No products in the cart.
Sep – 29 – உள்ளிந்திரியங்கள்!
“தம்முடைய அம்பறாத்தூணியின் அம்புகளை என் உள்ளிந்திரியங்களில் படப்பண்ணினார்” (புலம். 3:13).
ஒரு தேசத்திற்கு பகை அதன் எதிராளிகளாக இருக்கக்கூடும். யுத்தக் காலத்தில் அந்த எதிரிகள் தங்களுடைய காலாட்படை, குதிரைப்படை, யானைப்படைகளோடு கூட தேசத்தை விழுங்குவதற்கு வரக்கூடும்.
வெளிப்படையாக எதிர்க்கும் அந்த எதிராளிகளின் படையைப் பார்க்கிலும் கொடிய படை ஒன்று உள் தேசத்திலேயே இருக்குமென்றால், அதைப் பார்க்கிலும் ஆபத்தான படை வேறு ஒன்றுமில்லை. அந்த படையை ஐந்தாம்படை என்று சொல்லுவார்கள். அவர்கள் தேசத்தைக் காட்டிக் கொடுக்கும் துரோகிகள்.
இன்றைக்கும் நம்முடைய தேசத்தில் லஞ்சம் வாங்குகிறவர்கள், கடத்தல் பேர்வழிகள், கள்ள நோட்டு வியாபாரிகள், இன மொழி வெறியர்களை தூண்டி விடுபவர்கள் ஆகியோர் ஐந்தாம் படையாக தேசத்திற்குள்ளே இருந்து தேசத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆவிக்குரிய ஜீவியத்திலும் இதை நீங்கள் காணலாம். உங்களுக்கு வெளியரங்கமான விரோதிகளாக துரைத்தனங்களும், அதிகாரங்களும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளும் வான மண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளும் போராடுகின்றன. ஆனால் வெளியரங்கமான இந்த சத்துருக்களைப் பார்க்கிலும் மனுஷனுக்கு உள்ளேயிருந்து அவனுடைய உள்ளிந்திரியங்களிலே போராடுகிற சத்துருக்களுமுண்டு.
அந்த சத்துருக்கள் யார் தெரியுமா? அவைதான் பலவகையான இச்சைகள், கோப வெறிகள், எரிச்சலின் ஆவிகள், முரட்டாட்டங்கள், கீழ்ப்படியாமை ஆகியவைகள். அவைகள் ஒரு மனுஷனுக்கு உள்ளேயேயிருந்து கொண்டு அவனை கறைபடுத்தி தீட்டுப்படுத்துகின்றன. சோதிக்கப்படுகிறவன் அவனவன் தன் சுய இச்சையினால் இழுப்புண்டு சோதிக்கப்படுகிறான். இச்சையானது கர்ப்பம் தரித்து பாவத்தை விளைவிக்கிறது. பாவத்தின் சம்பளம் மரணம் என்று வேதம் சொல்லுகிறது.
உள்ளே இருந்து கிரியை செய்கிற இத்தகையப் பாவங்களைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாயிருக்க வேண்டும். அப். பவுல் எழுதுகிறார், “என் மனதின் பிரமாணத்திற்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு பிரமாணத்தை என் அவயங்களில் இருக்கக் காண்கிறேன்; அது என் அவயவங்களில் உண்டாயிருக்கிற பாவப்பிரமாணத்துக்கு என்னைச் சிறையாக்கிக் கொள்ளுகிறது” (ரோமர் 7:23). உள்ளிந்திரியங்களில் அது கிரியைச் செய்து, பாவத்திற்குட்படுத்தி, குற்ற மனசாட்சி வாதிக்க வழி வகுக்கிறது. வேதம் சொல்லுகிறது, “நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரண சரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்?” (ரோம 7:24).
உள்ளிந்திரியங்களில் கிரியை செய்து போராடுகிற இச்சைகளைக் குறித்து எச்சரிக்கையாய் இருப்பீர்களாக. அன்று சிம்சோன் வெளியரங்கமான பெலிஸ்தியரை முறியடித்தானே தவிர, அவனுக்குள்ளே போராடுகிற இச்சைகளை முறியடிக்க முடியாமல் தவித்தான். அதனால் அவனது இளமை, மேன்மை, அழைப்பு, தேவபெலன் எல்லாவற்றையும் இழந்துபோனான். தேவபிள்ளைகளே, உங்கள் உள்ளிந்திரியங்களை எப்போதும் தேவ சமுகத்தில் நிறுத்தி பரிசுத்தமுள்ளவர்களாகக் காணப்படுவீர்களாக.
நினைவிற்கு :- “நீதியுள்ளவராயிருக்கிற தேவரீர் இருதயங்களையும் உள்ளிந்திரியங்களையும் சோதித்தறிகிறவர்” (சங். 7:9).