AppamAppam - Tamil

ஆகஸ்ட் 13 – துதியில் சந்தோஷம்!

“நீதிமான்களே, கர்த்தருக்குள் களிகூருங்கள்; துதி செய்வது செம்மையானவர்களுக்குத் தகும்” (சங். 33:1).

கவலை நோயை வரவழைக்கும், வாழ்க்கையைச் சிதைக்கும், ஆயுளைக் குறுகச் செய்யும் என்றால், மகிழ்ச்சி அதற்கு நல்ல ஔஷதமாக இருக்கத்தானே செய்யும்? இருதயத்தின் மகிழ்ச்சி நோய்களை நீக்கும், முகக்களையை உண்டு பண்ணும். ஆயுளைப் பெருகப்பண்ணும்.

ஒரு மருத்துவர், புற்றுநோய் (Cancer) ஏற்படுவதின் காரணத்தை ஆராய்ந்துவிட்டு, பெரும்பாலான மக்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட பயங்கரமான தோல்வி, வேதனை, ஏமாற்றங்கள், கவலை இவைகளே அதற்கு மூல காரணமாயிருக்கிறது என்றும், திடீரென்று ஏற்படும் பிரிவோ, கணவன் அல்லது மனைவி செய்த துரோகமோ, வியாபாரத்தில் எதிர்பாராதபடி ஏற்பட்ட பெரு நஷ்டமோ எதுவாயிருந்தாலும் அதன் மூலம் ஏற்படும் தாங்கொண்ணா கவலை நோய்க்கிருமிகளை உருவாக்குகிறது என்றும், அதன்பிறகு ஆறு முதல் பதினெட்டு மாதங்களுக்குள் அது புற்றுநோயாய் மாறிவிடுகிறது என்றும் தம் ஆராய்ச்சியில் குறிப்பிடுகிறார்.

உண்மையான மகிழ்ச்சி, கிறிஸ்துவை ஆடிப்பாடித் துதிக்கும் துதியிலே இருக்கிறது. உள்ளத்தின் ஆழத்திலிருந்து நீங்கள் இனிய நேசரைத் துதித்து மகிழும்போது, கவலைகளெல்லாம் ஓடி மறைகின்றன. இனிய தெய்வீக பிரசன்னம் உங்களை அரவணைத்து மூடிக்கொள்ளுகிறது. அவரது செட்டைகளின் கீழ் ஆரோக்கியம் இருக்கும் அல்லவா! (மல். 4:2).

அதிகாலை எழுந்ததும் சந்தோஷத்தோடும், புன்னகையோடும் கர்த்தரை மனதார துதியுங்கள். துதியின் மத்தியிலே வாசம் பண்ணுகிறவர் தம்முடைய பிரசன்னத்தால் உங்களை நிரப்பட்டும். “இது கர்த்தர் உண்டுபண்ணின நாள்; இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம்” (சங். 118:24) என்று ஒவ்வொருநாளும் வாய்விட்டுச் சொல்லுங்கள். அப்பொழுது அந்த நாள் முழுவதும் மகிழ்ச்சியாய் இருப்பீர்கள்.

மகிழ்ச்சியோடும், சிரித்த முகத்தோடும் கர்த்தருக்கு ஆராதனை செய்து, அவரைப் ஆடிப்பாடித் துதியுங்கள். வேதம் சொல்லுகிறது, “நம்முடைய வாய் நகைப்பினாலும், நம்முடைய நாவு ஆனந்த சத்தத்தினாலும் நிறைந்திருந்தது; அப்பொழுது; கர்த்தர் இவர்களுக்குப் பெரிய காரியங்களைச் செய்தார் என்று புறஜாதிகளுக்குள்ளே சொல்லிக் கொண்டார்கள்” (சங். 126:2).

“கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன்” (நெகே. 8:10). ஆகவே, பெலனான கிறிஸ்து, உங்கள் கரங்களைப் பிடித்திருப்பதாக விசுவாசியுங்கள். “என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ் செய்ய எனக்குப் பெலனுண்டு” (பிலி. 4:13) என்று திரும்பத் திரும்ப உற்சாகமாய் சொல்லுங்கள்.

தேவபிள்ளைகளே, நீங்கள் கைகளை உயர்த்தி கர்த்தரைத் துதியுங்கள். “உங்கள் கைகளைப் பரிசுத்த ஸ்தலத்திற்கு நேராக எடுத்து, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்” (சங். 134:2). இதுவே மகிழ்ச்சியின் வழி. சந்தோஷத்தின் வழி. நீங்கள் எப்பொழுதும் மனமகிழ்ச்சியாயிருப்பதையே கர்த்தர் விரும்புகிறார்; எதிர்பார்க்கிறார்.

நினைவிற்கு:- “பூமியின் குடிகளே, நீங்களெல்லாரும் கர்த்தரை நோக்கி ஆனந்தமாய் ஆர்ப்பரியுங்கள்; முழக்கமிட்டுக் கெம்பீரமாய்ப் பாடுங்கள்” (சங். 98:4).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.