுப்பார். உங்களுக்கு உதவி செய்வார்.
நினைவிற்கு:- “கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார்” (சங். 72:12).