AppamAppam - Tamil

ஜூலை 31 – பலன் அளிக்கும் காலம்!

“தீர்க்கதரிசிகளாகிய உம்முடைய ஊழியக்காரருக்கும் பரிசுத்தவான்களுக்கும் உமது நாமத்தின்மேல் பயபக்தியாயிருந்த சிறியோர் பெரியோருக்கும் பலனளிக்கிறதற்கும், காலம் வந்தது” (வெளி. 11:18).

பாவிகளுக்கும், அக்கிரமக்காரர்களுக்கும் நியாயத்தீர்ப்பின் காலமுண்டு. அதைப்போலவே நீதிமான்களுக்கும், பரிசுத்தவான்களுக்குமோ தேவன் பலன் அளிக்கிற காலமுண்டு. இயேசு சொன்னார், “இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடுகூட வருகிறது” (வெளி. 22:12).

தகப்பனார், வீட்டிற்கு திரும்பும்போது சிறு பிள்ளைகளின் கண்கள் ஏதாவது திண்பண்டம் வாங்கி வந்திருக்கிறாரா என்று எதிர்பார்க்கும். அது போலவே தாய் காய்கறி கடைக்கு சென்று விட்டு வந்தால்கூட, “அம்மா எங்களுக்கு என்ன வாங்கிக்கொண்டு வந்தீர்கள்?” என்று பிள்ளைகள் ஆவலோடு கேட்பார்கள்.   இரவு பகலாக விழுந்து விழுந்து படிக்கும் மாணவர்கள் பரீட்சையின் மதிப்பெண்கள் எப்படி இருக்கும் என்று ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள். வெற்றி என்று வந்தால் அவர்களுடைய சந்தோஷத்திற்கு அளவே இருக்காது. அவர்கள் பெற்ற மதிப்பெண்ணைப் பார்த்து, அது முதல் வகுப்பிலே தேறினதாக இருக்கக் கண்டால் அது எத்தனை பாக்கியமாய் இருக்கும்!

பரீட்சையின் காலம் ஒன்று இருப்பதுபோலவே முடிவைத் தெரிவிக்கும் காலமும் இருக்கிறது. கர்த்தருக்காக உழைக்கிற காலம் இருக்கிறதுபோல கர்த்தருடைய கரத்திலிருந்து தகுந்த பலனைப் பெற்றுக்கொள்ளுகிற காலமும் நிச்சயமாகவே இருக்கிறது. கர்த்தர் வரும்போது தம்முடைய பிள்ளைகளுக்கு என்று ஏராளமான பரிசுப் பொருட்களை அவர் ஆயத்தம் பண்ணிவைத்திருக்கிறார். யார் யாருடைய பெயர்கள் ஜீவபுஸ்தகத்தில் காணப்படுகிறதோ, அவர்களுக்கு என்று ஜீவகிரீடம், மகிமையின் கிரீடம், வாடாத கிரீடங்களைக் கொண்டு வருகிறார்.

நித்தியத்தில் பிரவேசிக்கும்போது கர்த்தர் உங்களுக்காக ஆயத்தம் பண்ணின மகிமையின் வாசஸ்தலத்தை காண்பித்து, “என் மகனே, மகளே, உனக்காக ஒரு வாசஸ்தலத்தை ஆயத்தம் பண்ணியிருக்கிறேன். நான் இருக்கிற இடத்திலே நீயும் வாசம் பண்ணும்படி நான் உனக்காக ஏற்படுத்தியிருக்கிற இந்த மகிமையின் மாளிகைகளை பார்” என்று சொல்லுவார். ஆ! அந்த நேரம் எத்தனை சந்தோஷமானதாயிருக்கும்! அப். பவுல் எழுதுகிறார், “இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது. நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்” (2 தீமோ. 4:8).

உங்களுடைய ஓட்டத்தை வெற்றியோடு முடியுங்கள். ஒரு நாள் அந்த ஒளிமயமான தேசத்திற்குள் சந்தோஷமாய் பிரவேசிக்கும்போது, ஆயிரம் பதினாயிரமான தேவதூதர்கள் முன்னிலையிலே கர்த்தர் உங்களை அன்போடு தட்டிக் கொடுத்து, “நல்லது உண்மையும் உத்தமுமான ஊழியக்காரனே நீ கொஞ்சத்தில் உண்மையுள்ளவனாயிருந்தாய். அநேகத்திலே உன்னை அதிகாரியாய் வைப்பேன்” என்று பாராட்டுவார். அந்த பாராட்டுதலையும் கிறிஸ்து உங்களுக்குத் தரப்போகும் வெகுமதிகளையும் நினைக்கும்போது, இந்த பூமியிலே நீங்கள் கர்த்தருக்காக பட்ட பாடுகள் எல்லாம் மிக அற்பமானது என்பதை உணர்ந்து கொள்ளுவீர்கள்.

நினைவிற்கு:- “நீதியை விதைக்கிறவனோ மெய்ப்பலனைப் பெறுவான்” (நீதி. 11:18). “அவனவன் தன்தன் வேலைக்குத் தக்கதாய்க் கூலியைப் பெறுவான்” (1 கொரி. 3:8).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.