No products in the cart.
ஏப்ரல் 15 – சத்தியமுள்ளவர்!
“பிலதெல்பியா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: பரிசுத்தமுள்ளவரும், சத்தியமுள்ளவரும், தாவீதின் திறவுகோலை உடையவரும், ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் திறக்கிறவரும், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்குப் பூட்டுகிறவருமாயிருக்கிறவர் சொல்லுகிறதாவது:” (வெளி. 3:7).
நாம் கடிதங்களை எழுதும்போது பொதுவாக, “என் அன்புள்ள அம்மாவுக்கு, உங்கள் அன்பை மறவாத மகன் எழுதுவதாவது” என்பதுபோல் ஆரம்பிக்கிறோம்.
ஆனால், கர்த்தர் நமக்கு எழுதுகிற நிரூபத்திலே தம்மைக்குறித்து சில ஆழமான சத்தியங்களைக் குறிப்பிட்டு எழுதுகிறார். இங்கே தன்னை அவர் அறிமுகம் செய்யும்போது, “பரிசுத்தமுள்ளவரும், சத்தியமுள்ளவரும்” என்று குறிப்பிடுகிறார். ஆம், பரிசுத்தமும் சத்தியமும் தேவனுடைய நிரந்தர குணாதிசயங்களாகும்.
நாம் ஆராதிக்கிற தேவன் பரிசுத்தமுள்ளவர். நமக்கு பரிசுத்த வேதத்தை அருளிச்செய்தவர். அவர் நூற்றுக்குநூறு பரிசுத்தமுள்ளவர். நூற்றுக்குநூறு சத்தியமுள்ளவர். பரிசுத்தமுள்ள அவர் பரிசுத்தமான பாதையிலே வாழும்படி நமக்கு உதவி செய்கிறவர். சத்திய வழியிலே நடப்பதற்கு சத்திய வேதாகமத்தை அருளிச்செய்தவர் அவர்.
கி.பி. 4-ம் ஆண்டில் முதல்முதலாக இஸ்ரவேல் தேசத்திலே கிறிஸ்தவ ஆலயம் கட்டப்பட்டபோது அந்த ஆலயத்தின்மேலே அன்றைக்கு இருந்த கிறிஸ்தவர்கள் ஒரு வசனத்தை எழுதி வைத்தார்கள். அவ்வழியே போவோரும் வருவோரும் வாசிக்கும்படி அவ்வசனம் பளிச்சென காட்சியளித்தது.
ஆனால், சில வருடங்களுக்குப்பிறகு அந்த தேசத்தை இஸ்லாமியர்கள் கைப்பற்றியபோது, அந்த கிறிஸ்தவ ஆலயத்தை குதிரைலாயமாக மாற்றிவிட்டார்கள். மேலே இருந்த வசனத்தை சாந்து போட்டு பூசி முற்றிலுமாய் மறைத்தார்கள். பலவருடங்களுக்குப் பிறகு ஒருநாள் பூசப்பட்டிருந்த சாந்து கீழே கொட்டியது.
பழைய வசனம் மீண்டும் வெளியே தெளிவாகத் தெரிந்தது. எல்லோரும் அந்த வசனத்தை ஆர்வமாய் வாசித்தார்கள். “கர்த்தருடைய வார்த்தை உத்தமமும், அவருடைய செய்கையெல்லாம் சத்தியமுமாயிருக்கிறது. அவர் நீதியிலும் நியாயத்திலும் பிரியப்படுகிறார்; பூமி கர்த்தருடைய காருணியத்தினால் நிறைந்திருக்கிறது” (சங். 33:4,5) என்ற அந்த வசனம் அங்கே பிரகாசமாகத் தெரிந்தது.
வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும் ஆண்டவருடைய வார்த்தைகள் மாறாதவையல்லவா? அவர் நித்தியமானவர், சத்தியமானவர், பரிசுத்தமுள்ளவர். கர்த்தருடைய சத்தியமான வசனங்கள் நமக்குள்ளே பரிசுத்தத்தைக் கொண்டுவரக்கூடியது. பார்ப்பதற்கு மற்ற உலக புத்தகங்களைப்போல பேப்பரிலே மையினால் அந்த வசனங்கள் அச்சிடப்பட்டிருந்தாலும் கர்த்தருடைய சத்திய வசனத்துக்குள் ஆவி இருக்கிறது, ஜீவன் இருக்கிறது.
ஆகவே, அது ஆத்துமாக்களை உயிர்ப்பிக்கிறது, பேதையை ஞானியாக்குகிறது, வியாதிகளைக் குணமாக்குகிறது. மாத்திரமல்ல, அவருடைய வசனங்கள் பரிசுத்தமுள்ளதாகவும் விளங்குகிறது. தேவபிள்ளைகளே, வேதவசனத்தைப் பின்பற்றி நடவுங்கள். அது உங்களுடைய கால்களுக்குத் தீபமும், பாதைக்கு வெளிச்சமுமாய் இருக்கட்டும்.
நினைவிற்கு:- “நான் உலகத்தானல்லாததுபோல, அவர்களும் உலகத்தாரல்ல. உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்” (யோவா. 17:16,17).
