AppamAppam - Tamil

ஜூலை 28 – வந்து சேர்ந்தீர்கள்!

“நீங்களோ சீயோன் மலையினிடத்திற்கும், ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய பரம எருசலேமினிடத்திற்கும், ஆயிரம் பதினாயிரமான தேவதூதர்களினிடத்திற்கும், ….வந்து சேர்ந்தீர்கள்” (எபி. 12:22-24).

கிறிஸ்தவ குடும்பம் என்பது ஒரு இனிமையான, மேன்மையான, அருமையான குடும்பம். ஒருவன் கிறிஸ்துவண்டை வரும்போது அவன் பாக்கியமான அனுபவத்திற்குள் வருகிறான். இனிமையான உறவை நோக்கி வருகிறான். நித்திய ஆசீர்வாதங்களை நோக்கி வருகிறான். மேலே குறிப்பிட்டிருக்கிற வசனம் “நீங்களோ” என்று ஆரம்பிக்கிறது. ‘வந்து சேர்ந்தீர்கள்’ என்று முடிவடைகிறது. நீங்கள் எங்கு வந்து சேர்ந்தீர்கள்? ஆயிரம் பதினாயிரமான தேவதூதர்கள் இருக்கும் பரலோக குடும்பத்திற்கு வந்து சேர்ந்தீர்கள். சற்று அதை சிந்தித்துப் பாருங்கள்.

நம் குடும்பத்தில் பலமும், பராக்கிரமுமான தேவதூதர்களுண்டு. அழகும் வனப்பும் நிறைந்த கேரூபீன்களுண்டு. ஏற்ற வேளையிலே நமக்கு ஓடிவந்து உதவி செய்கிற பணிவிடை ஆவிகளுண்டு. நம்முடைய கால்கள் கல்லில் இடறாதபடி தாங்கி ஏந்தும் தூதர்களுண்டு. கர்த்தர் நமக்காக எத்தனை தேவதூதர்களுக்கு கட்டளையிட்டு வைத்திருக்கிறார்! வேதம் சொல்லுகிறது, “எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை. நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்” (1 கொரி. 2:9,10).

இன்று அநேகர் பிசாசைக் குறித்து பயப்படுகிறார்களே தவிர, கர்த்தருடைய குடும்பத்தில் தமக்கிருக்கிற மகிமையான தேவ தூதர்களை எண்ணி மகிழ்ச்சியடைவதில்லை. எப்பொழுது பார்த்தாலும் சாத்தான் என்றும், பிசாசு என்றும், மந்திரவாதி என்றும், செய்வினை என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே தவிர அவைகளையெல்லாம் அடித்து, முறித்து, நொறுக்கி, வெற்றி சிறக்கப்பண்ண கர்த்தர் கொடுத்திருக்கிற தேவதூதர்களைப் பற்றி எண்ணுவதில்லை.

சாத்தான் வானத்திலிருந்து கீழே தள்ளப்பட்டபோது, மூன்றில் ஒரு பகுதி வான சேனையை தம் பக்கமாய் இழுத்துக் கொண்டு கீழே விழுந்தான். அப்படியானால், மீதி இருப்பது எத்தனை பகுதி? மூன்றில் இரண்டு பகுதி. உங்களை வீழ்த்த சாத்தான் ஒரு பிசாசை அனுப்ப நினைத்தால் கர்த்தரோ உங்களை பாதுகாக்கவும், சத்துருவின் கிரியைகளை அழிக்கவும் இரண்டு மடங்கு தேவதூதர்களை அனுப்ப ஆயத்தமாயிருக்கிறார். ஆகவேதான், நீங்கள் ஜெயங்கொண்டவர்களாய் விளங்குகிறீர்கள்.

நீங்கள் தேவாதி தேவனுடைய சொந்த பிள்ளைகளாக இருப்பதினாலே, ஆண்டவர் உங்களுக்கு பலமுள்ள தேவதூதர்களை பணிவிடை ஆவிகளாய்த் தந்திருக்கிறார். ஒவ்வொரு விசுவாசிக்கும் தேவன் பணிவிடை ஆவியாக தேவதூதர்களை கட்டளையிட்டிருக்கிறார். நீங்களோ ஆயிரம் பதினாயிரமான தேவ தூதர்களிடத்திற்கு வந்து சேர்ந்தீர்கள்.

ஒரு முறை எலிசாவுக்கு விரோதமாக ஒரு ராஜா படையெடுத்து வந்து, எலிசா இருந்த பட்டணத்தை வளைத்துக் கொண்டான். அப்பொழுது எலிசாவின் வேலைக்காரன், ‘ஐயோ, என் ஆண்டவனே, என்ன செய்வோம்’ என்றான். அதற்கு எலிசா என்ன சொன்னார் தெரியுமா? ‘பயப்படாதே; அவர்களோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர் அதிகம்’ என்றான் (2 இராஜா. 6:15,16).

நினைவிற்கு:- “சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார், யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர்” (சங். 46:11).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.