Appam, Appam - Tamil

ஜனவரி 06 – பேழையின் கதவு!

“பேழையின் கதவை அதின் பக்கத்தில் வைத்து, கீழ் அறைகளையும், இரண்டாம் தட்டின் அறைகளையும், மூன்றாம் தட்டின் அறைகளையும் பண்ணவேண்டும் (ஆதி. 6:16).

நோவாவின் பேழையிலே மூன்று தட்டுகள் இருந்தன. இந்த மூன்று தட்டுகளும் மனிதனுடைய ஆவி, ஆத்துமா, சரீரத்திற்கு அடையாளமானவை. அதேநேரம் நம்மைக் காக்கிற கர்த்தருடைய திரித்துவத்திற்கும் அவையே அடையாளம். அவர் பிதாவாகிய தேவனாகவும், குமாரனாகிய தேவனாகவும், பரிசுத்த ஆவியாகிய தேவனாகவும் இருக்கிறார்.

இதிலே கீழ்த்தட்டிலே ஒரு வாசல் இருக்கவேண்டும். நமக்காக பரலோகத்தைத் துறந்து பூமியின் தாழ்விடங்களிலே இறங்கின கிறிஸ்துவே இரட்சிப்பின் பேழைக்குரிய வாசலாக இருக்கிறார். இயேசு சொன்னார், “நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான். அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்” (யோவா. 10:9).

அவர் வாசல் மட்டுமல்ல, வழியாகவும் இருக்கிறார். “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” (யோவா. 14:6) என்றும் இயேசு சொல்லியிருக்கிறார்.

உலகத்தில் ஆயிரக்கணக்கான மதங்களும், மார்க்கங்களும் இருக்கலாம். தத்துவ ஞானிகளும் இருக்கலாம். ஆனால் கிறிஸ்து ஒருவரே பரலோகத்திற்கு ஏணியானவர். பாவமன்னிப்பிற்கென்று தம்மையே பாவ நிவாரண பலியாக ஒப்புக்கொடுத்தவர் அவர் ஒருவர்தான். இரட்சிக்கப்படுவதற்கு அவருடைய நாமமே அல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவில்லை.

நோவா செய்த பேழையில் ஒரு ஜன்னல் இருந்தது. அது மூன்றாவது தட்டிலே உயரமான இடத்தில் இருந்தது. அந்த ஜன்னல் பேழைக்கு வெளிச்சத்தையும், காற்றையும் கொண்டுவந்தது. அந்த ஜன்னல் என்பது தேவனோடு உறவாடி ஐக்கியம்கொள்ளும் ஜெபத்திற்கு அடையாளமாய் இருக்கிறது.

நம் ஒவ்வொருவருக்கும் தேவனோடு ஒரு ஆழமான அன்பும், ஐக்கியமும், உறவும் தேவை. ஜெப ஜீவியம் மட்டுமே அந்த ஐக்கியத்தை நமக்கு பெற்றுத்தருகிறது. ஜெபநேரத்தில் நாம் கர்த்தரோடு உறவாடுகிறோம். கர்த்தருடைய ஆவியானவரும் நம்மோடு உறவாடுகிறார்.

நோவா உருவாக்கிய பேழையின் ஜன்னல் மூடிக்கிடக்குமானால், அந்த பேழையில் இருக்கும் மிருகங்களின் கழிவுகளினால் ஏற்படும் துர்நாற்றம் அதிகமாக வீசுவதுடன் உட்புறம் இருண்டுமிருக்கும். அங்கே ஆரோக்கியம் இருக்காது. உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கை ஆரோக்கியமுள்ளதாய் இருக்கவேண்டுமானால், உங்கள் உள்ளமாகிய ஜன்னல்கள் பரலோகத்தை நோக்கித்திறக்கப்பட்டிருக்கட்டும். தானியேல் தன்னுடைய ஜெபஅறையின் ஜன்னலாகிய பலகணியை எருசலேமுக்கு நேராக திறந்து வைத்திருந்தார்.

உங்களுக்கு ஒத்தாசை வரும் பர்வதமாகிய கல்வாரிக்கு நேராக உங்கள் உள்ளத்தைத் திறந்துவையுங்கள். அப்பொழுது வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து உங்களுக்கு ஒத்தாசை வரும் (சங். 121:2).

நினைவிற்கு:- “தானியேலோவென்றால், அந்தப் பத்திரத்துக்குக் கையெழுத்து வைக்கப்பட்டதென்று அறிந்தபோதிலும், தன் வீட்டுக்குள்ளேபோய், தன் மேல் அறையிலே எருசலேமுக்கு நேராக பலகணிகள் திறந்திருக்க, அங்கே தான் முன் செய்துவந்தபடியே, தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான் (தானி. 6:10).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.