No products in the cart.
மார்ச் 24 – நீடிய சாந்தமுள்ளது!
“அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது” (1 கொரி. 13:4).
அன்பின் குணாதிசயங்களை வரிசைப்படுத்தி அதன் பதினைந்து இனிய சுபாவங்களை அப். பவுல் இங்கு குறிப்பிடுகிறார். அவை அழகிய ஒரு தோட்டத்தின் நறுமணமுள்ள பதினைந்து மலர்களாக வாசனையைப் பரிமளிக்கின்றன. அன்புதான் ஒரு மனிதனுக்கு இனிமையான சுபாவங்களைத் தந்து நற்கந்தமாய் வாசனை வீசச்செய்கிறது.
அன்பின் குணாதிசயங்கள் ஏராளமானவை. அவற்றில், அன்பு நீடிய சாந்தமுள்ளது என்பதே முதன்மையானது. அன்பு இருந்தால் எப்படிப்பட்ட கொடுமையையும், தீங்கையும், பொறுமையாய் சகிக்கமுடியும். அன்பிருக்கும்போது ஒரு கன்னத்தில் அறைகிறவர்களுக்கு மறு கன்னத்தைக் காண்பிக்கமுடியும். அன்பு பழிக்குப்பழி வாங்க விரும்புவதில்லை. அது பொறுமையாய் சகிக்கவைக்கும். பொறுமையாய் சகிப்பது என்பது கோழைத்தனமாகாது. அது ஒரு பெருந்தன்மையான தெய்வீக குணமாகும்.
ஆபிரகாம் லிங்கனுக்கு அரசியலில் ஒரு பெரிய விரோதி இருந்தான். அவன் பெயர் ஸ்டான்ஸ்டன். புகழ் பெற்ற லிங்கனை கீழ்த்தரமான கோமாளி என்று அழைத்து அவன் ஏளனப்படுத்தினான். ஆதி மனித குரங்கு என்றும் கேலி செய்தான். லிங்கனைத் தாக்கி எவ்வளவோ பேசினான் மற்றும் எழுதினான். ஆனால் ஆபிரகாம் லிங்கனோ ஒரு வார்த்தையும் அவனுக்கு விரோதமாய்ப் பேசவில்லை.
யுத்தகாலம் வந்தது. ஆபிரகாம் லிங்கன் தன்னை எதிர்த்த ஸ்டான்ஸ்டனையே யுத்த மந்திரியாக நியமித்து அவனுக்கிருந்த திறமைகளை மெச்சிப்பேசினார். அந்த அன்பின் செயல் ஸ்டான்ஸ்டனின் உள்ளத்தை உடைத்தது. அன்று முதல் தேசத்திற்காகவும், லிங்கனுக்காகவும் முழுபெலத்தோடு உழைக்க ஆரம்பித்துவிட்டான்.
லிங்கன் மரணமடைந்தபோது அவன் மிகவும் தேம்பி அழுது, ‘உலகத்தோற்றமுதல் லிங்கனைப்போல அருமையான, அன்பான ஒரு ஆட்சியாளர் இருந்ததில்லை’ என்று சாட்சி கொடுத்தான். ஆம், அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது. அன்புக்கு அளவில்லாத சகிப்புத்தன்மையும், பொறுமையுமுண்டு.
தன்மீது அன்புசெலுத்தும் காதலனை திருமணம் செய்துகொள்ள தியாகத்தோடு ஒரு பெண் காத்திருப்பாள். தன் கணவன் மனம்திரும்பி தன்னை நேசிக்கமாட்டானா என்று மனைவி ஆவலுடன் காத்திருப்பாள். வெளிதேசம் சென்றிருக்கும் தகப்பன் விரைவில் திரும்பி வரமாட்டாரா என்று பிள்ளைகள் ஏங்கி எதிர்பார்ப்பார்கள். அன்பு நீடிய சாந்தமுள்ளது. ஆகையால் எதிர்பார்ப்போடு பொறுமையாய் காத்திருக்கச்செய்கிறது.
யாக்கோபு ராகேலின்மேல் அளவில்லாத அன்புவைத்தபடியால் அவளுக்காக தியாகத்துடன் அடிமை வேலையைக்கூடச் செய்ய ஆயத்தமாயிருந்தான். பதினான்கு ஆண்டுகள் பொறுமையாய் தன் மாமனாரைச் சேவித்தான். “இஸ்ரவேல் ஒரு பெண்ணுக்காக ஊழியஞ்செய்து, ஒரு பெண்ணுக்காக ஆடு மேய்த்தான்” (ஓசி. 12:12) என்று வேதம் சொல்லுகிறது.
கர்த்தரும்கூட நம்மேல் அன்புவைத்து, நம் மனம்திரும்புதலுக்கு நீடிய பொறுமையுடன் காத்திருக்கிறார். நமக்காக ஜீவனைக் கொடுத்தவர் நம்மேல் கரிசனையில்லாமல் இருப்பாரோ? நமக்காக இரத்தம் சிந்தினவர் நம்மேல் அன்பு செலுத்தாமல் இருப்பாரோ? தேவபிள்ளைகளே, நமது ஆண்டவரின் சாந்தகுணத்தையும், அன்பையும் நாம் சுதந்தரித்துக்கொள்ளுவோமா?
நினைவிற்கு:- “ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்” (2 பேது. 3:9).
