No products in the cart.
ஏப்ரல் 19 – நிலைத்திருங்கள்!
“என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்” (யோவா. 15:4).
சில ஆண்டுகளுக்கு முன்பாக வேல்ஸ் தேசத்திலே ஒரு சுரங்கத்தொழிலாளி மிகுந்த பக்திமானாய் இருந்தார். அவர் தேவபிரசன்னத்தை அளவில்லாமல் உணருவதுடன் கர்த்தரோடு முகமுகமாகப் பேசுகிறவராகவும் இருந்தார். அதன் இரகசியத்தை கேட்டபோது அவர் சொன்னது என்ன தெரியுமா?
“ஐயா, நான் ஒவ்வொருநாளும் அமைதியான அதிகாலை நேரத்திலே நீண்டநேரம் கர்த்தருடைய பாதத்தில் செலவழிப்பேன். அதன்பின்பு, ஆண்டவரே, இந்த வாழ்க்கையில் நான் தனிமையாய் நடக்கப் போகிறதில்லை. நீர் என்னோடு என் பங்காளராய் இருக்கிறீர். நாம் இணைந்துதான் இந்த நாளுக்குள் செல்லப்போகிறோம் என்று சொல்லி அன்று நான் செய்யப்போகிற கடமைகள், வேலைகள் எல்லாவற்றிலும் கர்த்தர் பங்காளியாக தன்னோடு இருப்பதாக எண்ணிக்கொண்டே செயல்படுவேன்.
நானும் கர்த்தரும் பங்காளிகளாய் இருக்கிறபடியினால் என் கடமைகள் என்று நான் எதையும் எண்ணுவது இல்லை. எங்கள் கடமைகள் என்று கருதி சிறு சிறு காரியமானாலும் கர்த்தரிடத்தில் ஆலோசனை கேட்பேன். மனுஷனாகிய நான் தேவனாகிய அவரோடு இணைந்திருக்கிறேன்” என்று அவர் சொன்னார்.
கர்த்தரை உங்களுடைய பங்குதாரராய் ஏற்றுக்கொண்டிருக்கிறீர்களா? அவர் உங்கள் பிணையாளி, மத்தியஸ்தர் மட்டுமல்லாமல் உங்கள் பங்காளியுமாயிருக்கிறார். அவர் சர்வ வல்லமையுள்ள தேவனாய் இருந்தபோதிலும் உங்களுடைய ஒவ்வொரு செயலிலும் அக்கறையுள்ளவராய் இருக்கிறார்.
நீங்கள் கர்த்தருடைய கையோடு கைகோர்த்து நடக்கலாம். ஏனோக்கு தேவனோடு சஞ்சரித்தார். அவர் இனிமையான துணையாளராய், பரிசுத்தமான துணையாளராய், மற்றவர்களால் அறியக்கூடாதபடி நம்மோடு தங்கியிருக்கும் துணையாளர்.
“நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்” (சங். 32:8). தேவபிரசன்னத்தை நாம் உணரும்போது பலவேளைகளில் சகோதரனைப்போல அவர் அருகிலே வந்துவிடுகிறார். நண்பனைப்போல மனந்திறந்து பேசுகிறார். அன்புள்ள தகப்பனைப்போல வழிநடத்திச்செல்லுகிறார்.
தாவீது இராஜாவுக்கு ஒரு மேய்ப்பனைப்போல இருந்து, புல்லுள்ள இடங்களுக்கும் அமர்ந்த தண்ணீர்களண்டைக்கும் கொண்டுபோய் சேர்த்தார். அவர் சொல்லுகிறார், “அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய் விடுகிறார். அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்” (சங். 23:2,3).
தேவபிள்ளைகளே, உங்களையும் அவர் வழிநடத்திச்செல்லும்படி அவருடைய பிரசன்னத்தை எப்பொழுதும் உறுதியாய்ப் பற்றிப்பிடித்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு நிமிடமும் நீங்கள் அவரோடும், அவர் உங்களோடும் இருக்கிறார் என்பதை மறந்துபோகாதிருங்கள்.
நினைவிற்கு:- “ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்” (எபி. 2:14).
