AppamAppam - Tamil

செப்டம்பர் 12 – சிட்சிக்கும்போது!

“அன்றியும், நம்முடைய சரீரத்தின் தகப்பன்மார்கள் நம்மைச் சிட்சிக்கும்போது, அவர்களுக்கு நாம் அஞ்சி நடந்திருக்க, நாம் பிழைக்கத்தக்கதாக ஆவிகளின் பிதாவுக்கு வெகு அதிகமாய் அடங்கி நடக்க வேண்டுமல்லவா?” (எபி. 12:9).

கர்த்தர் உங்களை அன்போடு சிட்சிக்கிறவர். அவருடைய பரிசுத்தத்திற்கு நீங்கள் பங்குள்ளவர்களாகும்படி, உங்களுடைய பிரயோஜனத்திற்காக உங்களைச் சிட்சிக்கிறவர். இந்த சிட்சைகள் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணப்படாது. ஆனால், பிற்காலத்தில் அது நீதியாகிய சமாதான பலனைத் தருவதை அறிந்துகொள்ள முடியும்.

உபத்திரவமில்லாத எந்த குடும்பமுமில்லை. பாடுகளின் வழியாய்ச் செல்லாத பரிசுத்தவான் ஒருவருமில்லை. நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அதிகமாயிருக்கும் என்று வேதம் சொல்லுகிறது. ஏன் உங்களைப் பாடுகளின் பாதையில் கர்த்தர் வழி நடத்துகிறார்? ஏன் உங்களுக்கு எதிராக சத்துருக்களை அனுமதிக்கிறார்?

வேதம் சொல்லுகிறது, ‘இஸ்ரவேல் புத்திரரின் சந்ததியாரும் அதற்குமுன் யுத்தஞ்செய்ய அறியாதிருந்தவர்களும் அவைகளை அறியும்படி பழக்குவிப்பதற்காக, கர்த்தர் சத்துருக்களை விட்டு வைத்தார். கர்த்தர் மோசேயைக் கொண்டு தங்கள் பிதாக்களுக்கு விதித்த கற்பனைகளுக்கு இஸ்ரவேலர் கீழ்படிவார்களோ என்று அறியும்படி, இஸ்ரவேலரை அவர்களாலே சோதிப்பதற்காக அவர்கள் விடப்பட்டிருந்தார்கள்’ (நியா. 3:2,4).

முதலாவது, யுத்தத்தை அவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காக, இரண்டாவது, அவர்களைப் பரிசோதிப்பதற்காக கர்த்தர் பிரச்சனைகளை அனுமதிக்கிறார். நீங்கள் பிரச்சனை நேரங்களில் கர்த்தரை நோக்கி ஜெபியுங்கள், போராடி ஜெபியுங்கள், பரிசுத்தத்திற்காக மன்றாடுங்கள். இயேசு சொன்னார், “என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்” (எரே. 33:3).

கர்த்தர் துன்பங்கள் அனைத்தையும் ஒரே நொடியில் நீக்கிவிட்டு, துன்பங்களே வராதபடி பார்த்துக்கொள்ளுவார் என்று எண்ணிவிடக்கூடாது. உங்கள் வாழ்க்கையெல்லாம் போராட்டம்தான். ஒரு பிரச்சனை தீர்ந்துபோகும்போது, இன்னொரு பிரச்சனை வரத்தான் செய்யும். கடலில் ஒரு அலை மோதியடிக்கும்போது அடுத்த அலை இயற்கையாகவே புறப்பட்டு வரும். உங்களுக்கு நீந்தக் கற்றுக்கொடுப்பதற்காகவே கர்த்தர் ஒவ்வொரு அலையாக அனுப்பிக் கொண்டிருக்கிறார்.

கைகளை யுத்தம் செய்யப் பயிற்றுவிப்பதற்காகதான் கர்த்தர் இவற்றை அனுமதிக்கிறார். தாவீது சொல்லுகிறார், “என் கைகளைப் போருக்கும் என் விரல்களை யுத்தத்திற்கும் படிப்பிக்கிற என் கன்மலையாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்” (சங். 144:1). கைகள் என்று சொல்லும்போது, பொதுவாக நீங்கள் செய்கிற வேலையை அது குறிக்கிறது. விரல்கள் என்று சொல்லும்போது அவை செய்யும் நுணுக்கமான வேலையைக் குறிக்கிறது.

தேவபிள்ளைகளே, எழுகின்ற அலைகளை எதிர்த்து நீந்த நீங்கள் கற்றுக்கொண்டால்தான் வெற்றியைச் சுதந்தரிக்க முடியும். பரிசோதிக்கப்பட்டால்தான் நீங்கள் கர்த்தருக்காகப் பிரகாசிக்க முடியும்.

நினைவிற்கு:- “நீதியுள்ளவன் இன்னும் நீதி செய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும். இதோ, சீக்கிரமாய் வருகிறேன்” (வெளி. 22:11,12).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.