No products in the cart.
ஏப்ரல் 11 – அறுவடையின் மழை!
“சீயோன் குமாரரே, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்; அவர் தக்கபடி உங்களுக்கு முன்மாரியைக் கொடுத்து, உங்களுக்கு முன்மாரியையும் பின்மாரியையும் ஏற்கனவே வருஷிக்கப்பண்ணுவார்” (யோவே. 2:23).
இஸ்ரவேல் தேசத்திலே இரண்டுவிதமான பருவ மழை உண்டு. ஒரு மழை முன்மாரி என்று அழைக்கப்படுகிறது. அடுத்த மழை பின்மாரி என்று அழைக்கப்படுகிறது.
பொதுவாக, விதைக்கிற காலம் வரும்போது முதல் மழையாக முன்மாரி பொழியும். உழவர்கள் எல்லோரும் கலப்பையை எடுத்துக்கொண்டு உழ ஆரம்பிப்பார்கள். தரிசு நிலங்களைப் பண்படுத்துவார்கள். இன்னும் தொடர்ந்து சில நாட்கள் மழை பெய்யும்போது விதை விதைப்பார்கள். நாற்று நடுவார்கள். முன்மாரி பெய்த மழையினால் பயிர்கள் நன்றாக வளரும்.
அதைத்தொடர்ந்து சில மாதங்களுக்குப்பிறகு பின்மாரி மழை பெய்ய ஆரம்பிக்கும். அந்த மழையினால் வளர்ந்த பயிர்கள் நல்ல பலனைக் கொடுத்து அறுவடைக்கு ஆயத்தமாகிவிடும். எவ்வளவுக்கெவ்வளவு பின்மாரி பெய்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு நல்ல மகசூலை, நல்ல தானியத்தை, அறுவடையிலே பெறுவார்கள். அவர்கள் விதைத்தவைகள் முப்பதும், அறுபதும், நூறுமாக அமோகமான பலனைக் கொடுக்கும்.
அந்த பின்மாரி பொழியவில்லை என்றால் நெல், கோதுமை, பார்லி போன்ற பயிர்கள் எல்லாம் பதரால் நிரம்பியிருக்கும். தானியமணிகள் அங்கே காணப்பட முடியாது. பெரும்பாலான பயிர்கள் தீய்ந்துபோகும். கர்த்தர் தம்முடைய ஜனத்தின்மேல் அன்புகூர்ந்து இஸ்ரவேலின்மேல் ஒழுங்கான முன்மாரியையும், பின்மாரியையும் கட்டளையிட்டு வந்தார்.
அதுபோலத்தான் சபை வரலாற்றிலும் முன்மாரியும் பின்மாரியும் உண்டு. ஆதி அப்போஸ்தலர்கள் நாட்களிலே முன்மாரி பெய்தது. சபைகள் நிறுவப்பட்டன. மிஷனெரி பிரயாணங்கள் ஆரம்பமாயின. பெரிய எழுப்புதல் உண்டானது. அதன்பின்பு உலகத்தின் முடிவாகிய இந்த கடைசி நாட்களில் பின்மாரி மழை பெய்ய ஆரம்பித்திருக்கிறது. பின்மாரி பெய்கிறதென்றால் நாம் உலகத்தின் அறுவடையின் நாட்களில் நெருங்கியிருக்கிறோம் என்பதுதான் அர்த்தம்.
இயேசு சொன்னார், “அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; ஆகையால் அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள். புறப்பட்டுப்போங்கள்; ஆட்டுக்குட்டிகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்” (லூக். 10:2,3).
1947ம் ஆண்டு ஸ்மித்விகிள்ஸ்வொர்த் என்ற பக்தன் தீர்க்கதரிசனமாக, ‘தேவனுடைய ஒரு அசைவாடுதல் வரப்போகிறது. ஆவியானவர் பலத்த பின்மாரியோடு தேவ ஜனங்களை சந்திக்க வருவார்’ என்று முன்னுரைத்தார். அவர் உரைத்த தீர்க்கதரிசனம் நம்முடைய நாட்களில் நிறைவேறிக்கொண்டிருக்கிறது.
கர்த்தர் தேசமெங்கும் பெரிய அறுவடையைக் கட்டளையிட்டிருக்கிறார். பெரிய பின்மாரி ஊற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது. தேவபிள்ளைகளே, நாம் வருகைக்காக ஆயத்தப்படவேண்டிய கடைசி நிமிட நேரத்தில் நின்றுகொண்டிருக்கிறோம்.
நினைவிற்கு:- “நிலம் உலகம்; நல்ல விதை ராஜ்யத்தின் புத்திரர்; களைகள் பொல்லாங்கனுடைய புத்திரர்; அவைகளை விதைக்கிற சத்துரு பிசாசு; அறுப்பு உலகத்தின் முடிவு; அறுக்கிறவர்கள் தேவதூதர்கள். ஆதலால், களைகளைச் சேர்த்து அக்கினியால் சுட்டெரிக்கிறதுபோல, இவ்வுலகத்தின் முடிவிலே நடக்கும்” (மத். 13:38-40).
