No products in the cart.
Sep – 30 – முகாந்தரம் இல்லையா?
“நான் இப்பொழுது செய்தது என்ன? நான் வந்ததற்கு முகாந்தரம் இல்லையா?” (1 சாமு. 17:29).
‘நான் வந்ததற்கு முகாந்தரம் இல்லையா’ என்பது தாவீது தன் சகோதரர்களைப் பார்த்து கேட்ட கேள்வி. ஆம், தாவீது யுத்தக்களத்திற்கு வந்ததற்கு ஒரு முகாந்தரமுண்டு. அதை அவனுடைய சகோதரர்கள் அறியவில்லை. ஆகவே அவர்கள் அவனைப் பார்த்து, ‘நீ ஏன் இந்த யுத்தத்திற்கு வந்தாய், வனாந்தரத்தில் ஆடுகளை மேய்ப்பதை விட்டுவிட்டு, போர்க்களத்தில் யுத்த வீரர்களோடு நிற்க காரணம் என்ன’ என்று கேட்டதற்கு தாவீது, “நான் நானாக வந்தவன் அல்ல. என் தேவனாகிய கர்த்தர் என்னைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். அவரால் கொண்டு வரப்பட்டபடியினால் அதற்கு நிச்சயமாகவே ஒரு முகாந்தரமுண்டு” என்று பதிலளித்தான்.
தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களைத் தெரிந்துகொண்டதற்கு ஒரு முகாந்தரமுண்டு. உங்களுடைய மத்தியிலே தம்முடைய மகிமையை வெளிப்படுத்துவதற்கு ஒரு முகாந்தரமுண்டு. அவர் ஏதோ தற்செயலாய் உங்கள் வாழ்க்கையை சந்திக்கவில்லை. ஒரு முகாந்தரத்தோடுதான் உங்களைச் சந்தித்திருக்கிறார் என்பதை மறந்துபோகாதேயுங்கள். அன்று வாலிபனும், யுத்த பயிற்சியில்லாதவனுமாகிய தாவீதைக் கொண்டு கோலியாத்தை முறியடிக்க ஒரு முகாந்தரத்தை ஏற்படுத்தின கர்த்தர், உங்கள் மூலமாகவும் பெரிய காரியங்களைச் செய்வதற்கு வல்லமையுள்ளவராய் இருக்கிறார்.
எந்த ஒரு விசுவாசிக்கும், எந்த ஒரு தேவனுடைய பிள்ளைக்கும், தேவனுடைய சந்திப்பு என்பது தற்செயலாய் நிகழ்ந்தது அல்ல. எந்த ஒரு பாடும் வீணாய் ஏற்படுகிறதுமல்ல. நிச்சயமாகவே அவைகளுக்கு ஒரு முகாந்தரமுண்டு.
இயேசு கானாவூர் கலியாணத்திற்கு போனதற்கு ஒரு முகாந்தரமுண்டு. குறைவை நிறைவாக்கி, தண்ணீரை திராட்ச ரசமாக மாற்றினார். மத்தியான வெயில் என்றும் பாராமல் சமாரியா கிணற்றோரம் காத்துக் கிடந்ததற்கு ஒரு முகாந்தரமுண்டு. அந்த சமாரியா ஸ்திரீயை இரட்சிப்பிற்குள் கொண்டு வந்ததே அந்த முகாந்தரம். பெதஸ்தா குளத்தண்டை கிறிஸ்து நடந்து போனதற்கு ஒரு முகாந்தரமுண்டு. அது அங்கேயே முப்பத்தியெட்டு வருடமாய் வியாதியோடு கிடந்த மனுஷனுக்கு புது வாழ்வு அளித்ததுதான்.
இயேசு காட்டத்தி மரத்தை ஏறிட்டு நோக்கிப் பார்த்ததற்கு ஒரு முகாந்தரமுண்டு. சகேயுவுக்கும், அவன் குடும்பத்திற்கும் இரட்சிப்பை கொண்டு வந்ததுதான் அது! உங்களுடைய வாழ்க்கையின் துயரத்திற்கும், வேதனைக்கும் காரணம் என்ன என்று தெரியாமல் தவிக்கிறீர்களா? அனாவசியமாக ஏன் எனக்கு இழப்புகள், ஏன் எனக்குக் கடன் பிரச்சனைகள் என்று கலங்குகிறீர்களா? ஏன் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலே குறைவுகள் என்று மனம் வியாகுலப்படுகிறீர்களா? எல்லாவற்றிற்கும் ஒரு முகாந்தரமுண்டு!
தேவபிள்ளைகளே, கர்த்தர் ஒரு முகாந்தரத்தோடு உங்களை சந்திக்கிறார் என்று நீங்கள் விசுவாசித்து, உங்கள் முழு இருதயத்தோடு கர்த்தரை ஸ்தோத்தரிப்பீர்களென்றால், கர்த்தர் உங்களுக்கு சகலத்தையும் நன்மைக்கேதுவாய் செய்தருளுவார். உங்களுடைய துயரங்களையெல்லாம் ஆசீர்வாதமுள்ள நீரூற்றாய் மாற்றுவார்!
நினைவிற்கு :- “காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது” (2 கொரி. 4:17).