No products in the cart.
ஆகஸ்ட் 12 – கொடுத்தலில் சந்தோஷம்!
“இப்படி மனப்பூர்வமாய்க் கொடுத்ததற்காக ஜனங்கள் சந்தோஷப்பட்டார்கள்; உத்தம இருதயத்தோடே உற்சாகமாய்க் கர்த்தருக்குக் கொடுத்தார்கள்; தாவீது ராஜாவும் மிகவும் சந்தோஷப்பட்டான்” (1 நாளா. 29:9).
கொடுத்தலில் எப்பொழுதும் ஒரு சந்தோஷமுண்டு. அதுவும் கர்த்தருக்கு கொடுப்பதில் இன்னும் ஆயிரம் மடங்கு சந்தோஷமுண்டு. ஆகவே, நீங்கள் கொடுக்கும்போது மனப்பூர்வமாகவும், உற்சாகமாகவும் கொடுப்பீர்களாக.
ஒரு நாள் என் தகப்பனார், மத்தியான நேரத்தில் ஒரு வீதி வழியாக நடந்து போய்க் கொண்டிருந்தபோது, எதிரிலே ஒரு குருவானவர் நடந்து வந்தார். என் தகப்பனாருக்கு அவரைத் தெரியாது. அவர் அருகில் வந்ததும், இந்தப் பக்கங்களில் ஏதாவது ஹோட்டல் இருந்தால் சொல்லுங்கள். எளிய ஹோட்டலாக இருக்கட்டும்” என்று கேட்டார்.
அவர் கேட்டதைப் பார்த்ததும் அவரிடத்தில் போதிய பணம் இல்லையென்பதை என் தகப்பனார் உணர்ந்துக்கொண்டார். ஆகவே, அவருடைய பாக்கெட்டிலிருந்த அவ்வளவு பணத்தையும், அந்த குருவானவருடைய கரத்தில் எடுத்துக் கொடுத்து, ‘நான் ஒரு கர்த்தருடைய ஊழியக்காரன். நீங்களும் ஒரு கர்த்தருடைய ஊழியக்காரன். நீங்கள் நிறைவாய் திருப்தியாய் சாப்பிட வேண்டுமென்று விரும்புகிறேன்’ என்று சொன்னார். அவர் முதலில் வாங்க மறுத்தாலும், பின்பு மிகுந்த நன்றியோடு அதை ஏற்றுக்கொண்டார்.
அவர் பணத்தைப் பெற்றுக்கொண்டுபோன கொஞ்சம் நேரத்திற்கெல்லாம் என் தகப்பனாரின் இருதயம் மகிழ்ச்சியால் நிரம்ப ஆரம்பித்தது. அன்று ஜெபவேளை முழுவதும் அவர் அதுவரை அனுபவித்திராத அளவிற்கு கர்த்தருடைய பிரசன்னத்தை அதிகமாக அனுபவித்தார். கர்த்தருடைய ஊழியக்காரர்களுக்கு கொடுக்கும்போது, உண்மையாகவே கர்த்தருடைய இருதயம் மகிழ்ந்து களிகூருகிறது.
கர்த்தருக்குக் கொடுப்பதே பூமியில் உங்களுக்குக் கிடைக்கிற பெரிய பாக்கியம். இயேசு சொன்னார், “வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம்” (அப். 20:35). மட்டுமல்ல, அது சுகந்த வாசனையானது. பிலிப்பியர்கள் அப்போஸ்தலனாகிய பவுலினுடைய ஊழியத்திற்கு தங்களால் இயன்றதைக் கொடுத்து ஊக்குவித்தார்கள். அதைப் பெற்றுக் கொண்டபோது, அப்போஸ்தலனாகிய பவுலுக்கு மிகுந்த சந்தோஷமாக இருந்தது.
ஆகவேதான் அவர், “எல்லாம் எனக்குக் கிடைத்தது, பரிபூரணமும் உண்டாயிருக்கிறது; உங்களால் அனுப்பப்பட்டவைகளைச் சுகந்த வாசனையும் தேவனுக்குப் பிரியமான உகந்த பலியுமாக எப்பாப்பிரோதீத்துவின் கையில் வரப் பற்றிக்கொண்டபடியால் நான் திருப்தியடைந்திருக்கிறேன்” (பிலி. 4:18) என்று மகிழ்ச்சியாய் குறிப்பிடுகிறார்
தேவபிள்ளைகளே, கர்த்தருக்கு உற்சாகமாக் கொடுங்கள். அவர் வானத்தின் பலகணிகளைத் திறப்பார். வானத்தின் பலகணிகளைத் திறந்து உங்களுக்கு கொடுப்பது என்பது ஆயிரம் மடங்கான ஆசீர்வாதம் ஆகும். மட்டுமல்ல, உலகம் கொடுக்கவும், எடுக்கவும் கூடாததுமான பெரிய சந்தோஷமுமாகும்.
நினைவிற்கு:- “பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை” (மத். 6:20).