No products in the cart.
செப்டம்பர் 11 – சிநேகிதரை!
“…உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள்” (லூக். 16:9).
இயேசுகிறிஸ்து சீஷர்களைப் பார்த்து, “உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள்” என்றார். ஏன் தெரியுமா? நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்ளுவார் உண்டாகும்படி நீங்கள் சிநேகிதரைச் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகவே. ஆத்துமாக்களோடு நேரம் செலவழிப்பதின் மூலமாக நீங்கள் சிநேகிதரைச் சம்பாதிக்க முடியும். இவர்கள் உலகப்பிரகாரமான சிநேகிதர்கள் அல்ல, நித்தியமான சிநேகிதர்கள். ஆவிக்குரிய சிநேகிதர்கள்.
அநேகர் எனக்கு விரோதிகளும் வேண்டாம், சிநேகிதர்களும் வேண்டாம் என்கிறார்கள். ஆனால் கர்த்தரோ, உங்களுக்குச் சிநேகிதர் வேண்டும் என்கிறார். உங்கள் பாரத்தைப் பகிர்ந்துக் கொள்ளுவதற்கு உங்களுக்குச் சிநேகிதர் வேண்டும். ஒருவருக்கொருவர் ஜெபிக்கச் சிநேகிதர் வேண்டும். சபைக்கூடி வருதலில் சிநேகிதர் வேண்டும். சிநேகிதர் யார்? சிநேகம் பாராட்டுகிறவனே சிநேகிதன். சாலொமோன் ஞானி சொல்லுகிறார், “சிநேகிதருள்ளவன் சிநேகம் பாராட்ட வேண்டும்; சகோதரனிலும் அதிக சொந்தமாய்ச் சிநேகிப்பவனுமுண்டு” (நீதி. 18:24).
சிநேகிதன் யார்? “உடுக்கை இழந்தவன் கைப்போல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு” என்று திருவள்ளுவர் கூறியிருக்கிறார். ஒருவன் உடுத்தியுள்ள உடை அவிழ்ந்து விழுகிற நேரத்தில், அவன் கைகள் சட்டெனச் சென்று அவிழ்ந்த உடையை சரிப்படுத்துகிறதுபோல, சிநேகிதனுக்கு துன்பம் ஏற்படுகிற வேளையிலே ஓடிச் சென்று அத்துன்பத்திலிருந்து சிநேகிதனைக் காப்பவனே உண்மை நண்பன்.
துன்பங்களிலேயே பெரிய துன்பம் நரகக் கடலில் விழுகிற துன்பம்தான். பாவ சிற்றின்பங்களில் சிக்குகிற துன்பம்தான். உண்மையாய் சிநேகம் பாராட்டுகிறவன், தன் நண்பனுக்காக ஊக்கமாய் ஜெபித்து, ஆத்தும பாரம் கொண்டு, அவன் ஆத்துமாவைத் தப்புவிக்க வேண்டும்.
இயேசுகிறிஸ்து நமக்கு அப்படித்தானே செய்தார். அவரைவிட உத்தம நண்பர் நமக்கு வேறு யார் உண்டு? நமக்காக பரலோகத்திலிருந்து இறங்கி வந்து கல்வாரி சிலுவையிலே தம் உயிரைக் கொடுத்து நம் ஆத்துமாவை மீட்டுக்கொண்டார் அல்லவா? நித்திய அழிவிலிருந்து பாதுகாத்துக்கொண்டார் அல்லவா? வேதம் சொல்லுகிறது, “ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை” (யோவான் 15:13).
இயேசுகிறிஸ்து இந்தப் பூமியிலே வந்தபோது அவரை எல்லாரும் குற்றஞ் சாட்டினார்கள். ஆயக்காரருக்கு நண்பன் என்றும், பாவிகளுக்கு சிநேகிதன் என்றும் சொன்னார்கள் (லூக். 7:34). ஆம், அவர் ஆயக்காரரோடும், பாவிகளோடும் பழகி, அவர்களுடைய ஆத்துமாவையும் மீட்டுக்கொண்டார். உலகத்தில் அருவருப்பாய் எண்ணப்பட்டவர்களைக்கூட அவர் அன்போடு சிநேகித்தார்.
தேவபிள்ளைகளே, உங்கள்மேல் அன்பு பாராட்டுகிறவர் ஒருவருமில்லை என்று கலங்குகிறீர்களா? இதோ, உங்கள்மேல் அக்கறைக் கொள்ளும் ஆண்டவர் ஒருவர் உண்டு. அவர் உங்கள் ஆத்துமாவின்மேல் அதிக அக்கறைக்கொண்டு உங்களை நேசிக்கிறவர். அவர்தான் இயேசுகிறிஸ்து.
நினைவிற்கு:- “சிநேகிதன் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள்; சத்துரு இடும் முத்தங்களோ வஞ்சனையுள்ளவைகள்” (நீதி. 27:6).
