No products in the cart.
மார்ச் 07 – முடிவுபரியந்தம் அன்பு!
“தம்முடையவர்களிடத்தில் அன்புவைத்தபடியே, முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில் அன்புவைத்தார்” (யோவா. 13:1).
இயேசுவின் அன்பு விசேஷமானது! ஏனென்றால் அவர் முடிவுவரையிலும் நம்மேல் அன்பு செலுத்துகிறார். முடிவுபரியந்தமும் என்ற வார்த்தையை சற்றே சிந்தித்துப்பாருங்கள். முடிவுபரியந்தமும் என்பதற்கு கடைசிவரையிலும், என்றென்றுமாக, நித்திய நித்தியமாக என்பதே அர்த்தமாகும்.
முடிவுபரியந்தமும் என்ற வார்த்தை அவருடைய ஆழ்ந்த அன்பை நமக்குத் தெரியப்படுத்துகிறது. மட்டுமல்ல, நம்மோடுகூட அவர் செய்த உடன்படிக்கையையும் ஞாபகப்படுத்துகிறது. எந்த ஒரு மனுஷனும் கல்வாரியண்டை வந்து, “ஆண்டவரே நீர் எனக்காக மரித்தீர்; என்னுடைய பாவங்களால் மரித்தீர்; இப்பொழுது என்னைக் கழுவி சுத்திகரித்துக்கொள்ளும்” என்று வேண்டிக்கொள்ளும்போது, அவர் மனமிரங்கி பாசத்தினால் நிறைந்து, அவனோடு நித்திய உடன்படிக்கை செய்துகொள்ளுகிறார்.
கர்த்தர் ஒரு மனுஷன்மேல் வைக்கிற அன்பு நித்தியமானதும், மாறாததுமானதாகும். அதை யாராலும் ஒருபோதும் உடைக்கவே முடியாது. உலகத்தில் பல வகையான அன்புகளை நாம் பார்த்தாலும் கல்வாரிச் சிலுவையிலே வெளிப்பட்ட அந்த தியாகமான அன்பே நம் உள்ளத்தை உருக்குகிற அன்பாயிருக்கிறது. கல்வாரி நாயகனாம் கிறிஸ்து நம்மை நேசிக்கிற அன்பை வேறு எந்த அன்போடும் ஒப்பிடவே முடியாது.
“காட்டுமரங்களுக்குள்ளே கிச்சிலிமரம் எப்படியிருக்கிறதோ, அப்படியே குமாரருக்குள்ளே என் நேசர் இருக்கிறார்; அதின் நிழலிலே வாஞ்சையாய் உட்காருகிறேன், அதின் கனி என் வாய்க்கு மதுரமாயிருக்கிறது” (உன். 2:3). கிறிஸ்து பூமிக்கு இறங்கி வந்து, மனுஷருடைய அன்புக்காக ஏங்கியபோது அவருடையவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளாமல் அசட்டைசெய்தார்கள்.
சிலர் அவரைப் பாவிகளின் நண்பர் என்றார்கள். பெயெல்செபூலின் தலைவன் என்றார்கள். அவருடைய உபதேசத்தைக் கடினமான உபதேசம் என்றார்கள். அவரைப் பின்பற்றினவர்கள்கூட அவரோடு நடக்காமல் தூரத்திலே நடக்க ஆரம்பித்தார்கள்.
இயேசு தம்முடைய சீஷர்களை ஒருமுறை பார்த்து “நீங்களும் என்னை விட்டுப்போக மனதாய் இருக்கிறீர்களோ?” என்று கேட்டார். எத்தனை துக்கத்தோடு இந்த வார்த்தைகளை அவர் கேட்டிருப்பார் என்பதை சிந்தித்துப்பாருங்கள். நம்மேல் அன்பு செலுத்துகிற ஆண்டவர் நம்முடைய அன்புக்காக எவ்வளவாய் ஏங்குகிறார் என்பதைச் சிந்தித்துப்பாருங்கள். ஆம், அவர் உலகத்தோற்றத்திற்கு முன்பாகவே நம்மேல் அன்பு செலுத்தினார். நமக்காகத் தம்மைத்தாமே அடிக்கிற ஆட்டுக்குட்டியாக ஒப்புக்கொடுத்தார்.
மாத்திரமல்ல, மனுஷன்மேல் அன்பு செலுத்தி, அவனை விசேஷித்த சிருஷ்டியாக்கினதுடன் கல்வாரிச் சிலுவையிலும்கூட அவன்மீது அன்பு செலுத்தச்சித்தமானார். சிலுவையிலே தன் இரத்தத்தையும் சரீரத்தையும் நமக்காகத் தந்தருளினார்.
தேவபிள்ளைகளே, அவர் சிலுவையிலே மட்டுமல்ல, நித்தியத்திலும் அன்புகூருகிறவராகவே இருக்கிறார்.
நினைவிற்கு:- “அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்; ஆதலால் காருணியத்தால் உன்னை இழுத்துக்கொள்ளுகிறேன்” (எரே. 31:3).
