AppamAppam - Tamil

ஆகஸ்ட் 14 – கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சி!

“மனமகிழ்ச்சியை உண்டாக்கும் என் பிரியமே! நீ எவ்வளவு ரூபவதி, நீ எவ்வளவு இன்பமுள்ளவள்” (உன். 7:6).

இயேசு கிறிஸ்து உங்களுடைய ஆத்தும நேசராயிருக்கிறார். உங்கள் உள்ளம் கவர்ந்த ஆத்தும மணவாளனாகவும் இருக்கிறார். அவர் தம்முடைய சுய இரத்தத்தினாலே உங்களைத் தமக்கு மணவாட்டியாகத் தெரிந்தெடுத்திருக்கிறார்.

நீங்கள் அவருடைய சரீரத்தின் அவயவங்களாகவும், அவருடைய மாம்சத்திற்கும் அவருடைய எலும்புகளுக்கும் உரியவர்களாகவும் இருக்கிறீர்கள். இந்த இரகசியம் பெரியது; நான் கிறிஸ்துவைப் பற்றியும், சபையைப்பற்றியும் சொல்லுகிறேன் என்று அப். பவுல் எழுதுகிறார் (எபே. 5:30,32).

கர்த்தர் உங்களில் அன்புகூருகிறது மாத்திரமல்ல, உங்களை அவர் அன்போடுகூட “மனமகிழ்ச்சியை உண்டாக்கும் என் பிரியமே” என்று அழைக்கிறார். உன்னதப்பாட்டை வாசிக்கும்போது, அவர் என்னென்ன வார்த்தைகளினால் உங்களை பாசத்தோடு அழைத்து பரவசமூட்டுகிறார் என்பதை அறியலாம். “என் பிரியமே, என் ரூபவதியே, என் புறாவே, என் உத்தமியே, என் மணவாளியே, ராஜகுமாரத்தியே” என்று கர்த்தர் அன்போடு அழைக்கிறார். இப்படியெல்லாம் தேவன் அழைப்பதற்கு மணவாட்டியில் கண்ட மேன்மை என்ன? அவள் அவருக்கு மனமகிழ்ச்சியை உண்டாக்குவதுதான்.!

நீங்கள் கர்த்தருக்கு எப்போதும் மனமகிழ்ச்சியை உண்டாக்குகிறவர்களாய் விளங்க வேண்டும். கிறிஸ்துவை சந்தோஷப்படுத்த வேண்டும். நீங்கள் அவருக்குப் பிரியமுள்ளவர்களாய் நடந்துகொள்ள வேண்டும். வேதம் சொல்லுகிறது: “கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள் செய்வார்” (சங். 37:4).

ஒரு சகோதரன் தன் தாயின் மேல் அளவில்லா அன்பு வைத்திருந்தார். தூர இடத்திலுள்ள தன் தாயை அடிக்கடி போய் பார்ப்பார். தாய் கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுப்பார். மாதந்தோறும் தாய்க்கு பணம் அனுப்புவார். அப்போது ஒரு சகோதரன் அவரைப் பார்த்து, சகோதரனே, உங்களுடைய தாயின்மேல் இவ்வளவு அன்பு வைத்திருக்கிறதின் காரணம் என்ன என்று கேட்டார். அதற்கு அவர் ‘என் வாலிப பிராயத்திலே என் தாயை மிகவும் துக்கப்படுத்தியிருக்கிறேன். பல முறை கண்ணீர் வடிக்க வைத்திருக்கிறேன். பலமுறை அடிக்கவும் செய்திருக்கிறேன். பல முறை அவர்கள் எனக்காக தலையில் அடித்துக் கொண்டு அழுதிருக்கிறார்கள். ஆயினும் அவர்கள் என்னை நேசித்து, எனக்காக ஜெபித்ததினால், கர்த்தர் என்னை இரட்சித்தார், அபிஷேகித்தார், ஊழியக்காரனாய் மாற்றினார். ஆகவே தாயின் துக்கத்தின் வருஷங்களை நினைவுகூர்ந்து அதற்குப் பிராயச்சித்தமாய் என் தாயை மகிழ்ச்சியாக்கத் தீர்மானித்தேன்’ என்றார்.

தேவபிள்ளைகளே, நீங்கள் கர்த்தரை மகிழ்ச்சிப்படுத்த வேண்டியது எவ்வளவு அவசியம்! அவர் எவ்வளவு காலமாய் உங்களை துக்கத்தோடு தேடி அலைந்தார்! நீங்கள் அவரை அசட்டை செய்து வெறுக்கிற வேளையிலும்கூட, உங்களைத் தேடி வந்தார். அவரை மகிழ்ச்சிப்படுத்த வேண்டியது எவ்வளவு அவசியம்! தேவபிள்ளைகளே, எல்லா சூழ்நிலைகளிலும் நீங்கள் கர்த்தருக்குள் மனமகிழ்ச்சியாய் இருக்க வேண்டும்.

நினைவிற்கு:- “மனமகிழ்ச்சி நல்ல ஔஷதம்; முறிந்த ஆவியோ எலும்புகளை உலரப் பண்ணும்” (நீதி. 17:22).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.