No products in the cart.
ஆகஸ்ட் 20 – பிரியமான ஏனோக்கு!
“ஏனோக்கு தேவனுக்குப் பிரியமானவனென்று அவன் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்னமே சாட்சி பெற்றான்” (எபி. 11:5).
ஏனோக்கு, தேவனைப் பிரியப்படுத்துவதையே தன் வாழ்க்கையின் குறிக்கோளாகத் தெரிந்து கொண்டார். “எதைச் செய்தால் தேவன் என்மேல் பிரியப்படுவார்? ஆண்டவரை எப்படி மகிழ்ச்சிப்படுத்தலாம்? எப்படி அவருக்குப் பிரியமானபடி ஜீவிக்கலாம்?” என்பவையே அதற்கான கேள்விகளாக அவருக்குள் இருந்தன.
ஏனோக்கு தேவனைப் பிரியப்படுத்த கையாண்ட வழி விசுவாசம் என்பதாகும். ஆகவேதான் அந்த வசனத்தின் ஆரம்பமே (எபி. 11:5) “விசுவாசத்தினாலே ஏனோக்கு” என்று எழுதப்பட்டுள்ளது. ஒரு நாள் விசுவாசத்தோடு ஏனோக்கு கர்த்தருடைய கரத்தைப் பிடித்தார். கர்த்தர்தான் விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிறார் (எபி. 12:1). ஆகவேதான், தேவனுடைய கரத்தை விசுவாசத்தோடு பிடித்த ஏனோக்குக்குள் ஒரு பலத்த விசுவாசம் எழுந்தது. ‘இந்த தேவன் என்றென்றுமுள்ள சதாகாலமும் எனது தேவன். மரணத்தைக் காணாதபடி என்னை நடத்துவார்’ என்பதே அந்த விசுவாசம்.
ஏனோக்கின் விசுவாசமே அவரது உயர்வுக்குக் காரணமாய் அமைந்தது. வேதம் சொல்லுகிறது, “விசுவாசமே உலகத்தை ஜெயிக்கும் ஜெயம்” (1 யோவான் 5:4). “விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்” (ரோமர் 1:17). விசுவாசமே ஒருவனை இரட்சிப்பிற்குள் வழிநடத்துகிறது (மத். 9:22, மத். 10:22).
ஏனோக்கு விசுவாசத்தினாலே கர்த்தரோடுகூட நடந்தார். “வானாதி வானங்களை உண்டு பண்ணின தேவன் மனிதரோடு சரிசமமாய் நடக்கக்கூடியவர்; மனுஷரின் மத்தியில் வாசம் பண்ணுகிறவர்” என்ற நம்பிக்கையே பெரிய விசுவாசம் அல்லவா? அப்படி தேவனோடு நடந்த ஏனோக்கு அதன் மூலம் தேவனிடத்திலிருந்து பிரியத்தையும், கிருபையையும் பெற்றுக் கொண்டார்.
கர்த்தரோடு நடக்க நடக்க விசுவாசம் பெருகுகிறது. கர்த்தரோடு நேரடியாக பேசி சம்பாஷிப்பது எத்தனை மகிமையான அனுபவம்! அந்த விசுவாசத்தினாலே ஏனோக்கு கர்த்தருக்குப் பிரியமானவராகக் காணப்பட்டது மட்டுமல்ல, மரணத்தையும் காணாதபடி எடுத்துக்கொள்ளப்பட்டார்.
கர்த்தர் மேல் நீங்கள் பூரண விசுவாசம் வைத்தால், நிச்சயமாகவே கர்த்தருக்குப் பிரியமானவர்களாய் காணப்படுவீர்கள். கர்த்தரும் உங்களைக் குறித்து சாட்சி கொடுப்பார். மோசேயைக் குறித்து, “என் தாசனாகிய மோசேயோ என் வீட்டில் எங்கும் உண்மையுள்ளவன்” (எண். 12:7) என்றும், தாவீதைக் குறித்து, “என் இருதயத்திற்கு ஏற்றவனாகக் கண்டேன்” (அப். 13:22) என்றும், நாத்தான்வேலைக் குறித்து, “கபடற்ற உத்தம இஸ்ரவேலன்” (யோவான் 1:47) என்றும், யோபுவைக் குறித்து, “உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப் போல பூமியில் ஒருவனும் இல்லை” (யோபு 1:8) என்றும் சாட்சி கொடுத்தார். தேவபிள்ளைகளே, உங்களைக் குறித்தும் கர்த்தர் அவ்விதமாகவே சாட்சி கொடுக்க வேண்டுமல்லவா?
நினைவிற்கு:- “இதோ, நான் ஆதரிக்கிற என் தாசன், நான் தெரிந்துகொண்டவரும், என் ஆத்துமாவுக்குப் பிரியமானவரும் இவரே; என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணினேன்; அவர் புறஜாதிகளுக்கு நியாயத்தை வெளிப்படுத்துவார்” (ஏசா. 42:1).