No products in the cart.
ஜூலை 18 – பரலோகத்தில் பிரவேசிக்க..!
“உன்னதமானவருடைய பரிசுத்தவான்கள் ராஜரீகத்தைப்பெற்று, என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்” (தானி. 7:18).
நீங்கள் ஏன் பரிசுத்தமாய் ஜீவிக்க வேண்டும்? பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க உங்களுக்கு பரிசுத்தம் மிக மிக அவசியம். பரலோக ராஜ்யத்தை வேதம், ‘பரிசுத்தவான்களின் ராஜ்யம்’ என்று அழைக்கிறது. பரிசுத்தமாய் ஜீவிக்கிறவர்கள் மாத்திரமே அங்கே பிரவேசிக்க முடியும்.
வேதம் சொல்லுகிறது: “தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லை; ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டவர்கள் மாத்திரம் அதில் பிரவேசிப்பார்கள்” (வெளி. 21:27). ஆம், அங்கே பாவம் கொஞ்சமேனும் இருப்பதில்லை. இருளின் ஆதிக்கங்கள் கிரியை செய்வதில்லை. அந்தகார சக்திகள் உட்புகுவதில்லை.
அந்த ஒளிமயமான தேசத்தில் கிறிஸ்துவின் பரிசுத்தத்தை நீங்கள் சந்திக்கப் போகிறீர்கள். பிதாவாகிய தேவனுடைய பரிசுத்தத்தை கண் குளிர காண்பீர்கள். ஆவியானவருடைய நிறைவை இன்பமாய் ருசிப்பீர்கள். எந்தப் பக்கம் திரும்பினாலும் பரிசுத்தமுள்ள தேவதூதர்கள் பரிசுத்தமாய் பாடி கர்த்தரைத் துதித்துக் கொண்டேயிருப்பதைப் பார்ப்பீர்கள்.
நான்கு ஜீவன்கள், இருபத்திநான்கு மூப்பர்கள் எல்லோரும் தேவனை பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று போற்றி துதித்துக் கொண்டேயிருப்பார்கள். நீங்களும் அவர்களோடிணைந்து பரிசுத்தமுள்ள தேவனை துதிப்பீர்கள். ஆ! அந்த தேசத்தில் பிரவேசிக்க உங்களுக்கு எவ்வளவு பரிசுத்தம் தேவை!
மனம் போனபடியெல்லாம் ஜீவித்து விட்டு பரலோக ராஜ்யத்தை சுதந்தரித்துக் கொள்வேன் என்று ஒருவன் நினைத்தால், அவன் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ளுகிறவனாயிருப்பான். நீங்கள் பரிசுத்தவான்களாய் இருந்தால் மாத்திரமே அந்த பரிசுத்த ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியும்.
வேதம் சொல்லுகிறது, “யார் உம்முடைய கூடாரத்தில் தங்குவான்? யார் உம்முடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம்பண்ணுவான்? உத்தமனாய் நடந்து, நீதியை நடப்பித்து, மனதாரச் சத்தியத்தைப் பேசுகிறவன்தானே” (சங். 15:1,2).
பரலோகத்தில் பிரவேசிக்க விடாமல் சாத்தான் உலக ஆசை இச்சைகளை காண்பித்து பாதாளத்தை நோக்கி இழுக்கிறான். அவனுடைய வழிகளில் செல்லுகிறவர்கள் நித்தியமாய் வேதனைப்படுவார்கள். பரலோகத்தை விட்டு விட்டால் பாதாளமும் அக்கினிக் கடலும்தான் பங்காக முடியும்.
தேவபிள்ளைகளே, பரிசுத்தத்திற்காக போராடுங்கள். பரிசுத்தத்திற்காக முயற்சி செய்யுங்கள். அப். பவுல் சொல்லுகிறார், “நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக் கொண்டேன். இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்” (2 தீமோ. 4:7,8).
நினைவிற்கு:- “மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்” (1 கொரி. 9:27).