No products in the cart.
செப்டம்பர் 04 – தேவனிடத்தில் சமாதானம்!
“நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்” (ரோமர் 5:1).
தேவனிடத்தில் சமாதானத்தைப் பெற்றுக்கொள்ளுவது என்பது எவ்வளவு பெரிய காரியம்! நீங்கள் தேவனிடத்தில் ஒப்புரவாகி சமாதானம் பெறும்போது, மற்ற பிரச்சனைகள் எல்லாம் ஒன்றுமில்லாமல் போய்விடும். தேவனிடத்திலிருந்து சமாதானத்தைப் பெற்றுக்கொள்வது எப்படி? இயேசு கிறிஸ்துவின் மூலமாக மட்டுமே தேவனண்டை நெருங்கிப்போய் ஒப்புரவாகி சமாதானத்தைப் பெற முடியும்.
உலகத்தில் இரண்டு பேருக்குள் மனஸ்தாபமோ, சண்டையோ வந்துவிடும் என்றால் மூன்றாவதாக ஒருவர் குறுக்கிட்டு, இரண்டு பேரையும் சமாதானப்படுத்துவது வழக்கம். அப்படிப்பட்டவர்கள் பிரிவினையாய்ச் செயல்படுகிற குடும்பங்களை பஞ்சாயத்துப் பண்ணி, ஒன்றுபடுத்தி வைப்பார்கள். இப்படி சமாதானம் பண்ணுவதற்கு ஒரு மத்தியஸ்தர் தேவை.
ஆதாமும், ஏவாளும் தங்கள் பாவத்தின் நிமித்தம் தேவனை வேதனைப்படுத்தினார்கள். கர்த்தருக்குச் செவிகொடுப்பதைப் பார்க்கிலும் வலுசர்ப்பத்திற்கு செவிகொடுப்பதையே தெரிந்து கொண்டதினாலே, கர்த்தருடைய உள்ளம் புண்பட்டது. மனிதன் தேவனோடு உள்ள ஐக்கியத்தை இழந்தான். அன்பின் உறவை இழந்தான். எல்லாவற்றுக்கும் மேலாக சமாதானத்தை இழந்தான்.
நீங்கள் தேவனிடத்தில் சமாதானத்தைப் பெற வேண்டுமென்றால், முதலாவது உங்களுடைய பாவங்களுக்காக மனஸ்தாபப்பட்டு, அறிக்கையிட்டு, பாவ மன்னிப்பைப் பெற்றே ஆக வேண்டும். எப்படி பாவம் மன்னிக்கப்படும்? இரத்தம் சிந்துதலில்லாமல் பாவமன்னிப்பு கிடையாதே. ஆகவே பாவமன்னிப்பை உங்களுக்குப் பெற்றுத் தருவதற்காகத்தான் இயேசு கல்வாரியிலே இரத்தம் சிந்தி, பாவங்களற நம்மைக் கழுவினார்.
மட்டுமல்லாமல் இயேசுவே நமக்கும், பிதாவுக்கும் இடையிலே மத்தியஸ்தராகவும், சமாதானக் காரணராகவும் நிற்கிறார். பாவங்களறக் கழுவப்பட்ட மனிதனை பரிசுத்தமுள்ள தேவனுடைய கிருபாசனத்தண்டை அழைத்துச் செல்லுகிறார். தாம் சிந்திய இரத்தத்தினாலே மனிதனைப் பிதாவோடு ஒப்புரவாக்குகிறார்.
மார்ட்டின் லூத்தருடைய வாழ்க்கையை மாற்றி அமைத்ததே இந்த சத்தியம்தான். தேவனை நீதியுள்ளவராகவும், நியாயாதிபதியாகவுமே பார்த்திருந்த அவருக்கு ஒரு நாள் இந்த சத்தியம் புரிந்தது. கிறிஸ்து ஒப்புரவாகுதலை உண்டாக்குகிறவர் என்பதையும், விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்ற சத்தியத்தையும் அறிந்தவுடன் அவருக்கு ஏற்பட்ட சந்தோஷம் கொஞ்சநஞ்சமல்ல.
பிரிந்திருக்கும் இரண்டு பெரிய மலைகளுக்கிடையே அமைக்கப்பட்டதுபோல தேவனுக்கும், மனிதனுக்கும் இடையே பாலமாய் விளங்குகிறவர் இயேசுகிறிஸ்து. தேவபிள்ளைகளே, இயேசுவின் இரத்தத்தினால் உங்களுக்கு சமாதானம் ஏற்படுவது நிச்சயம்.
நினைவிற்கு:- “இப்பொழுது ஒப்புரவாகுதலை நமக்குக் கிடைக்கப்பண்ணின நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் நாம் தேவனைப் பற்றியும் மேன்மை பாராட்டுகிறோம்” (ரோமர் 5:11).