No products in the cart.
மார்ச் 12 – தகப்பனைப்போல அன்பு!
“பாலகனைத் தகப்பன் சுமந்துகொண்டுபோவதுபோல” (எண். 11:12).
நம் அருமை ஆண்டவர் நமக்கு ஒரு அன்புள்ள அருமையான தகப்பனாக இருக்கிறார். என்றென்றைக்கும் அவர் நம்முடைய தகப்பனாய் இருக்கிறதினாலே அவர் நம்முடைய நித்திய பிதா என்று அழைக்கப்படுகிறார் (ஏசா. 9:6).
நித்திய பிதா என்றால் என்ன அர்த்தம்? நேற்றும் இன்றும் என்றென்றும் பிதா என்றுதான் அர்த்தம். நித்திய நித்திய காலமாய் அவரே நமக்குப் பிதாவாய் இருப்பார். அவரை நம்முடைய உள்ளத்தில் தெய்வமாய்க்கொண்டிருப்பது நமக்கு எத்தனை பெரிய பாக்கியம்! அவர் நம்மைச் சுமக்கிற பிதா (எண். 11:12).
முதலாவது, தகப்பன் தன் பிள்ளையைத் தோளின்மேல் வைத்து சுமப்பான். அந்தப் பிள்ளைகள் தங்கள் இரண்டு கால்களையும் தந்தையின் மார்பிலே போட்டுக்கொண்டு அவரது தோளில் கெம்பீரமாய் அமர்ந்து தகப்பனுடைய தலைமுடியை உறுதியாய்ப் பிடித்துக்கொள்ளுவார்கள். தகப்பன் அவர்களைச் சுமந்துகொண்டு நடப்பான். பிள்ளைகள் யானையின்மேல் பவனி வருவதைப்போல தகப்பனுடைய தோளில் அன்போடு பவனி வருவார்கள். நம் அருமை ஆண்டவர் நம்மை நடக்கவைத்து அழைத்துச்செல்லுகிறவர் அல்ல; சுமந்துகொண்டு செல்லுகிறவர்!
இரண்டாவதாக, தகப்பன் தன்னுடைய பிள்ளைகளுக்கு ஆலோசனை கூறுகிறான். வேதம் சொல்லுகிறது: “தகப்பன் தன் பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல, நாங்கள் உங்களில் ஒவ்வொருவனுக்கும் புத்தியும் தேறுதலும் எச்சரிப்பும் சொன்னதை அறிந்திருக்கிறீர்கள்” (1 தெச. 2:12). ஆம், தேவன் தம்முடைய ஊழியர்களின்மூலமாய் நமக்கு ஆலோசனை கொடுக்கிறார். வேதவசனங்கள் மூலமாய் ஆலோசனை கொடுக்கிறார். நம்முடைய மேன்மையையே தன் நோக்கமாய்க்கொண்டிருக்கிற அவருடைய ஆலோசனைகள் அனைத்தும் இன்பமானவை, அருமையானவை, நேர்த்தியானவை.
மூன்றாவதாக, தகப்பன் தன்னுடைய பிள்ளைகளைத் திருத்துகிறான். பிள்ளைகளுடைய நெஞ்சில் மதியீனம் ஒட்டியிருக்கும். அதை பிரம்பால் திருத்தவேண்டியது தகப்பனுடைய கடமை. வேதம் சொல்லுகிறது, “தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல, கர்த்தரும் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனைச் சிட்சிக்கிறார்” (நீதி. 3:12).
“நம்முடைய சரீரத்தின் தகப்பன்மார்கள் நம்மைச் சிட்சிக்கும்போது, அவர்களுக்கு நாம் அஞ்சி நடந்திருக்க, நாம் பிழைக்கத்தக்கதாக ஆவிகளின் பிதாவுக்கு வெகு அதிகமாய் அடங்கி நடக்கவேண்டுமல்லவா? அவர்கள் தங்களுக்கு நலமென்று தோன்றினபடி கொஞ்சக்காலம் சிட்சித்தார்கள்; இவரோ தம்முடைய பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும்பொருட்டு நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார்” (எபி. 12:9,10).
நான்காவதாக, தகப்பன் தன் பிள்ளைகளின்மேல் கரிசனையுள்ளவனாக இருக்கிறான் (யோபு 31:18). உலகப்பிரகாரமான தகப்பன்மார் தங்கள் பிள்ளைகளின் நலனிலே அதிக அக்கறையுள்ளவர்களாகவும், அவர்களுடைய எல்லாத் தேவைகளையும் சந்திக்கிறவர்களாகவும் இருக்கிறார்கள். தேவபிள்ளைகளே, நம்மேல் அன்புள்ள பரமபிதா அதிகமாய் நம்மேல் கரிசனையுள்ளவராகவும் இருக்கிறார். கர்த்தரை நித்திய பிதாவாகக்கொண்டிருப்பது எத்தனை பெரிய பாக்கியம்!
நினைவிற்கு:- “தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார்” (சங். 103:13).
