AppamAppam - Tamil

ஜூலை 15 – நம்மை நாமே காண்போம்!

“ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கக் கண்டேன்” (ஏசா. 6:1).

நீங்கள் கர்த்தரைக் காணவேண்டும். அவருடைய சாயலைத் தரிசிக்க வேண்டும். அவருடைய மேன்மையையும் மகிமையையும் உணரவேண்டும். அவருடைய தெய்வீகத்தின் பரிபூரணத்தைப் பணிந்துகொள்ள வேண்டும். நீங்கள் கர்த்தரைக் காணும்போது, கூடவே உங்களை நீங்களே காண்பீர்கள்.

உங்களை நீங்களே காண்பதற்கு கர்த்தரை நீங்கள் காண வேண்டியது அவசியம். ஏசாயா தேவனைக் கண்டார். அதன் மூலம் தன்னைத்தானே கண்டார். தன் அவல நிலைமையை உணர்ந்தார். தான் அசுத்த உதடுகள் உள்ள மனுஷன் என்பதையும், அசுத்த உதடுகள் உள்ள மனுஷர்கள் மத்தியில் வாழுவதையும் கண்டார்.

நீங்கள் கர்த்தருக்கு முன்னால் நிற்கும்போது, நிச்சயமாகவே உங்களுடைய மனசாட்சி உங்களுடைய பாவங்களை உணர்த்தும். உங்களுடைய மாய்மாலங்கள், உங்கள் வாழ்க்கையின் அருவருப்புகள், குறைபாடுகள் அனைத்தும் வெட்டவெளிச்சமாக தெரியும். ஆகவே நீங்கள் ஒவ்வொருநாளும் கர்த்தருடைய சமுகத்தில் நிற்கும்போது, அது உங்களை நீங்களே ஆராய்ந்து பார்க்கவும், உங்களுடைய குறைகளை நீக்கிக் கொள்ளவும் உதவியாயிருக்கும்.

உங்களுடைய நிலைமையை நீங்கள் காணும்போது உள்ளம் நொறுங்குண்டு கர்த்தரிடத்திலே அழுது மன்னிப்பு கேட்டு சீர்ப்படுத்திக்கொள்ளுங்கள். அப்பொழுது கர்த்தர் உங்களை வல்லமையாய்ப் பயன்படுத்துவார்.

வேதம் சொல்லுகிறது, “உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம்பண்ணுகிற நான், பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்பண்ணுகிறேன்” (ஏசா. 57:15).

நீங்கள் ஆண்டவரை காணும்போது, அவர் உங்களுடைய நொறுங்குண்ட, நருங்குண்ட இருதயத்தை காணட்டும். பரிசுத்த ஜீவியத்தை நீங்கள் வாஞ்சிக்கிறதைக் காணட்டும். உங்கள் கண்ணீரின் ஜெபத்தைக் காணட்டும்.

தாவீது சொல்லுகிறார், “தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்” (சங்.51:17). உங்கள் கண்ணீரின் கூக்குரலை ஒருநாளும் அவர் அசட்டை செய்வதில்லை.

ஒரு அறையில் மிதந்துகொண்டிருக்கும் தூசிகளை வெறும் கண்ணால் காணமுடியாது. ஆனால் கூரையின் ஒரு துவாரத்தின் வழியாக உள்ளே வரும் சூரியனின் கதிர்கள் மூலமாக அந்த வெளிச்சத்தில் எத்தனை ஆயிரமாயிரம் சிறு தூசிகள் மிதந்து கொண்டிருக்கின்றன என்பதை அறியலாம். அதுபோலவே சாதாரணமாக உங்களுடைய குறைகளை நீங்கள் காண இயலாது.

நீங்கள் தேவ பிரசன்னத்தில் அமர்ந்திருக்கும்போது, பரிசுத்த ஆவியானவருடைய வெளிச்சம் உங்கள் உள்ளத்தில் விழுகிறதினாலே அவர்தாமே உங்களுடைய குற்றங்குறைகளை உணர்த்துவார். அப்போது நீங்கள் கண்ணீரோடு அறிக்கை செய்து குறைகளை நீக்கிக்கொள்ளுவதற்கு அந்த தேவ பிரசன்னம் உங்களுக்கு உதவியாயிருக்கும்.

நினைவிற்கு:- “தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும்” (சங். 139:23).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.