No products in the cart.
ஜூலை 20 – வெறுமையிலும் மகிழ்ச்சி!
“நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்” (ஆபகூக் 3:18).
ஒருமுறை சில தேவனுடைய ஊழியக்காரர்கள், வேதத்தில் தங்களுக்கு பிரியமான பகுதிகளைக் குறித்து கருத்து பரிமாறிக் கொண்டார்கள். ஒருவர் தனக்கு சிருஷ்டிப்பின் சம்பவமே பிரியமானது என்றார். இன்னொருவர் மலைப்பிரசங்க பகுதியே சிறந்தது என்றார். அடுத்தவர் வெளிப்படுத்தின விசேஷத்தில் வரும் பரலோக காட்சியே மிகவும் மேன்மையுள்ளது என்றார். அடுத்தவர் எபேசியரில் வரும் உன்னதத்திற்குரிய ஆசீர்வாதங்களே முழு வேதாகமத்திலும் நேர்த்தியான பகுதி என்று அடித்துப் பேசினார்.
அந்த வேளையில் அங்கு வந்த ஊழியரான வெப்ஸ்டர் என்பவர் எழுந்து வேதத்தில் ஆபகூக் 3:17,18-ஐ திறந்து, “அத்திமரம் துளிர்விடாமற் போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவமரத்தின் பலன் அற்றுப் போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப் போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற் போனாலும், நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்” (ஆப. 3:17,18) என்ற வசனத்தைக் காட்டினார்.
இங்கே நிபந்தனையற்ற ஒரு மகிழ்ச்சி சொல்லப்பட்டிருக்கிறது. பாடுகளிலும், துயரத்திலும், கண்ணீரிலும், இழப்பிலும் சந்தோஷம். இதுவே ஒவ்வொரு தேவனுடைய பிள்ளைக்கும் இருக்க வேண்டிய குணாதிசயம். அப். பவுல் எழுதுகிறார், “நாம் பிழைத்தாலும் கர்த்தருக்கென்று பிழைக்கிறோம், நாம் மரித்தாலும் கர்த்தருக்கென்று மரிக்கிறோம்; ஆகையால் பிழைத்தாலும் மரித்தாலும் நாம் கர்த்தருடையவர்களாயிருக்கிறோம்” (ரோமர் 14:8).
கதையிடையே கேள்வி கேட்கப்பட்ட ஒரு வேடிக்கையான நிகழ்ச்சி உண்டு. வாழ்க்கையில் மிகச் சோர்வுற்ற ஒரு மனிதன் உள்ளம் கசந்துபோய் ஊருக்கு வெளியேயுள்ள பாலத்தின் மேலிருந்து கீழே கரை புரண்டு ஓடும் ஆற்றில் குதித்து தன் வாழ்க்கையை முடித்துக் கொள்வேன் என்றும், அப்படிப் போகும் வழியில் சந்தோஷமாயிருக்கிற ஒரு நபரைப் பார்த்தால் நான் தற்கொலை செய்யாமல் திரும்பி விடுவேன் என்றும் தீர்மானம் செய்துக் கொண்டானாம். பாலத்தை நோக்கி வந்த அவன் வழியெல்லாம் சந்தோஷமான ஒரு முகத்தையும் காணவில்லை.
அந்த கதை ஆசிரியர் இதோடு நிறுத்திவிட்டு, “பாலத்தின் உச்சியில் உங்களை ஒருவேளை அவன் பார்த்தால் அவன் தீர்மானத்தை மாற்றிக் கொள்வானா அல்லது தற்கொலை செய்துவிடுவானா?” என்று வாசகரைப் பார்த்து ஒரு கேள்வியைக் கேட்டாராம். அதே கேள்வி உங்கள்முன் வைக்கப்பட்டால் நீங்கள் என்ன பதில் சொல்லுவீர்கள்? தேவபிள்ளைகளே, உங்களோடு வழி நடப்பவர்களிலும், உங்களுக்கு எதிர்கொண்டு வருபவர்களிலும், துக்கத்தால் நிறைந்திருப்பவர்கள் ஏராளம்! உங்களிலுள்ள தேவ மகிழ்ச்சி அவர்கள் கிறிஸ்துவண்டை திரும்ப உதவும் வகையில் உள்ளதா? சிந்தித்துப் பாருங்கள்.
நீங்கள் மனமகிழ்ச்சியாயிருந்தால் அது காந்த சக்தி போல் மற்றவர்களை தேவனண்டை இழுப்பதற்கு ஏதுவாயிருக்கும். உங்களுடைய சந்தோஷத்தின் இரகசியம் என்ன என்று புறஜாதியார் உங்களிடத்தில் கேட்டு சந்தோஷத்தின் ஊற்றுக்காரணரான கிறிஸ்துவை கண்டுகொள்ளுவார்கள். தேவபிள்ளைகளே, கர்த்தருக்குள் சந்தோஷமாயிருங்கள்.
நினைவிற்கு:- “அவர்களுக்குத் தானியமும் திராட்சரசமும் பெருகியிருக்கிறகாலத்தின் சந்தோஷத்தைப்பார்க்கிலும், அதிக சந்தோஷத்தை என் இருதயத்தில் தந்தீர்” (சங். 4:7).