No products in the cart.
ஏப்ரல் 07 – இரு மலர்கள்!
“நான் சாரோனின் ரோஜாவும், பள்ளத்தாக்குகளின் லீலிபுஷ்பமுமாயிருக்கிறேன்” (உன். 2:1).
பகலிலே மலரும் மலர்களும் உண்டு. இரவிலே மலரும் மலர்களும் உண்டு. சாரோனின் மேட்டிலுள்ள ரோஜா பகற்காலத்தில் மலரக்கூடியது. அது பகலெல்லாம் அழகாக மலர்ந்து வாசனையைப் பரிமளிக்கிறது. அதே நேரம், இரவு நேரத்தில் மலருகிற லீலிபுஷ்பம் மற்றும் மல்லிகை ஆகியவை இரவு நேரத்திலும் தங்கள் இனிய வாசனையை வீசுகின்றன. இருண்ட நேரத்தை இவை மனமகிழ்ச்சிக்குரிய நேரமாய் மாற்றிவிடுகின்றன.
“பகற்காலமிருக்குமட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும்; ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது” (யோவா. 9:4) என்றார் இயேசு.
பகற்காலம் என்பது கிருபையின் காலம். தேசத்தில் சுவிசேஷ வாசல்கள் திறந்திருக்கும் காலம்! அப்படியே அவருக்கு கொடுக்கப்பட்ட கிருபையின் காலத்திலே இயேசுவானவர் கிராமம் கிராமமாக, பட்டணம் பட்டணமாகச் சென்று சுவிசேஷத்தை அறிவித்தார். நன்மை செய்யும்படி சுற்றித்திரிந்தார். நாமும்கூட, நம்முடைய உலக ஓட்டத்தை முடிக்குமுன் சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் திருவசனத்தை ஜாக்கிரதையாய் பிரசங்கம்பண்ணவேண்டுமல்லவா? கர்த்தருக்காக கிரியை செய்யவேண்டுமல்லவா?
இரு மலர்களைப்போலவே ஊழியத்தையும் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம். ஒன்று, வெளியரங்கமாய் பார்க்கக்கூடிய சுவிசேஷ ஊழியம், அடுத்தது, யாரும் பார்க்காதவிதத்தில் அந்தரங்கமான லீலிபுஷ்பம்போல ஜெபிக்கும் ஜெபஊழியம். அந்தரங்கத்திலிருக்கிற பிதாவை நோக்கி இருதயத்தைக் கிழித்துப் போராடி மன்றாடும் விண்ணப்பத்தின் ஊழியம்.
பகலிலே மலரும் மலர்களுக்கெல்லாம் ரோஜாதான் இராஜா. இரவில் மலரும் மலர்களுக்கெல்லாம் லீலியே ராணி. மலர்களைப் பகலில் மலர்வன, இரவில் மலர்வன என்று இரண்டாகப் பிரிப்பதைப்போலவே இயேசுகிறிஸ்துவின் சீஷர்களையும்கூட அந்தரங்கமான சீஷர்கள், வெளியரங்கமான சீஷர்கள் என்று இரண்டு வகையாகப் பிரிக்கலாம். இயேசுவுக்கு வெளியரங்கமான பன்னிரண்டு சீஷர்கள் இருந்தபோதிலும் அந்தரங்கமான சீஷர்களும் இருந்தார்கள். நிக்கொதேமும் (யோவா. 3:9), அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பும் (யோவா 19:38) அந்தரங்கமான மற்றும் இரகசியமான சீஷர்களாயிருந்தார்கள்.
ஆடுகளையும்கூட இயேசு இரண்டாகப் பிரித்தார். ஒன்று தொழுவத்தில் உள்ளவை, மற்றவை தொழுவத்தில் இல்லாதவை. “இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு; அவைகளையும் நான் கொண்டுவரவேண்டும், அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும், அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும்” (யோவா. 10:16) என்று இயேசு சொன்னார்.
ஒரு தனிப்பட்ட கிறிஸ்தவனுடைய வாழ்க்கையிலும்கூட, வெளியரங்கமான வாழ்க்கையும் உண்டு. அதேநேரம், மனுஷர் காணாத அந்தரங்க வாழ்க்கையும் உண்டு. எண்ணங்களில் வாழும் உள்ளான இரகசிய வாழ்க்கையும் உண்டு. தேவபிள்ளைகளே, வெளியிலே ரோஜா புஷ்பமாக காணப்படுகிற நாம், உள்ளான அந்தரங்க வாழ்க்கையிலும் பரிசுத்தம் உள்ள லீலி புஷ்பமாக காணப்படவேண்டும்.
நினைவிற்கு:- “இதோ, உள்ளத்தில் உண்மையிருக்க விரும்புகிறீர்; அந்தக்கரணத்தில் ஞானத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்” (சங். 51:6).
