AppamAppam - Tamil

ஜூலை 25 – குறை கூறலாமா?

“நம்முடைய அறிவு குறைவுள்ளது” (1 கொரி. 13:9).

மனித அறிவு என்பதே குறைவுள்ளதுதான். குறைவுள்ள அறிவை வைத்துக் கொண்டு, நீங்கள் மற்றவர்களைக் குறைகூறலாமா? இன்று எங்கு பார்த்தாலும் குறைகூறும் பழக்கம் தொற்று நோயாக வேகமாக பரவி ஆவிக்குரிய உலகத்தை சீர்குலைத்துக் கொண்டிருக்கிறது. எந்த அளவு மற்றவர்கள்மேல் குறை கூறலாம், வேதத்தின் அடிப்படை என்ன, என்று ஆராய்ந்து அறிய வேண்டியது அவசியம்.

இயேசு சொன்னார், “நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவுகூருவாயாகில், அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப்போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து” (மத். 5:23,24).

உலகத்திலே இரட்சிக்கப்பட்டவர்களின் குறைவைக் காண்கிறீர்கள். அபிஷேகம் பெற்றவர்களின் குறைவைக் காண்கிறீர்கள். ஊழியர்களின் குறைவைக் காண்கிறீர்கள். ஏனென்றால், இவர்கள் எல்லாரும் மனுஷர்தான். அவர்கள் தவறுவதும் இயல்புதான். ஊழியர்களிடம் குறைகளைக் காணும்போது, அவர்களுக்காக உபவாசித்து ஜெபியுங்கள். அவர்களுக்கு உணர்த்த வேண்டுமென்று விரும்பினால் அவர்கள் தனிமையாய் இருக்கும்போது நேரில் சென்று அவர்களுடைய குறைகளை அவர்களுக்கு உணர்த்திக் காண்பியுங்கள்.

தாவீது பாவம் செய்தபோது, நாத்தான் தீர்க்கதரிசி சென்று தனிமையில் உணர்த்திக் காண்பித்ததினால் தாவீது பாவ அறிக்கைசெய்து கர்த்தரிடத்தில் திரும்புவதற்கு அது வழி வகுத்தது அல்லவா? தனிமையில் உணர்த்திக் காண்பிக்காமல் எல்லாரும் அறியும்படி அதைப் பறைசாற்றுவதும், பிரசங்க மேடையில் உரக்க தாக்குவதும், பத்திரிகைகளில் எழுதுவதும் சாத்தானுக்குத்தான் கொண்டாட்டமாக இருக்கும். அவன் தானே நம்முடைய சகோதரர்கள் மேல் இரவும் பகலும் குற்றஞ்சாட்டுகிறவனாய் இருக்கிறான்? (வெளி. 12:10).

நீங்கள் இந்த பூமியிலே வாழுகிற காலங்கள் கொஞ்சம் காலம்தான். அந்த கொஞ்ச காலத்தை கர்த்தருடைய மகிமையையும், மகத்துவத்தையும் போற்றுவதற்கு செலவழித்தால் அது எத்தனை பிரயோஜனமாக இருக்கும்! ஆத்துமாக்களை ஆதாயம் செய்து நரகத்திலிருந்து மீட்கும் போது அது எத்தனை பயனுள்ளதாய் இருக்கும்! பூமியிலே குறை கூறி உங்களுடைய நாளை வீணாக்கிவிட்டால், பரலோகத்திற்கு செல்லும்போது, ஐயோ தேவன் கொடுத்த பொன்னான தருணங்களை இப்படி வீணாக்கிவிட்டேனே என்று சொல்லி நித்திய நித்தியமாய் புலம்ப வேண்டியதிருக்குமே.

குறை கூறுகிறவர்கள், கர்த்தர்மேல் அன்பு இல்லாததினாலும், உண்மையான ஆத்தும தாகம் இல்லாததினாலும்தான் மற்றவர்களைக் குறை சொல்லுகிறார்கள். இன்னொரு காரணம் அவர்கள் உள்ளத்தில் பற்றி எரிகிற பொறாமையின் ஆவியாகும். இயேசு சொன்னார், “நீங்கள் மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்” (மத். 7:1). தேவபிள்ளைகளே, இந்த பூமியில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் கர்த்தர் கிருபையாக உங்களுக்குக் கொடுத்த ஈவு என்பதை அறிந்து செயல்படுங்கள். பாரத்துடன் ஜெபிக்க உங்களை ஒப்புக்கொடுங்கள். அப்பொழுது நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்கள்.

நினைவிற்கு:- “பொல்லாதவர்களைக்குறித்து எரிச்சலடையாதே; நியாயக்கேடு செய்கிறவர்கள்மேல் பொறாமைகொள்ளாதே. அவர்கள் புல்லைப்போல் சீக்கிரமாய் அறுப்புண்டு, பசும்பூண்டைப்போல் வாடிப்போவார்கள்” (சங். 37:1,2).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.