No products in the cart.
ஏப்ரல் 01 – சாரோனின் ரோஜா!
“நான் சாரோனின் ரோஜாவும், பள்ளத்தாக்குகளின் லீலிபுஷ்பமுமாயிருக்கிறேன்” (உன். 2:1).
இன்று பிதாவாகிய தேவன் உங்கள் ஒவ்வொருவருக்கும் சாரோனின் ரோஜாவைக் கொடுக்க விரும்புகிறார். அது அழகுள்ளதும் வாசனை மிக்கதுமான ரோஜா. அது ஒப்பிடமுடியாத விலையேறப்பெற்ற ரோஜா. இரத்தம் தோய்ந்த ரோஜா. அந்த ரோஜாவே இயேசு இராஜா. வேதம் சொல்லுகிறது, “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்” (யோவா. 3:16).
காட்டுப்புஷ்பங்களைக் கவனித்துப்பாருங்கள். அதே நேரம், சாரோனின் ரோஜாவையும் கருத்தோடும், பயபக்தியோடும் கவனித்துப்பாருங்கள். இயேசு கிறிஸ்து பிரகாசமான விடிவெள்ளி நட்சத்திரம் என்று அழைக்கப்படுகிறார். ஆத்தும நேசர் என்று அழைக்கப்படுகிறார். எங்கேதியின் மருதோன்றிப் பூங்கொத்து என்று அழைக்கப்படுகிறார்.
வெள்ளைப்போளச்செண்டு என்று அழைக்கப்படுகிறார். ஊற்றுண்ட பரிமளத்தைலம், இனிமையான கிச்சிலிமரம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறார். வேதத்தில் இந்த ஒரு இடத்தில்மாத்திரம் அவர், “சாரோனின் ரோஜா” என்று அழைக்கப்படுகிறார். அவரைக் கவனித்துப்பாருங்கள். இயேசு எப்படிப்பட்டவர்? “என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்; பதினாயிரம்பேர்களில் சிறந்தவர்” (உன். 5:10). “அவர் முற்றிலும் அழகுள்ளவர்” (உன். 5:16).
ஒரு மாணவன் தனது ஆசிரியருக்கு தன் தோட்டத்திலிருந்து தினந்தோறும் நிறைய ரோஜாப்பூக்களை கொண்டுவந்து அவருடைய பள்ளிக்கூட மேஜையை அலங்கரிப்பான். அந்த ஆசிரியர் பணியிலிருந்து மாறி வேறு வேலைக்குச் சென்றபிறகும்கூட அந்த ரோஜாக்களை அவருக்குக் கொண்டுவருவான். அதைப் பார்க்க பார்க்க அவர் மனம் மகிழும். ஆனால் ஒருநாள் ஏதோ விபத்து நேர்ந்து, அந்த மாணவன் மரித்துப்போனான். அப்போது இந்த ஆசிரியர், ‘ஐயோ, நான் அவனுக்கு சாரோனின் ரோஜாவாகிய இயேசுவைக் கொடாமல்போனேனே’ என்று வருந்தினார்.
இயேசு வெறும் ரோஜாவாயிராமல் சாரோனின் ரோஜாவாயிருக்கிறார். “சாரோன்” என்ற சொல்லுக்கு திறந்தவெளி என்பது அர்த்தமாகும். மலைபோன்ற உயர்ந்த மேட்டுப்பகுதியிலுள்ள திறந்தவெளியிலுள்ள ரோஜாவை எல்லோரும் பார்க்கமுடியும். கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என எல்லாத் திசையிலுள்ளவர்களும், ஏழைகளானாலும் பணக்காரர்களானாலும் அருகில் வந்து அந்த ரோஜாவின் வாசனையையும், விரிந்த வண்ண இதழ்களின் அழகையும் அனுபவிக்கமுடியும்.
இயேசு எல்லோருக்கும் பொதுவானவர். அவர் நகர வாசலுக்குப் புறம்பே பாடுபட்டவர் (எபி. 13:12). முழு உலகத்துக்காக தம்முடைய இரத்தத்தை சிந்திக்கொடுத்தவர். இன்றைக்கும் அவர் சாரோனின் ரோஜாவாக வாசனையை பரிமளித்துக்கொண்டேயிருக்கிறார்.
தேவபிள்ளைகளே, சாரோனின் ரோஜாவாக திறந்தவெளியில் இயேசு இருப்பதால் பாவிகளோ, வியாதியஸ்தரோ யாரானாலும் அவரண்டை சென்று விடுதலையையும் சமாதானத்தையும் பெறமுடியும். அதற்காகவே அவர் உங்களையும் அன்போடு அழைக்கிறார்.
நினைவிற்கு:- “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” (மத். 11:28).
