AppamAppam - Tamil

ஆகஸ்ட் 06 – இரத்தத்தினாலே பரிசுத்தம்!

“அந்தப்படியே, இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனத்தைப் பரிசுத்தஞ்செய்யும்படியாக நகர வாசலுக்குப் புறம்பே பாடுபட்டார்” (எபி. 13:12).

“சொந்த இரத்தத்தினாலே பரிசுத்தம் பண்ணும்படியாக” என்கிற பகுதியைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். உங்களுடைய பரிசுத்தத்தின்மேல் அளவற்ற ஆர்வமும், வைராக்கியமும் கொண்ட கர்த்தர், தம்முடைய சொந்த இரத்தத்தை ஊற்றிக்கொடுத்து, உங்களைப் பரிசுத்தமாக்க சித்தமானார். தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை, உங்களுடைய பரிசுத்தத்திற்காக அர்ப்பணித்தது எத்தனை பெரிய தியாகம்!

ஆயிரம் தேவதூதர்களை ஒருவேளை பலியிட அவர் ஒப்புக் கொடுத்திருந்திருக்கலாம். கேருபீன்களை, சேராபீன்களை தகன பலியாக அர்ப்பணித்திருந்திருக்கலாம். உலகத்திலுள்ள ஆயிரமாயிரமான மிருக ஜீவன்களையும், பறவைகளையும் கொடுத்திருந்திருக்கலாம். ஆனால் அவரோ, தம்முடைய ஒரே பேறான குமாரனைப் பலியாகக் கொடுத்தார். வேதம் சொல்லுகிறது, “இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்” (1 யோவா. 1:7)

ஒவ்வொரு நாளும் பரிசுத்த வாழ்க்கைக்காக கல்வாரி சிலுவையை நோக்கிப் பாருங்கள். ‘இயேசுவின் இரத்தம் ஜெயம்’ என்று சொல்லுங்கள். ‘ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்தினால் மீட்கப்பட்டிருக்கிறேன்’ என்று அறிக்கையிடுங்கள். அந்த இரத்தத்தினால் பெலனடைந்து, சந்தோஷத்தோடு, உற்சாகத்தோடு முன்னேறிச் செல்லுங்கள்.

ஒரு முறை மார்ட்டின் லூத்தரை சாத்தான் சோதித்தான். ‘நீ உன்னை பரிசுத்தவான் என்று சொல்லாதே. நீ எவ்வளவு பெரிய பாவங்களை செய்திருக்கிறாய் என்பதைப் பார்’ என்று சொல்லி பெரிய ஒரு பாவப் பட்டியலைக் காண்பித்தான். எல்லாம் அவர் செய்த பாவங்கள்தான். சிறியதும் பெரியதுமாய் ஏராளம் அதில் எழுதப்பட்டிருந்தது. ‘இவ்வளவுதானா? வேறு பாவங்கள் உண்டா?’ என்று அவர் கேட்டார். அவன் இன்னும் ஒரு பாவப் பட்டியலை எடுத்துக்கொண்டு வந்தான்.

அப்பொழுது அவர் மேஜையின் மேலிருந்த சிவப்பு நிற இங்க் பாட்டில் ஒன்றை எடுத்து, அந்த பாட்டிலில் உள்ள மையை அந்த பாவப் பட்டியலின்மேல் வீசி எறிந்தார். அதிலிருந்த சிவப்பு மை, பட்டியலின்மேல் இரத்தத்தைப்போல் படர்ந்தது. சாத்தானைப் பார்த்து, ‘சாத்தானே, நீ சொன்ன பாவங்களை நான் செய்தது உண்மைதான். ஆனால் இயேசு எனக்காய் சிந்தின கல்வாரியின் இரத்தம் என்னுடைய பாவங்கள் எல்லாவற்றையும் கழுவியிருக்கிறது. என்னை விடுதலையாக்கியிருக்கிறது’ என்று வெற்றி முழக்கமிட்டார். சாத்தான் வெட்கப்பட்டு ஓடியே போய் விட்டான்.

தேவபிள்ளைகளே, கர்த்தர் தம்முடைய இரத்தத்தை ஊற்றி, உங்களைக் கழுவி சுத்திகரித்திருக்க, யார் உங்களை குற்றவாளியாய் தீர்க்க முடியும்? எந்த மனுஷன் உங்களைப் பாவி என்று தீர்க்க முடியும்? மனசாட்சியும்கூட, உங்களைக் குற்றவாளியாக தீர்க்க முடியாது.

நினைவிற்கு:- “அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவருடைய இரத்தத்தினாலே பாவ மன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது” (எபே. 1:7).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.