Appam, Appam - Tamil

மார்ச் 09 – குடும்பத்தில் அன்பு!

“புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்பு கூர்ந்து” (எபே. 5:25).

கர்த்தரில் அன்புகூருகிற ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்தில் அன்புகூருபவர்களாக இருக்கவேண்டும். ஒவ்வொரு கிறிஸ்தவக் குடும்பமும் கிறிஸ்துவின் அன்பை உலகத்திற்கு அறிவிக்கிறதாய் இருக்கவேண்டும்.

எபேசியர் 5ஆம் அதிகாரத்தில் கணவன், மனைவி, பிள்ளைகளுக்குரிய உறவைக்குறித்து விசேஷமாக எழுதப்பட்டிருக்கிறது. மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிவதுபோல, உங்கள் சொந்தப் புருஷருக்குக் கீழ்ப்படியுங்கள் என்றும், புருஷர்களே, கிறிஸ்து சபையில் அன்புகூருவது போல உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள் என்றும் அப். பவுல் ஆலோசனை கூறுகிறார் (எபே. 5:22,25).

ஆம், மனைவி கணவனுக்கு கீழ்ப்படியவேண்டும். கணவன் மனைவியில் அன்புகூரவேண்டும். அப்பொழுதுதான் குடும்பத்தில் ஒருமனப்பாடும் அன்பின் ஐக்கியமும் ஏற்படும். எந்த பிரச்சனையும் தலைதூக்காது. கணவன் மனைவியில் எவ்வளவு அன்புகூரவேண்டும்? ஆம், அந்த அளவை அப். பவுல் எழுதும்போது, “கிறிஸ்து சபையில் அன்புகூருவதைப்போல” என்று எழுதுகிறார். ஆம், அந்த அன்பு கிறிஸ்துவின் அன்புக்கு ஒப்பானதாயிருக்கவேண்டும். அடுத்தபடியாக, குடும்பத்துக்கு அப். பவுல் கொடுக்கும் ஆலோசனை பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் உரிய அன்பின் ஐக்கியம் ஆகும்.

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்திருக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கும் நீ நன்றாயிருப்பதற்கும் உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும் உன் தகப்பனையும் தாயையும் கனம்பண்ணுவாயாக (யாத். 20:12) என்று வேதம் சொல்லுகிறது. பெற்றோரின் இடத்தை ஒருவராலும் நிரப்பவே முடியாது. அவர்கள் எத்தனை வயது சென்றவர்களாய் இருந்தாலும் அவர்கள் விசேஷமானவர்கள்தான். பெற்றோரைக் கனம்பண்ணவேண்டியது பிள்ளைகளின் கடமை.

மூன்றாவதாக, நம் சகோதரரிடத்திலும் அன்புகூரும்படி கட்டளை பெற்றிருக்கிறோம் (1 பேது. 2:17). சகோதரரிடத்தில் அன்புகூருவது நமக்கு பெலனாகவும், கர்த்தருக்கு மகிமையாகவும் இருக்கிறது. எந்த குடும்பத்தில் சகோதரர்கள் ஒற்றுமையாய் இருக்கிறார்களோ அந்த குடும்பத்தை சத்துரு நெருங்குவதில்லை.

சில குடும்பங்களில் சொத்துகளைப் பிள்ளைகளுக்குப் பிரித்துக்கொடுக்கும் நேரம் வரும்போது சகோதர அன்பு மாயமாய் மறைந்துவிடுகிறது. இன்னும் சில குடும்பங்களில் சகோதரர்களின் மனைவிமார்களுடைய தவறான போக்கு காரணமாக, சகோதரர்களுக்குள் பிரிவினை வந்துவிடுகிறது. ஆனால், தேவபிள்ளைகளே, எந்த சூழ்நிலையிலும் சகோதர அன்பு குறையாமல், சகோதர பாசம் நீங்காமல் அன்புகூருபவர்களாக இருக்கவேண்டியது நம்முடைய கடமை ஆகும்.

வேதம் சொல்லுகிறது, “தன் சகோதரனிடத்தில் அன்புகூருகிறவன் ஒளியிலே நிலைகொண்டிருக்கிறான்; அவனிடத்தில் இடறல் ஒன்றுமில்லை. தன் சகோதரனைப் பகைக்கிறவன் இருளிலே இருந்து இருளிலே நடக்கிறான்; இருளானது அவன் கண்களைக் குருடாக்கினபடியால் தான் போகும் இடம் இன்னதென்று அறியாதிருக்கிறான்” (1 யோவா. 2:10,11).

நினைவிற்கு:- “இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?” (சங். 133:1).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.