situs toto musimtogel toto slot musimtogel link musimtogel daftar musimtogel masuk musimtogel login musimtogel toto
AppamAppam - Tamil

ஜூலை 12 – ஜெயம் வரும் திசை!

“கிழக்கிலும், மேற்கிலும் வனாந்தர திசையிலுமிருந்து ஜெயம் வராது” (சங். 75:6).

வேதத்தில் மொத்தம் 150 சங்கீதங்கள் இருக்கின்றன. இதிலே தாவீது எழுதின சங்கீதங்கள் 73 ஆகும். ஆசாப் என்ற பக்தன் எழுதியது 12 சங்கீதங்களாகும். கோராகு புத்திரர் எழுதின சங்கீதங்கள் 11 ஆகும். சாலொமோன் 2 சங்கீதங்களை எழுதியிருக்கிறார். மோசே ஒரு சங்கீதத்தையும், ஈத்தன் என்பவர் ஒரு சங்கீதத்தையும் எழுதியிருக்கிறார். அறியப்படாத ஆக்கியோன்களினால் எழுதப்பட்ட 50 சங்கீதங்களும் வேதத்தில் உண்டு. சங்கீதங்கள் மூலம் பரிசுத்தவான்களுடைய உள்ளங்களை அறிந்து கொள்ளலாம். அவர்கள் கண்டுபிடித்த உண்மைகளை அறிந்து கொள்ளலாம்.

இஸ்ரவேல் ஜனங்களுக்கு விரோதமாய் எதிரிகள் புறப்பட்டு வரும்போது, தங்கள் அருகிலுள்ள மற்ற தேசங்கள் வந்து தங்களுக்கு உதவி செய்யாதா என்று அவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தார்கள். கிழக்கேயிருக்கிற எகிப்திலிருந்து உதவி வராதா, மேற்கேயிருந்து உதவிக்கு யாராவது குதிரை படைகளை அனுப்பித் தர மாட்டார்களா, என்றெல்லாம் எண்ணி ஏங்கி கண்பூத்து போனதே தவிர, யாரிடத்திலிருந்தும் எந்த உதவியும் வரவில்லை. நீங்கள் பார்க்க வேண்டிய திசை மேற்கும் அல்ல, கிழக்கும் அல்ல, வடக்கும் அல்ல, தெற்கும் அல்ல. அப்படியானால், எந்தத் திசையை நோக்கிப் பார்ப்பது?

தாவீது சொல்லுகிறார், “எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன். வானத்தையும், பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்” (சங். 121:1,2). உங்களுக்கு ஒத்தாசை அனுப்புகிறவர் நீங்கள் நேசிக்கிற ஆண்டவராகிய கர்த்தர் ஒருவரே. கொஞ்ச பேரைக் கொண்டாகிலும், அதிகம் பேரைக் கொண்டாகிலும் ஜெயத்தைக் கொடுப்பது அவருடைய கைகளிலே இருக்கிறது.

இஸ்ரவேலருக்கு விரோதமாய் கடற்கரை மணலத்தனையான மீதியானியர் வந்தபோது, கிதியோன் எந்த திசையையும் நோக்கிப் பார்க்கவில்லை. மேலே நோக்கிப் பார்த்து கர்த்தரையே சார்ந்துக் கொண்டார். கர்த்தர் அவர்களோடு இருந்ததினாலே முன்னூறு பேரை வைத்துக் கொண்டு மீதியானியரின் பாளயத்தை கிதியோன் முறியடித்துப் போட்டார்.

ஒரு நாள் எசேக்கியா ராஜாவுக்கு விரோதமாய் யுத்தம் வந்தது. அசீரிய ராஜாவான சனகெரிப், கலங்கும்படியான நிருபங்களை எழுதி அனுப்பினான். இவ்வளவு பெரிய அசீரியரின் யுத்த வீரர்களை எப்படி மேற்கொள்ளுவது? எசேக்கியா இராஜா கிழக்கையும் மேற்கையும் பார்க்காமல் தேவனையே நோக்கிப் பார்த்தார். கர்த்தர் தம்முடைய தூதனை அனுப்பினார். “கர்த்தருடைய தூதன் புறப்பட்டு, அசீரியரின் பாளயத்தில் லட்சத்தெண்பத்தையாயிரம் பேரைச் சங்கரித்தான்; அதிகாலமே எழுந்திருக்கும்போது, இதோ, அவர்களெல்லாரும் செத்த பிரேதங்களாய்க் கிடந்தார்கள்” (ஏசா. 37:36).

தேவபிள்ளைகளே, நீங்கள் பலவிதமான பிரச்சனைகளில் சிக்கியிருக்கலாம். யார் இந்தப் பிரச்சனையிலிருந்து விடுவிப்பார், எந்த மனிதரை தேடலாம், யாரிடம் கடன் வாங்கலாம், எந்த அதிகாரியை போய் பார்க்கலாம் என்று நீங்கள் திகைத்துக் கொண்டிருக்கலாம். கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கிற வாக்குத்தத்தம் என்ன? “கிழக்கிலும் மேற்கிலும் வனாந்திரத் திசையிலிருந்து ஜெயம் வராது. கர்த்தரிடத்திலிருந்துதான் ஒத்தாசை வரும்” என்பதே.

நினைவிற்கு:- “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்” (1 கொரி. 15:57).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.