No products in the cart.
ஆகஸ்ட் 18 – கர்த்தருக்குப் பிரியமானதை செய்யுங்கள்!
“கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்துப் பாருங்கள்” (எபே. 5:10).
முதலாவதாக, நீங்கள் கர்த்தருக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன் என்று தீர்மானிக்க வேண்டும். இரண்டாவதாக, கர்த்தாவே உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும் என்று ஜெபிக்க வேண்டும். மட்டுமல்ல, கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்துப் பார்க்க வேண்டும்.
தன் வாலிப வயதில் இரட்சிக்கப்பட்ட ஒரு சகோதரி, கர்த்தர் மேல் அளவற்ற அன்பு கொண்டிருந்தார். “ஆண்டவரே நான் எப்போதும் உமக்குப் பிரியமானதையே செய்வேன்” என்ற உறுதியான தீர்மானம் எடுத்திருந்தாள். அவளுடைய திருமண நேரம் வந்தது. இரட்சிக்கபடாத அவளுடைய பெற்றோர், புறஜாதி மார்க்கத்திலுள்ள ஒரு வாலிபனுக்கு அவளைத் திருமணம் செய்து கொடுத்து விட்டார்கள்.
திருமணமான புதிதில் அவர் மனைவியை அன்போடு சினிமாவுக்கு அழைத்தார். அவளுக்கு கொஞ்சமும் அதில் விருப்பமில்லை. கர்த்தருக்குப் பிரியமானதை மட்டுமே செய்யத் தீர்மானித்திருந்த அந்த சகோதரிக்கு இது ஒரு பிரச்சனையாகவே இருந்தது.
ஆகவே அவள் தனிமையாக அறைக்குள் சென்று கர்த்தரை நோக்கி ஊக்கமாய் ஜெபித்தாள். “ஆண்டவரே உமக்குப் பிரியமானது இன்னதென்று எனக்குப் போதித்தருளும்” என்று ஜெபித்து, கர்த்தருடைய ஆலோசனையைப் பெற்றுக்கொண்டாள். பின்பு கணவரோடு சந்தோஷமாக சினிமா தியேட்டருக்குச் சென்றாள்.
அங்கே படம் ஆரம்பித்தது. கொஞ்ச நேரம் ஆனவுடன் கணவன், மனைவி பக்கமாய் திரும்பிப் பார்த்தான். அவளோ கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருந்தாள். பத்து நிமிடங்கள் கழிந்த பிறகு மெதுவாய் மனைவி பக்கமாய் மீண்டும் திரும்பினபோது, அவள் கண்களைத் திறக்கவில்லை. வாய் “ஸ்தோத்திரம் இயேசுவே” என்று சொல்லிக் கொண்டேயிருந்தது. இன்னும் பத்து நிமிடம் கழித்து மீண்டும் திரும்பிப் பார்த்தான். அவள் மென்மையாய் அந்நிய பாஷையிலே பேசிக் கொண்டிருந்தாள்.
அவன் தன் மனைவிக்கு என்ன ஆயிற்றோ என்று பயந்து அவளை வெளியே அழைத்துக் கொண்டு வந்தான். “உனக்கு என்ன நேரிட்டது? நீ ஏன் சந்தோஷமாய் படம் பார்க்கவில்லை? ஏதேதோ உளறிக் கொண்டிருக்கிறாயே” என்னவென்று கேட்டான். அவள் புன்முறுவலுடன் கணவனை நோக்கிப் பார்த்து, “இந்த சினிமா தராத பெரிய சந்தோஷம் ஒன்று உண்டு. அதுவே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தருகிற சந்தோஷம்” என்று சொல்லி தான் இரட்சிக்கப்பட்டதன் சாட்சியை கணவருக்கு எடுத்துக் கூறினாள்.
மனைவியுடைய வாழ்க்கையின் சாட்சி அவரை மிகவும் ஆழமாய் தொட்டது. கர்த்தர் அன்றைக்கு அவளது கணவனையும் இரட்சித்தார். சில நாட்களுக்குள்ளாய் குடும்பமாய் அவர்கள் முழு நேர ஊழியத்திற்கு வந்தார்கள். தேவபிள்ளைகளே, கர்த்தருக்குப் பிரியமானதை நீங்கள் செய்யும்போது, புறஜாதியாரை நிச்சயமாகவே ஆதாயப்படுத்திக்கொள்ளுவீர்கள்.
நினைவிற்கு:- “நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்” (ரோமர் 12:2).