No products in the cart.
மார்ச் 22 – அன்பு எனக்கிராவிட்டால்!
“நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம்போலவும் ஓசையிடுகிற கைத்தாளம்போலவும் இருப்பேன்” (1 கொரி. 13:1).
அன்பு என்பது ஒரு தெய்வீக மொழியாகும். இம்மொழியை ஊமையரும் பேசலாம். செவிடரும் புரிந்து கொள்ளலாம். அன்பு தியாகம் செய்கிறது. அன்பு ஊக்குவிக்கிறது. அன்பு தட்டியெழுப்புகிறது. அன்பு அழியாத அடிச்சுவடுகளை உள்ளத்தில் ஆழமாய் பதித்துவிடுகிறது. முடிவில் அன்பே வெற்றிசிறக்கிறது.
மனித சமுதாயத்தை கட்டுக்கோப்புக்குள் வைத்திருக்கும் ஒரே சக்தி அன்புதான். பெற்றோர் தங்கள் குழந்தைகளின்மேல் வைத்திருக்கும் அன்புக்காக தங்களுடைய வசதிகளையும், ஓய்வு நேரங்களையும், செல்வங்களையும் தியாகம் செய்யத்தயங்குவதில்லை.
பள்ளியிலிருந்து வீடு திரும்பும் சிறுமி, தன் தாய்க்கு மலர் ஒன்றை மகிழ்ச்சியோடு தந்து தன் அன்பைத் தெரிவிக்கிறாள். தாய் அதைக்கண்டு பூரித்துப்போகிறாள். அன்பு அவர்களுக்குள் ஆழமான உறவை ஏற்படுத்திவிடுகிறது.
கணவன் இரவும் பகலும் பாடுபட்டு ஓர் அழகிய வீட்டைக் கட்டுகிறான். தன் அன்பு மனைவியின் பெயரை அவ்வீட்டுக்குச் சூட்டி, இந்த வீடு உனக்காகவே என்று சொல்லி தன் அன்பை செயலில் வெளிப்படுத்துகிறான். மனைவியும் அளவில்லா மகிழ்ச்சியடைகிறாள். நாம் பலவகை அன்புகளின் மத்தியில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். பெற்றோர் அன்புடன் நம்மை வளர்க்கிறார்கள். நமக்கு நண்பர்களின் அன்பும் உண்டு.
பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது சக மாணவர்கள் நம்மேல் அன்பு செலுத்துகிறார்கள். இன்னும் உறவினர்களின் அன்பும் நம்மேல் பொழியப்படுகிறது. சில வகையான அன்பு கொஞ்சகாலம் மட்டுமே நம்மை மகிழ்விக்கக்கூடியதாயிருக்கிறது. சில சுயநல அன்பு வகைகள் வஞ்சகமாக ஒட்டிக்கொள்கின்றன. சில பொய்யான அன்பு வகைகளை நம்பி நாம் வேதனையடைவதும் உண்டு.
உலகப்பிரகாரமான அன்புகளையெல்லாம் தராசின் ஒரு பக்கத்தில் வைத்துவிட்டு 1 கொரி. 13-ஆம் அதிகாரம் விளக்கும் தெய்வீக அன்பை மறுபக்கத்தில் வைத்தால், தெய்வீக அன்பே கூடுதலாக இருப்பதைக் காணலாம். மற்ற அன்புகள் ஒருபோதும் கிறிஸ்துவின் அன்போடு ஒப்பிடத்தக்கவையல்ல.
எல்லாம் தனக்கு வேண்டும் என்றும், மற்றவர்கள் தனக்கு கொடுக்கவேண்டும் என்றுமே சுயநலமான அன்பு எதிர்பார்க்கிறது. ஆனால் தெய்வீக அன்போ தனக்கு இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று தன்னிடமுள்ள எல்லாவற்றையும் தியாகமாக மற்றவர்களுக்கு வாரி வழங்குகிற ஒன்றாய் இருக்கிறது.
அன்பின் உச்சிதமும், நேசத்தின் ஆழமும் கிறிஸ்துவில்தான் வெளிப்பட்டன. காணாமற்போன ஆட்டை மேய்ப்பன் பாசத்தோடு தேடுவதைப்போல அவர் நம்மைத் தேடி வந்து மீட்டுக்கொண்டார். “ஜீவனைத் தரும் அன்பிலும் பெரிய அன்பு ஒன்றுமில்லை” என்றபடி கல்வாரியிலே தன் ஜீவனைத் தந்து நம்மைத் தம் சொந்தமாக்கினார்.
தேவபிள்ளைகளே, அவரது அன்பு எத்தனை விசேஷமானது!
நினைவிற்கு:- “நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது. ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை” (யோவா. 15:12,13).
