AppamAppam - Tamil

ஆகஸ்ட் 10 – ஞானஸ்நானத்தினால் சந்தோஷம்!

“அவர்கள் தண்ணீரிலிருந்து கரையேறினபொழுது, கர்த்தருடைய ஆவியானவர் பிலிப்பைக் கொண்டு போய்விட்டார். மந்திரி அப்புறம் அவனைக் காணாமல், சந்தோஷத்தோடே தன் வழியே போனான்” (அப். 8:39).

எத்தியோப்பியாவிலிருந்து எருசலேமுக்கு பணிந்து கொள்ள வந்த ஒரு மந்திரியைக் குறித்து இங்கே எழுதப்பட்டிருக்கிறது. அந்த மந்திரிக்கு ஏற்பட்ட சந்தோஷத்தின் இரகசியம் என்ன? ஆம், அது ஞானஸ்நானம் பெற்றதினால் உண்டான சந்தோஷம். எருசலேமுக்கு சென்றபோது கிடைக்காத, அங்கு தொழுது கொண்டபோது கிடைக்காத ஒரு சந்தோஷம் ஞானஸ்நானத்தால் அவருக்குக் கிடைத்தது.

யோவான்ஸ்நானன், பாவ மன்னிப்பிற்காக மாத்திரமே ஞானஸ்நானம் கொடுத்தார். பாவத்தை அறிக்கையிட்ட ஜனங்கள், பழைய அருவருப்பான பாவ வாழ்க்கையை விட்டுவிட்டு கர்த்தருக்குள் புதிய வாழ்க்கையை ஆரம்பித்தார்கள்.

ஆனால், இயேசு ஞானஸ்நானம் பெற வந்தபோது, யோவானிடத்தில் ஞானஸ்நானத்தின் சந்தோஷத்திற்கான அடுத்த காரணத்தை விளக்கிச் சொன்னார். அது பாவ மன்னிப்பிற்காக மட்டுமல்ல, தேவனுடைய நீதியை நிறைவேற்றுவதற்காகவும் என்று விளக்கினார். இயேசு ஞானஸ்நானம் பெற்றபோது அவருக்காக வானம் திறக்கப்பட்டது எவ்வளவு பெரிய சந்தோஷம்! ‘இவர் என் நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன்’ என்று பிதாவானவர் சொன்னது இன்னும் எத்தனை பெரிய சந்தோஷம்! ஆவியானவர் புறாவைப்போல் இறங்கி அவர்மேல் வந்து தங்கியது மகிமையான சந்தோஷமல்லவா?

இயேசுவின் சிலுவைப் பாடு மரணங்களுக்குப் பிறகு ஞானஸ்நானத்தின் சந்தோஷம் இன்னும் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாயிற்று. ஞானஸ்நானம் பெறுகிறவன், தன்னை கிறிஸ்துவின் பாடு, மரணம், அடக்கம் பண்ணுதலோடு இணைத்துக் கொள்ளுகிறான். ஞானஸ்நானம் பெற தண்ணீரிலே நிற்கும்போது, அவன் கிறிஸ்து தனக்காக மரித்ததை நினைவுகூர்ந்து, தன்னை அவரோடு இணைத்துக் கொண்டு, “கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்” (கலா. 2:20) என்று சந்தோஷமாய் அறிக்கையிடுவது எத்தனை மகிழ்ச்சியானது!

தண்ணீரில் மூழ்குவது இயேசு கிறிஸ்துவினுடைய மரணத்திற்கு அடையாளமானதாகும். வேதம் சொல்லுகிறது, “அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம்” (ரோம. 6:5). மட்டுமல்ல, ஞானஸ்நானத்தில் கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த வல்லமையோடு நீங்களும் இணைக்கப்படுகிறீர்கள். தண்ணீரிலிருந்து எழுந்திருக்கும்போது, ‘இயேசு மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தார், அவருடைய உயிர்த்தெழுந்த வல்லமையினால் நானும் வெற்றியுள்ள வாழ்க்கை வாழுவேன்’ என்று உறுதி எடுக்கிறீர்கள். உங்களுடைய சந்தோஷம் நிறைவான சந்தோஷமாகிறது. இஸ்ரவேலர் சிவந்த சமுத்திரத்தை கடந்தபோது அவர்களுக்கு பெரிய சந்தோஷம் ஏற்பட்டது போல ஞானஸ்நானத்தை கடந்து வருகிறவர்களுக்கும் ஏற்படுகிறது.

நினைவிற்கு:- “ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக் கொண்டீர்களே” (கலா. 3:27).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.