AppamAppam - Tamil

ஜூலை 19 – திருப்பிப்போடாத..!

“எப்பிராயீம் அந்நியஜனங்களோடே கலந்திருக்கிறான்; எப்பிராயீம் திருப்பிப்போடாத அப்பம்” (ஓசியா 7:8).

இஸ்ரவேலில் 12 கோத்திரங்கள் இருந்தாலும், எப்பிராயீம் கோத்திரத்தாரை குறித்து கர்த்தர் எழுதும் போது, “திருப்பிப்போடாத அப்பம்” என்று குறிப்பிடுகிறார். இந்த வார்த்தைகள் நம்மை நாமே ஆராய்ந்து பார்க்க உதவியாயிருக்கின்றன.

அப்பம் என்கிற வார்த்தைக்கு பதிலாக தோசை என்கிற வார்த்தையை உபயோகித்துப் பாருங்கள். நீங்கள் தோசை சுடும்போது தோசைக் கல்லில் எண்ணெய் தடவி, அதிலே மாவை ஊற்றுகிறீர்கள். கீழே எரிகிற அடுப்பின் வெப்பத்தால் அது பதமாக வேகிறது. பின்பு அதை திருப்பிப் போடுகிறீர்கள். அப்பொழுது மறுபக்கமும் நன்றாக வேகிறது. அது சாப்பிடும்போது மிக சுவையுள்ளதாயிருக்கும். அதே நேரத்தில் திருப்பி போடாமல் இருப்பீர்களென்றால், ஒரு பக்கம் மட்டுமே வெந்து மறுபக்கத்தில் பச்சை மாவாகக் காணப்படும்.

ஆவிக்குரிய ஜீவியத்திலே இரண்டு பகுதிகள் இருக்கிறது. ஒரு பகுதி கர்த்தர் உங்களுக்கு செய்கிற பகுதி. அடுத்த பகுதி நீங்கள் அவருக்கு செய்ய வேண்டிய பகுதி. அநேகர் கர்த்தர் தங்களுக்கு செய்கிற பகுதியை விடாமல் கர்த்தரிடத்தில் கேட்பார்கள். ஆசீர்வாதத்தை கேட்பார்கள். ஞானத்தை, விடுதலையை, தெய்வீக சுகத்தை கேட்பார்கள். கர்த்தர் அதையெல்லாம் தர வல்லமையுள்ளவர்.

அதே நேரத்தில், அவர்கள் கர்த்தருக்கு செய்யவேண்டிய கடமை உண்டு என்பதை மறந்துபோவார்கள். கர்த்தரை நேசிக்கவேண்டும். கர்த்தருக்கு கொடுக்க வேண்டும். கர்த்தருடைய ஜனங்களாய் ஜீவிக்க வேண்டும். கர்த்தருடைய கட்டளைகளுக்கெல்லாம் கீழ்ப்படிய வேண்டும் என்பதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். இப்படிப்பட்டவர்களே திருப்பிப் போடாத அப்பமாக விளங்குகிறார்கள்.

சாலொமோன் ராஜாவைப் பாருங்கள்! அவர் ஞானத்தைக் கேட்டபோது, கர்த்தர் ஞானத்தோடுகூட அவர் கேளாத ஐசுவரியத்தையும் மகிமையையும், செல்வத்தையும், செல்வாக்கையும் சேர்த்துக் கொடுத்தார். ஆனால் அவரோ, அந்நிய தெய்வங்களுக்கு மேடை கட்டி, பலிசெலுத்தி, கர்த்தரை துக்கப்படுத்திவிட்டார். சாலொமோன் ஒரு திருப்பிப் போடாத அப்பம்.

அதே நேரம் இன்னொரு அப்பத்தைக் குறித்து வேதத்திலே சொல்லப்படுகிறது.  “சுட்டிருந்த ஒரு வாற்கோதுமை அப்பம் மீதியானியரின் பாளயத்திற்கு உருண்டு வந்தது, அது கூடாரமட்டும் வந்தபோது, அதை விழத்தள்ளிக் கவிழ்த்துப் போட்டது, கூடாரம் விழுந்துகிடந்தது” (நியா. 7:13). சுட்டிருந்த வாற்கோதுமை அப்பம் மிகப்பெரிய மீதியானியரின் பாளயத்தை உருட்டித் தள்ளும் வல்லமையுள்ளதாயிருந்தது. காரணம், அதன் இரண்டு பக்கமும் அக்கினியினால் சுடப்பட்ட அப்பமாயிருந்தது.

ஒருபக்கம் நீங்கள் பரிசுத்த ஆவியினால் நிரம்பியிருக்க வேண்டும். மறுபக்கம் கர்த்தருடைய அக்கினியால் நிரம்பியிருக்கவேண்டும். உங்களுடைய பரிசுத்தத்திற்காக கர்த்தர் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை தருகிறார். நீங்கள் சத்துருவினுடைய கோட்டைகளை முறிப்பதற்காக அக்கினி அபிஷேகத்தை தருகிறார். தேவபிள்ளைகளே, நீங்கள் திருப்பிப்போடாத அப்பங்களாக அல்ல; இரண்டு பக்கமும் சுடப்பட்டிருக்கிற அப்பங்களாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் சத்துருவினுடைய வல்லமையை முறியடித்து ஜெயங்கொண்டவர்களாய் வெற்றி சிறக்க முடியும்.

நினைவிற்கு:- “நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்” (யோவான் 6:51).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.