No products in the cart.
ஜனவரி 07 – உடன்படிக்கை!
“உன்னுடனே என் உடன்படிக்கையை ஏற்படுத்துவேன்” (ஆதி.6:18).
வேதத்தின் பல இடங்களிலும் உடன்படிக்கை என்ற வார்த்தை இடம்பெற்றிருப்பதைப் பார்க்கிறோம். இராஜாக்கள், இராஜாக்களோடு செய்கிற உடன்படிக்கை உண்டு. சாதாரண மனிதர்கள் ஒருவரோடொருவர் செய்யும் உடன்படிக்கையும் உண்டு. அதேநேரம் கர்த்தர் நம்மோடு செய்கிற உடன்படிக்கைகளும் உண்டு.
ஜலப்பிரளயம் முடிந்து பேழையிலிருந்து வெளியே வந்தவர்களைக் கர்த்தர் அன்போடு நோக்கிப்பார்த்து, “நான் உங்களோடும், உங்களுக்குப் பின்வரும் உங்கள் சந்ததியோடும், உங்களோடே பேழையிலிருந்து புறப்பட்ட சகல ஜீவஜந்துக்கள்முதல் இனிப் பூமியில் உண்டாகப்போகிற சகல ஜீவ ஜந்துக்கள் பரியந்தம், என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன்” என்று சொன்னார் (ஆதி. 9:9,10).
அந்த உடன்படிக்கையின் சின்னமாக அழகான வானவில்லை வானத்தில் வைத்தருளினார். “அது எனக்கும் பூமிக்கும் உண்டான உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும். நான் பூமிக்கு மேலாய் மேகத்தை வருவிக்கும்போது, அந்த வில் மேகத்தில் தோன்றும். அப்பொழுது எல்லா மாம்சஜீவன்களையும் அழிக்க இனி ஜலமானது பிரளயமாய்ப் பெருகாதபடிக்கு எனக்கும் உங்களுக்கும் மாம்சமான சகல ஜீவஜந்துக்களுக்கும் உண்டான என் உடன்படிக்கையை நினைவு கூருவேன்” (ஆதி. 9:13-15) என்று கர்த்தர் சொன்னார்.
நம்முடைய கர்த்தர் உடன்படிக்கையின் தேவன். அவர் ஒருபோதும் தாம் செய்த உடன்படிக்கையை உடைப்பதோ முறிப்பதோ இல்லை. மனம்மாற அவர் மனுபுத்திரனும் அல்ல. அவர் சொன்னதை நிறைவேற்றுவார். அன்றைக்கு நோவாவோடு உடன்படிக்கை செய்த கர்த்தர், இன்றைக்கு நம்மோடு நித்திய உடன்படிக்கையை செய்கிறார். அந்த உடன்படிக்கை என்ன? “நான் அவர்களோடே சமாதான உடன்படிக்கை செய்வேன்; அது அவர்களுக்கு நித்திய உடன்படிக்கையாயிருக்கும்” (எசே. 37:26).
தேவபிள்ளைகளே, கர்த்தர் தான் செய்திருக்கிற சமாதானத்தின் உடன்படிக்கையின்படி உங்களுடைய வாழ்க்கையில் நிச்சயமாகவே சமாதானத்தை தந்தருள்வார். அவர் சமாதானக் கர்த்தர் (ஆதி. 49:10). சமாதானப்பிரபு (ஏசா. 9:6). சமாதான காரணர் (மீகா 5:5). சமாதானத்தின் தேவன் (ரோம. 16:20). வேதம் சொல்லுகிறது, “உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்” (ஏசா. 26:3).
கர்த்தர் பழைய ஏற்பாட்டு இஸ்ரவேலரோடு நியாயப்பிரமாண உடன்படிக்கை செய்தார். புதிய ஏற்பாட்டு தேவனுடைய பிள்ளைகளோடு கல்வாரி உடன்படிக்கையை செய்திருக்கிறார். நம் அனைவரோடும்கூட சமாதானத்தின் உடன்படிக்கையை நிலைப்படுத்தியிருக்கிறார். எத்தனை கிருபை இது!
திருவிருந்து ஆராதனையின்போதெல்லாம் அவருடைய அன்பின் உடன்படிக்கையை நினைவுகூருகிறோம். “இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது” என்று அவர் சொன்னதை நினைவுகூருகிறோம் (மத். 26:28). வானவில்லை நோக்கிப்பார்க்கும்போதெல்லாம் உடன்படிக்கையில் உண்மையுள்ள தேவனை நம் உள்ளம் போற்றித் துதிக்கிறது.
நினைவிற்கு:- “எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்” (பிலி. 4:7).
