No products in the cart.
பிப்ரவரி 24 – நன்மை செய்கிறவர்!
“அவர் நன்மை செய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார்” (அப். 10:38).
நம் அருமை ஆண்டவர் நல்லவர். அவர் நல்லவராய் இருக்கிறதினாலே நன்மை செய்கிறார். அவர் நன்மை செய்கிறவராயும், பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார் என்று வேதம் சொல்லுகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன்பாக நன்மை செய்கிறவராக சுற்றித்திரிந்தவர் இன்றைக்கும் மாறாதவராக உங்கள் அருகிலே வந்து உங்களுக்கு நன்மை செய்ய ஆவலுள்ளவராயிருக்கிறார்.
தீமையைச் செய்யவேண்டுமென்று ஒருவன் சுற்றித்திரிகிறான். அவன்தான் சாத்தான். அவன் திருடவும் கொல்லவும் அழிக்கவுமே வருகிறானே அன்றி வேறொன்றுக்கும் வரான். ஆனால், நல்லவராயிருக்கிற இயேசு நமக்கு ஜீவன் உண்டாயிருக்கவும் அந்த ஜீவன் பரிபூரணப்படவும் வந்தார் (யோவா. 10:10).
நன்மை செய்கிற இயேசு வெறும் நன்மை செய்வதோடு நிறுத்திவிடவில்லை! தீமையை செய்கிற சாத்தானை துரத்தி அவனுடைய பிடியிலிருந்து விடுதலையைத் தருகிறார். அவர் நன்மை செய்கிறவராயும் பிசாசின் பிடியில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார் என்று வேதம் தெளிவாய் சொல்லுகிறது (அப். 10:38).
ஒருமுறை ஒரு சகோதரி கடுமையாக வியாதிப்பட்டு மருத்துவமனையிலே அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். ஐந்து ஆண்டுகளாய் அந்த நோய் அவர்களை வாட்டி வதைத்தது. மருத்துவர்கள் அந்த நோயின் காரணத்தை கண்டுபிடிக்கமுடியாமல் தவித்தார்கள். லட்ச லட்சமாய் பணம் செலவழிந்துகொண்டேயிருந்தது.
ஒருநாள் அந்த மருத்துவமனைக்கு ஆண்டவருடைய அன்பைக்குறித்துச் சொல்ல ஊழியர் ஒருவர் வந்தார். அந்த சகோதரி கண்களிலே கண்ணீருடன் “ஐயா, ஆண்டவர் நல்லவராய் இருந்தால் ஏன் எனக்கு இந்த வியாதி, ஏன் இந்த மரணப் போராட்டம், ஏன் இந்த வீண் செலவு” என்று சொல்லிக் கதறினார்கள்.
அந்த போதகர் யோவான் 10:10-ல் காணும் வசனத்தை எடுத்துக் காண்பித்து, ‘உங்களுடைய ஆரோக்கியத்தை தடுப்பவன் பிசாசு. அவன் திருடன். திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவுமே வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். ஆனால், கர்த்தராகிய இயேசுவோ உங்களுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தார்’ என்று சொல்லி அவர்களுடைய தலையிலே கை வைத்து ஜெபம் பண்ணினார். அவ்வளவுதான்! எல்லோரும் ஆச்சரியப்படும்படி, அவர்களுக்குள் இருந்த அசுத்த ஆவிகள் புறப்பட்டு ஓடின. கர்த்தர் பிசாசின் பிடியிலிருந்து அவருக்குப் பூரணமான விடுதலையைக் கொடுத்தார். அன்றைக்கே அவர் தெய்வீக சுகத்தைப் பெற்றுக்கொண்டார்.
நல்லவரான கிறிஸ்து, சாத்தானுடைய சகல வல்லமைகள்மேலும் உங்களுக்கு அதிகாரமும் ஆளுகையும் தந்திருக்கிறார். கர்த்தர் கொடுத்த அதிகாரத்தின்படியே அவனை கடிந்துகொள்ளுங்கள். அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்.
தேவபிள்ளைகளே, நல்லவரும் நன்மை செய்கிறவருமாகிய கிறிஸ்துவை உங்களுடைய வாழ்க்கையிலே வரவேற்றுத் துதியுங்கள். அப்பொழுது தீமைகள் விலகும். ஆசீர்வாதங்கள் சுரக்கும். நன்மைகள் பெருகும்.
நினைவிற்கு:- “மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும், அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள்” (வெளி. 12:11).
