No products in the cart.
ஏப்ரல் 09 – வானத்தின் மதகுகள்!
“நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோ?” (மல். 3:10).
வானம் திறக்கப்பட்ட பல சந்தர்ப்பங்களை வேதத்திலே நாம் வாசிக்கமுடியும். முதல் முறையாக நோவாவின் நாட்களிலே வானம் திறக்கப்பட்டது. வானத்தின் மதகுகளும் திறவுண்டன (ஆதி. 7:11). நாற்பதுநாள் இரவும் பகலும் பூமியின்மேல் மழை பெய்துகொண்டேயிருந்தது. மழை பெய்யாமலிருந்தால் பேழை உயர எழும்பவே முடியாது. குன்றுகளுக்குமேலாய், மலைகளுக்குமேலாய் பேழை உயர்த்தப்படவேண்டுமானால் பெருமழை பெய்தே ஆகவேண்டும்.
அதுபோல சபையாகிய பேழை கிறிஸ்துவினுடைய வருகையிலே பரலோகத்திற்கு உயர்த்தப்படவேண்டுமானால் அபிஷேகமாகிய பெருமழை அவசியம் தேவை. வானத்தின் மதகுகள் திறக்கப்படவேண்டியது அவசியம். ஆவியானவர்தாமே அந்த மழையைப்போல இறங்கி வருவார்.
கடைசி நாட்கள் நெருங்க நெருங்க, அபிஷேகம் அதிகமதிகமாய் பெருகிக்கொண்டிருக்கிறது. இன்னும் பல ஆயிரமடங்கு இந்த அபிஷேகம் பெருகும். திடீரென்று மகா விரைவாக வானத்தின் மதகுகள் திறக்கப்பட்டதுபோல தேவனுடைய அளவற்ற அபிஷேகம் தேசமெங்கும் பலமாய் ஊற்றப்படும். அதன் பின்புதான் கர்த்தருடைய பிள்ளைகள் அவருடைய வருகையில் எடுத்துக்கொள்ளப்படுவார்கள்.
பார்வோன் கண்ட சொப்பனத்திலே இரண்டு பகுதிகள் இருந்தன. ஒரு பகுதி ஏழு ஆண்டுகள் செழுமையான வருடங்கள். கர்த்தர் அதை ஏழு செழுமையான கதிர்களுக்கும் செழுமையான மாடுகளுக்கும் ஒப்பிட்டுச்சொன்னார். அதற்கு அடுத்த ஏழு ஆண்டுகள் கொடிய பஞ்சம் ஏற்படும். தேசத்திலுள்ள செழுமை மறக்கப்பட்டுப்போகும். அந்த ஏழு ஆண்டுகளும் அந்திக்கிறிஸ்துவினுடைய ஆட்சிக்கு அடையாளமானதாகும்.
அந்த நாட்களிலே வசனம் கேட்கக்கூடாத கொடிய பஞ்சம் வரும். ஆனால், அந்திக்கிறிஸ்துவினுடைய ஆட்சிக்கு முன்பாக தேசமெங்கும் மழை பெய்து செழுமையான, பசுமையான நாட்களை கர்த்தர் கட்டளையிடுவார். இந்த அபிஷேக மழை பெய்யும்போதுதான் செழுமையான ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள் பூமியின்மேல் வந்து இறங்கும்.
உலகம் அந்திக்கிறிஸ்துவை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிற நாட்களிலே நாம் அபிஷேக மழை பெருகுகிறதை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். கர்த்தருடைய சந்நிதியிலிருந்து இளைப்பாறுதலின் காலங்கள் கண்டிப்பாக வந்தே தீரும்.
இந்த இளைப்பாறுதலின் காலங்கள் என்று சொல்லப்படுவதை ஒருசில மொழிபெயர்ப்புகள் புத்துணர்வின் காலங்கள் என்று சுட்டிக்காட்டுகின்றன. வானத்தின் மதகுகள் திறக்கப்படப்போகிறது. அபிஷேக பெருமழை சொரியப்போகிறது. மாம்சமான யாவர்மேலும் கர்த்தர் தமது ஆவியை ஊற்றப்போகிறார். இந்த அபிஷேக மழை இறங்கிவருவதை யாராலும் தடுத்து நிறுத்தவேமுடியாது. தேவபிள்ளைகளே, இன்றே அதைப் பெற்றுக்கொள்ளுங்கள். பெரிய எழுப்புதலை ஆவலோடு எதிர்பாருங்கள். இந்த அபிஷேகமே கர்த்தருடைய வருகைக்கு உங்களை ஆயத்தப்படுத்தும்.
நினைவிற்கு:- “மேகங்கள் நிறைந்திருந்தால் மழையைப் பூமியின்மேல் பொழியும்” (பிர. 11:3).
