No products in the cart.
ஆகஸ்ட் 25 – விலையேறப்பெற்ற கல்!
“விலையேறப்பெற்றதுமாயிருக்கிற ஜீவனுள்ள கல்லாகிய அவரிடத்தில் சேர்ந்தவர்களாகிய நீங்களும், … பரிசுத்த ஆசாரியக் கூட்டமாகவும் கட்டப்பட்டு வருகிறீர்கள்” (1 பேதுரு 2:4,5).
“விலையேறப்பெற்ற கல்” என்று சொல்லும்போது, ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் வைரங்களும், வைடூரியங்களும், மாணிக்கக் கற்களுமே நினைவிற்கு வரக்கூடும். ஆனால் இவை ஒன்றுக்கும் ஜீவன் இல்லை. உயிரற்ற இந்த கற்கள் விலையேறப்பெற்றவை அல்ல. அப். பவுல், ஜீவனுள்ள விலையேறப்பெற்ற கல்லைக் குறித்து இங்கு பேசுகிறார். ஆம், அவர்தான் மேசியா, திடமான அஸ்திபாரம் உள்ள மூலைக்கல் (ஏசா. 28:16). யார், யார் அவரை நேசித்து, விசுவாசித்து, ஏற்றுக்கொள்ளுகிறார்களோ, அவர்களுடைய வாழ்க்கைக்கு அவர் அஸ்திபாரமான விலையேறப்பெற்ற கல்லாக விளங்குகிறார்.
இயேசுகிறிஸ்துவை பரிசேயர்களும், சதுசேயர்களும் தள்ளிவிட்டார்கள். யூதர்கள் அவரை சிலுவையில் அறையும் என்று கூக்குரலிட்டார்கள். அன்றைக்கிருந்த வேதபாரகரும், ஆசாரியரும் அவரை ரோம அரசாங்கத்திடம் ஒப்படைத்தார்கள். வீடு கட்டுகிறவர்களால் ஆகாது என்று தள்ளப்பட்ட கல்லாய் அவர் இருந்தாலும், அவரே உங்களுடைய விசுவாசத்திற்கு அஸ்திபாரமான கல்லாகவும், மூலைக்குத் தலைக்கல்லாகவும் விளங்குகிறார். அவர்மேல் நீங்களும் தேவனுடைய வாசஸ்தலமாக கட்டப்பட்டு வருகிறீர்கள்.
தேவபிள்ளைகளே, உங்களது வாழ்க்கையின் அஸ்திபாரமாக இயேசுகிறிஸ்துவையே கொள்ளுங்கள். நீங்கள் விலையேறப்பெற்ற கல்லாகிய அவரோடு இணைந்து கட்டப்படும்போது, விலையேறப்பெற்ற கற்களாக மாறுவீர்கள். இந்த வாழ்க்கை உலகத்தோடு முடிந்துவிடுகிற வாழ்க்கை அல்ல. அது நித்திய நித்தியமான வாழ்க்கையாக தொடரும். நீங்கள் விலையேறப்பெற்ற கற்களாய் தேவ சமுகத்திலே என்றென்றைக்கும் நிலைத்திருப்பீர்கள்.
வெளிப்படுத்தின விசேஷத்திலே, தேவனுடைய நகரமாகிய பரம எருசலேம் எவ்விதமாக கட்டப்பட்டிருந்தது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. வேதம் சொல்லுகிறது, “நகரத்து மதில்களின் அஸ்திபாரங்கள் சகலவித இரத்தினங்களினாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன” (வெளி. 21:19) “அதின் பிரகாசம் மிகவும் விலையுயர்ந்த இரத்தினக் கல்லைப் போலவும், பளிங்கினொளியுள்ள வச்சிரக்கல்லைப் போலவும் இருந்தது” (வெளி.21:11). அந்த வாசல்களிலுள்ள விலையேறப்பெற்ற கற்கள் எல்லாம் தேவனுடைய பரிசுத்தவான்களேயாவார்கள்.
சாலொமோன் தேவாலயத்தைக் கட்டியபோது, கற்களை வெட்டியெடுக்கும் இடத்திலேயே அழகாக செதுக்கி, உடைத்து, நொறுக்கி, சம அளவு உள்ளவைகளாக்கிக் கொண்டுவந்து அடுக்கினான். அதுபோலவே பரலோகத்தில் நீங்கள் ஜீவனுள்ள கற்களாய் விளங்குவதற்காக கர்த்தர் இந்த உலகத்திலே உங்களை உபத்திரவங்களின் வழியாகவும், பாடுகளின் வழியாகவும் நடத்திச் சென்று, பூரண பரிசுத்தமுள்ளவர்களாக்கி, பணி தீர்க்கப்பட்ட கற்களாக சீயோனிலே, புதிய எருசலேமிலே வைத்து கட்டி எழுப்புகிறார்.
நினைவிற்கு:- “எனக்கு அளிக்கப்பட்ட தேவகிருபையின்படியே புத்தியுள்ள சிற்பாசாரியைப் போல அஸ்திபாரம் போட்டேன். போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது” (1 கொரி. 3:10,11).