AppamAppam - Tamil

செப்டம்பர் 02 – எருசலேமின் சமாதானம்!

“எருசலேமின் சமாதானத்துக்காக வேண்டிக் கொள்ளுங்கள்” (சங். 122:6).

எருசலேம் என்றால், ” சமாதானத்தின் பட்டணம்” என்பது அர்த்தமாகும். “சமாதானம்” என்பது எருசலேமில் ஆரம்பித்து, யூதேயா, சமாரியா என உலகம் முழுவதிலும் பரவிச் செல்ல வேண்டும்.

எருசலேம் என்பதின் ஆவிக்குரிய அர்த்தம், உங்களுடைய உள்ளத்தையே குறிக்கிறது. மகாராஜாவாகிய கர்த்தர், உங்களுடைய உள்ளத்தை தனது தலைநகரான எருசலேமாக்கி ஆட்சி செய்ய வேண்டும்; அவர் உங்கள் இருதயத்தில் சமாதானப் பிரபுவாக வீற்றிருக்க வேண்டும். எருசலேம் உங்களுக்குள் இருக்கிறதே! சமாதானத்தின் தேவனைப் பின்பற்றுகிற நீங்கள், உங்களுடைய சொந்த வாழ்க்கையிலே சமாதானத்திற்கேற்றவைகளை அறிந்திருக்க வேண்டியது அவசியம். சமாதானத்தின் பாதையில் செல்ல வேண்டியது மிகவும் அவசியம். மனிதனோடும், தேவனோடும் சமாதானமாய் ஜீவிக்க வேண்டியது அவசியம்.

உலகப்பிரகாரமான எருசலேமைப் பாருங்கள்! தாவீது ராஜா தன்னுடைய நாட்களில் எபூசியரைத் துரத்தி, எருசலேமை தனது நகரமாக்கினார். தாவீதுக்குப்பின் வந்த சாலொமோன் ராஜா எருசலேமிலே கர்த்தருக்கென்று மகிமையான தேவாலயத்தைக் கட்டினார். தானியேல், தன் வீட்டு பலகணிகளை எருசலேமுக்கு நேராய்த் திறந்து வைத்து, தினமும் மூன்று வேளை ஜெபித்தார். நெகேமியா, எருசலேமின் மதில்களை சீர்ப்படுத்தி மீண்டும் கட்டியெழுப்பினார்.

ஆனால், அந்தோ எருசலேம் பட்டணம் இயேசுவின் நாட்களில் சீரையும், சிறப்பையும் இழந்து கிடந்தது. பாரம்பரியங்களை பின்பற்றப்போய் ஆன்மீக காரியங்களில் பின்வாங்கியது. பரிசேயர், சதுசேயர் ஆகியோர் போலியான பக்தியைக் காண்பித்து, மாய்மாலமாக வாழ்ந்துகொண்டிருந்தார்கள். எருசலேம் வீதியிலே ஏராளமான தீர்க்கதரிசிகள் கல்லெறிந்து கொல்லப்பட்டார்கள். இயேசு எருசலேமைப் பார்த்தபோது அதற்காக கண்ணீர் விட்டு அழுதார். “உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும்” (லூக். 19:42) என்று சொல்லி புலம்பினார்.

தற்சமயம் எருசலேமின் நிலையென்ன? அது ஒரு பெரிய வியாபாரஸ்தலமும், பல நாட்டுப் பயணிகள் சுற்றுலாவிற்கு வரும் இடமாகவுமிருக்கிறது. புண்ணிய பூமியாகக் கருதி மக்கள் கூட்டம் உலகெங்குமிருந்து திரண்டு வருகிறது. ஒலிவ மரத்தின் பட்டையாலும், இலைகளாலும் செய்யப்பட்ட சிலுவை மற்றும் ஜெப மாலை போன்றவற்றுடன், யோர்தான் நதி மற்றும் சமாரியா கிணற்றிலிருந்தும் எடுக்கப்பட்டதாகச் சொல்லப்படும் தண்ணீரும் விற்கப்படுகின்றன. இஸ்ரவேல் தேசத்தின் பூக்கள் ஒட்டப்பட்ட படங்களும், பல இடங்களின் படங்களும் விற்கப்படுகின்றன. எருசலேமிற்காக அனுதினமும் ஜெபிப்பீர்களா?

மேசியா வருகையில் எருசலேம் பரிசுத்தமாக்கப்படும், சமாதானம் நிலவும் என்பது யூதர்களின் நம்பிக்கை. அதுவே அவர்கள் இன்றும் செய்யும் ஜெபமாயிருக்கிறது. தீர்க்கதரிசிகள் கண்ட தரிசனமும் அதுவே. புதிய வானம், புதிய பூமியில் எருசலேம் புதிதாக்கப்படும். தேவபிள்ளைகளே, நீங்கள் அந்த பரம எருசலேமை வாஞ்சையுடன் எதிர்நோக்குவீர்களாக!

நினைவிற்கு:- “உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும், உன் அரமனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக” (சங். 122:7).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.