No products in the cart.
ஆகஸ்ட் 31 – ஆலயத்தை நோக்குவேன்!
“நான் உமது கண்களுக்கு எதிரே இராதபடிக்குத் தள்ளப்பட்டேன்; ஆகிலும் இன்னமும் உம்முடைய பரிசுத்த ஆலயத்தை நோக்குவேன் என்றேன்” (யோனா 2:4).
தீர்க்கதரிசியாகிய யோனா மீன் வயிற்றிலிருந்து கர்த்தரை நோக்கிப் பார்த்து செய்த ஜெபம்தான் இது! “நான் இன்னமும் உம்முடைய பரிசுத்த ஆலயத்தை நோக்குவேன்” என்று தீர்மானம் பண்ணினார்.
நினிவேக்கு செல்லவேண்டிய தீர்க்கதரிசி திசை மாறி தர்ஷீசுக்கு சென்றபோது, தேவனே அவரை விழுங்கும்படி ஒரு மீனை ஆயத்தம் பண்ணியிருந்தார். அது சாதாரண மீன் அல்ல, கர்த்தரால் ஒழுங்கு செய்யப்பட்ட பெரிய மீன். அது தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றத் தவறவில்லை. தீர்க்கதரிசியாகிய யோனாவை மூன்று நாட்கள் இராப்பகல் தன் வயிற்றிலே அடக்கி வைத்திருந்தது.
மூன்று நாட்களுக்கு பிறகுதான் யோனாவுக்கு கர்த்தரை நோக்கிப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் உதித்தது. சமுத்திரத்தின் மைய ஆழத்திற்குள் மீன் சென்றபோது, நீரோட்டம் தன்னைச் சூழ்ந்ததையும், வெள்ளங்களும் அலைகளும் தன்மேல் புரண்டதையும் அவர் உணர்ந்தார். அந்த சூழ்நிலையிலே, யோனா கர்த்தரை நோக்கிப் பார்த்தபோது, கர்த்தர் யோனாவுக்கு செவிக்கொடுக்க உண்மையுள்ளவராயிருந்தார்.
தேவபிள்ளைகளே, இன்று நீங்கள் கர்த்தரை விட்டு பின்வாங்கிப் போனீர்களோ? தேவசித்தத்தை நிறைவேற்றவில்லையோ? கர்த்தருடைய ஊழியத்திற்கு ஒப்புக்கொடுத்தும், முழு இருதயத்தோடும் ஊழியம் செய்யவில்லையோ? அதனால் பல துக்கங்கள் உங்களைத் தொடருகிறதோ? இந்த சூழ்நிலையிலும் கர்த்தரை நோக்கிப்பாருங்கள். உங்கள் கண்கள் கர்த்தருடைய பரிசுத்த ஆலயத்தையே நோக்கட்டும்.
யோனாவுக்கு மீண்டும் ஒரு வாழ்வையும், வல்லமையான ஊழியத்தையும் தந்து கனப்படுத்தியவர், நிச்சயமாகவே உங்களுடைய ஜெபத்தையும் கேட்பார். யோனாவுக்கு புதிய வாழ்வைத் தந்தவர், உங்கள் வாழ்க்கையிலும் எல்லாவற்றையும் புதிதாக்குவார். நீங்கள் கர்த்தரை நோக்கிப் பார்ப்பது மட்டுமல்ல, அவரை நோக்கிக் கூப்பிடுங்கள். ஊக்கமாய் ஜெபியுங்கள். நம் ஆண்டவரை எங்கிருந்து வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நோக்கிப் பார்க்கலாம். நோக்கிக் கூப்பிடலாம். எப்பொழுது வேண்டுமானாலும் அவருடைய கிருபாசனத்தண்டை கிட்டிச் சேரலாம்.
மீனின் வயிற்றில் இருந்தாலும் சரி, சிங்கங்களின் மத்தியில் போடப்பட்டாலும் சரி, அக்கினி ஜுவாலையின் நடுவிலே உலாவ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும் சரி, எல்லா சூழ்நிலைகளிலும் அவருடைய பொன் முகத்தை நோக்கிப் பார்க்கலாம். நான் இன்னமும் உம்முடைய பரிசுத்த ஆலயத்தை நோக்குவேன் என்று யோனா தீர்மானத்தோடு உரைக்கிறதைப் பாருங்கள்.
தேவபிள்ளைகளே, நீங்கள் அவ்விதமாய் தீர்மானம் செய்வீர்களா? உங்கள் பிரச்சனை சிறியதோ, பெரியதோ, உங்கள் போராட்டம் மிதமானதோ, கொடிதானதோ, எந்த சூழ்நிலையிலும் கர்த்தரை நோக்கிப்பாருங்கள். அவரையே நோக்கிக் கூப்பிடுங்கள்.
நினைவிற்கு:- “என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்” (எரே. 33:3).