No products in the cart.
ஏப்ரல் 18 – தாங்குவேன்!
“நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்” (ஏசா. 41:10).
கர்த்தர் நம்மைத் தாங்குகிறவர். கரம் பிடித்து தாங்கி வழிநடத்துகிறவர். அப்படித் தாங்கும்போதே தன்னுடைய நீதியின் வலதுகரத்தை நமக்கு நேராக நீட்டுகிறார். அன்போடு வழிநடத்துகிறார்.
கடந்த வருடங்களில் எல்லாம் அவர் நம்மை கரம் பிடித்து வழிநடத்தினார். அவருடைய கரத்திலிருந்து நம்மை யார் பறித்துக்கொள்ள முடியும்? அவருடைய கரத்தில் இருந்து யார் வழுவிச்செல்லமுடியும்? கரம் பிடிக்கும்போதே நம்முடைய உள்ளத்திலே ஆறுதலும் தேறுதலும் உண்டாகிறது. ஆத்துமாவிலே மனமகிழ்ச்சி உண்டாகிறது.
தாவீது இராஜா தன் அனுபவத்தை எழுதும்போது, “அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதையில் நடத்துகிறார்” (சங். 23:3) என்று எழுதுகிறார்.
கர்த்தருடைய வலதுகரம் உங்களைப் பிடித்திருக்கிறதை தியானித்துப்பாருங்கள். “நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜுவாலை உன்பேரில் பற்றாது” என்று கர்த்தர் வாக்களிக்கிறார் (ஏசா. 43:2).
கர்த்தர் இங்கே வெறுமனே கரம் என்று சொல்லாமல் வலதுகரம் என்று சொல்லுகிறார். இடதுகரத்தைப் பார்க்கிலும் வலதுகரம் விசேஷமானது. பெலனுள்ளது. திருமணமாகும்போது பெண்ணின் வலதுகையைப் பிடித்து மாப்பிள்ளையின் வலதுகையில் கொடுப்பார்கள். கர்த்தர் நம்முடைய ஆத்தும மணவாளனாய் இருக்கிறார். அவர் தமது வலதுகரத்தினால் நம்மைப் பிடித்திருக்கிறார்.
இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்து பரலோகத்திற்கு சென்றபோது அவர் பிதாவின் இடதுபக்கத்தில் உட்காரவில்லை. வலதுபாரிசத்திலேயே உட்கார்ந்தார். அதுபோல நாம் ஜெயம்கொண்டு பரலோக இராஜ்யத்துக்கு செல்லும்போது கிறிஸ்துவின் வலதுபாரிசத்திலேயே அமர்ந்திருப்போம். கர்த்தர் சொல்லுகிறார், “நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன்” (வெளி. 3:21).
கர்த்தருடைய கரம் பெலனுள்ள கரம். உங்களை ஏற்ற காலத்தில் உயர்த்தும் கரம். ஆகவே எப்பொழுதும் அவருடைய பலத்த கரத்துக்குள் அடங்கியிருங்கள். எந்நிலையிலும் எந்நாளும் நம்மைக் காக்கிற அந்த பலத்த கரங்களுக்குள்ளே நாம் அமர்ந்துகொள்ளுவோமாக! அப்பொழுது எந்த தீவினையும் நம்மை அணுகாது.
கர்த்தர் சொல்லுகிறார், “நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னை பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்” (ஏசா. 41:10). தேவபிள்ளைகளே, ஆபத்துக்காலத்தில் அவரை நோக்கிக்கூப்பிடும்போதெல்லாம் அவருடைய கரம் நீட்டி நம்மைத் தூக்கியெடுத்து நிலைநிறுத்தவில்லையா?
நினைவிற்கு:- “என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்; உன் மதில்கள் எப்போதும் என் முன் இருக்கிறது” (ஏசா. 49:16).
