No products in the cart.
ஜூலை 21 – வசந்த காலம்!
“அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, வசந்தகாலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள்” (மத். 24:32).
வருடம் முழுவதிலும் பல காலங்கள் மாறி மாறி வந்தாலும், எல்லா காலங்களிலும் இனிமையானதும் மகிழ்ச்சியானதுமான காலம் ஒன்று உண்டென்றால் அது வசந்த காலம்தான். வசந்த காலத்தை எல்லாரும் விரும்பி ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள்.
வசந்தகாலத்திற்கு முன்னான காலம் கொடிய குளிர்காலமாகும். அந்த நாளில் எங்குப் பார்த்தாலும் பனி படர்ந்திருக்கும். மரங்களெல்லாம் தங்கள் இலைகளை உதிர்த்து வெறுமையாக காட்சியளிக்கும். பறவைகளெல்லாம் அந்த தேசத்தை விட்டு வெப்பமான தேசங்களுக்கு சென்றுவிடும். அழகான பட்டணங்களெல்லாம் வெண்பனியினால் நிரப்பப்பட்டு வெறிச்சோடி கிடக்கும்.
ஆனால் பனிக்காலம் கடந்து சென்றுவிடும்போது வசந்த காலம் ஆரம்பிக்கும். மரங்கள் இளம் துளிர்விட்டு துளிர்க்க ஆரம்பிக்கும். இன்னும் சில நாட்களுக்குள்ளாக செடிகளில் அழகான மலர்கள் பூத்து குலுங்கும். எங்கிருந்தோ பறவைகளெல்லாம் வந்து ஆனந்தக் களிப்புடன் பாடும். ஜனங்கள் வசந்த காலத்தை மகிழ்ச்சியுடன் எதிர்கொண்டு வந்து ஆடிப்பாடிக் களித்து மகிழுவார்கள்.
இந்த வசந்த காலத்தைக் குறித்து உன்னதப்பாட்டிலே வாசிக்கலாம். “பூமியிலே புஷ்பங்கள் காணப்படுகிறது; குருவிகள் பாடுங்காலம் வந்தது, காட்டுப்புறாவின் சத்தம் நமது தேசத்தில் கேட்கப்படுகிறது. அத்திமரம் காய்காய்த்தது; திராட்சக்கொடிகள் பூப்பூத்து வாசனையும் பரிமளிக்கிறது; என் பிரியமே! என் ரூபவதியே! நீ எழுந்துவா” (உன். 2:12,13) என்று சொல்லப்படுகிறது.
கர்த்தர் தம்முடைய மணவாட்டியை அழைக்கிற சத்தத்தை வசந்த காலத்தில்தான் கேட்க முடியும். வசந்த காலத்தை ஒட்டித்தான் கர்த்தருடைய வருகை சமீபமாய் இருக்கும் என்பதற்கு நம் ஆண்டவரும் ஒரு அருமையான உவமையை சொன்னார், “அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, வசந்தகாலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள்” (மத். 24:32) என்றார்.
இந்த அத்திமரம் யூதருக்கு நிழலாட்டமாய் இருக்கிறது. அது அவர்களுடைய அரசியல் வாழ்க்கையைக் காண்பிக்கிறது. யோவான் ஸ்நானகன் நியாயத்தீர்ப்பின் கோடாரியானது அந்த மரத்தின் வேர் அருகே வைத்திருக்கிறதை குறித்து எச்சரித்தார் (மத். 3:10). ஆனால் இஸ்ரவேல் ஜனங்கள் தேவனுடைய நியாயத்தீர்ப்பைக் குறித்து அசட்டை பண்ணினதினாலே கி.பி. 70-ம் ஆண்டு கோடாரியானது, அத்திமரமாகிய யூதரின் மேல் விழுந்தது. யூதர்கள் சிதறடிக்கப்பட்டார்கள். இஸ்ரவேல் தேசத்திலிருந்து துரத்தப்பட்டார்கள்.
அத்தி மரம் மீண்டும் துளிர்க்குமா, இஸ்ரவேல் ஜனங்கள் மறுபடியும் தங்களுடைய தேசத்தில் வந்து கூடுவார்களா என்று வேத பண்டிதர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள். 19-ம் நூற்றாண்டுகள் கடந்து சென்றன. கடைசியாக அத்திமரம் துளிர்க்கிற நேரம் வந்தது. 1948-ம் ஆண்டு மே மாதம் 14-ம் தேதி இஸ்ரவேல் ஜனங்கள் சுதந்தரம் பெற்றார்கள். வசந்த காலம் ஆரம்பமாயிற்று. தேவபிள்ளைகளே, “என் பிரியமே! என் ரூபவதியே! எழுந்து வா” என்று கர்த்தர் உங்களை அழைக்கிறார்.
நினைவிற்கு:- “நீ ஆயத்தப்படு, உன்னுடனேகூடின உன் எல்லாக் கூட்டத்தையும் ஆயத்தப்படுத்து” (எசேக். 38:7).