No products in the cart.
ஜூலை 11 – அநுக்கிரக காலம்!
“கர்த்தாவே, அநுக்கிரக காலத்திலே உம்மை நோக்கி விண்ணப்பஞ் செய்கிறேன்; தேவனே, உமது மிகுந்த கிருபையினாலும் உமது இரட்சிப்பின் சத்தியத்தினாலும் எனக்குச் செவிகொடுத்தருளும்” (சங். 69:13).
தேவனுடைய இரக்கமும், அநுக்கிரகமும் உங்களைச் சூழ்ந்திருக்கிற காலம்தான் இந்த கிருபையின் காலம். கர்த்தர் உங்களுக்கு அநுக்கிரகம் செய்கிறார். இயேசு சொன்னார், “அநுக்கிரக காலத்திலே நான் உனக்குச் செவிகொடுத்து, இரட்சண்ய நாளிலே உனக்கு உதவிசெய்தேன்” (2 கொரி. 6:2). இது குறித்து வேதாகமம் சொல்லுவதை வாசித்துப் பாருங்கள். பஞ்சகாலம் வருவதற்கு முன்பாக கர்த்தர் அநுக்கிரகத்தின் நாட்களைக் கட்டளையிடுகிறார். எகிப்திலே ஏழு ஆண்டுகள் கொடிய பஞ்சம் வருவதற்கு முன்பாக ஏழு வருடங்கள் முழுமையும், பூரணமுமாய் இருந்தன.
அந்த அநுக்கிரக காலத்திலே, யோசேப்பின் ஆலோசனையின்படி, பார்வோன் தனக்குக் களஞ்சியங்களைக் கட்டி தானியங்களைச் சேர்த்து வைத்துக்கொண்டான். அந்த அநுக்கிரகத்தின் காலத்தை பார்வோன் பயன்படுத்திக் கொள்ளாமல் இருந்திருந்தால் என்ன நேர்ந்திருக்கும் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள் அவனும் அவனுடைய ஜனங்களும் அழிந்துப் போயிருப்பார்களே!
அநுக்கிரகக்காலத்தை தாண்டி பஞ்சகாலம் வருகிறது. “தேசத்தின்மேல் பஞ்சத்தை அனுப்பும் நாட்கள் வரும்; ஆகாரக் குறைவினால் உண்டாகிய பஞ்சமல்ல, ஜலக்குறைவினால் உண்டாகிய தாகமுமல்ல, கர்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சத்தை அனுப்புவேன்” என கர்த்தர் அறிவித்திருக்கிறாரே (ஆமோஸ் 8:11). ஆகவே, இந்த அநுக்கிரக காலத்திலே ஆத்துமாவுக்கு தேவையான இரக்கத்தையும் கிருபையையும் கர்த்தரிடத்திலிருந்து பெற்றுக்கொள்ளுவோமாக. அப். பவுல்: “நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள்” (எபே. 5:16) என்று எழுதுகிறார்.
ஒரு முறை ஒரு வாலிபன் எதிர்பாராதபடி ஒரு கொலை வழக்கில் சிக்கிக் கொண்டான். நீதிமன்றம் அவனுக்கு தூக்குத் தண்டனை விதித்தது. ஆனால் அந்த தேசத்தின் கவர்னர் அவனுடைய கருணை மனுவைப் பரிசீலித்து அவன் குற்றமற்றவன் என்பதை அறிந்து, அவனை விடுதலையாக்கும் பத்திரத்தை கைகளில் எடுத்துக்கொண்டு அவனைக் காணும்படி சிறைச்சாலைக்கு சென்றார்.
அது அந்த வாலிபனுக்கு கிடைத்த அநுக்கிரகத்தின் நாட்கள். கிருபையின் தருணம். ஆனால் அவன் அதை அறிந்துகொள்ளாமல் போதகரைப் போல வந்திருந்த அந்த கவர்னரைப் பார்த்து கோபத்துடன் எரிந்து விழுந்தான். தன் மனகசப்பை எல்லாம் அவர்மேல் பொழிந்தான், “வெளியே போ, நான் உன்னோடு பேச விரும்பவில்லை” என்று சொல்லி அவர் கையிலிருந்த பேப்பரை பிடுங்கி கிழித்தான். அந்தக் கவர்னரோ மிகுந்த துக்கத்தோடு வீடு திரும்பினார்.
சிறை அதிகாரிகள் அந்த வாலிபனிடம் வந்து, “நீ ஏன் அவரை அப்படி தகாத வார்த்தையினால் பேசினாய்? அவர் கவர்னர் அல்லவா? உன்னை மன்னிக்கும்படி மன்னிப்பு பத்திரத்தை கொண்டு வந்தவர் அல்லவா?” என்றார்கள். முடிவில் அவன் தூக்குக் கயிறை நோக்கி நடந்தபோது துக்கத்தோடு “நான் என் கொலைக் குற்றத்திற்காக அல்ல; எனக்குக் கிடைத்த அநுக்கிரக தருணத்தைப் புறக்கணித்தபடியினாலே மரிக்கிறேன்” என்றானாம்.
நினைவிற்கு:- “அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம்” (ஏசா. 53:3).