No products in the cart.
ஜனவரி 05 – நோவாவின் கீழ்ப்படிதல்!
“நீ கொப்பேர் மரத்தால் உனக்கு ஒரு பேழையை உண்டாக்கு; அந்தப் பேழையிலே அறைகளை உண்டுபண்ணி, அதை உள்ளும் புறம்புமாகக் கீல்பூசு” (ஆதி. 6:14).
நோவாவை ஒரு பேழை செய்யுமாறு கர்த்தர் சொன்னபோது, அந்தப் பேழையின் எல்லா விவரங்களையும் திட்டமும் தெளிவுமாய்க் கொடுத்தார். நீளம், அகலம், உயரம் எப்படி இருக்கவேண்டும் என்பதையும், எத்தனைத் தட்டுகள் இருக்கவேண்டும் என்பதையும், ஒரே ஒரு வாசலும் ஒரே ஒரு ஜன்னலும்தான் இருக்கவேண்டும் என்பதையும் தெரிவித்ததுடன் அளவுகளையும் தெரிவித்தார். நோவாவும் தேவன் கட்டளையிட்டபடியெல்லாம் அதைச் செய்து முடித்தார் (ஆதி. 6:22).
கர்த்தர் மனுஷரிடத்திலே எதிர்பார்ப்பது கீழ்ப்படிதலே. கர்த்தர் எதைச் சொன்னாலும் எந்த கேள்வியும் கேட்காமல் உடனே அதற்குக் கீழ்ப்படியவேண்டும். நோவா கர்த்தர் சொன்னபடியெல்லாம் செய்ததினால், கர்த்தர் அந்த பேழைக்குள் நோவாவையும், அவன் குடும்பத்தாரையும் பிரவேசிக்கச்செய்து பாதுகாத்தார்.
திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளின்போது, மணமக்களுக்கு பரிசு வழங்குகையில் நூறு ரூபாய் கொடுக்கும்போதுகூட ஒரு ரூபாயை சேர்த்து, நூற்றுஒன்றாகக் கொடுப்பார்கள். அதன் அர்த்தம் எனக்கு தெரியவில்லை. கர்த்தர் பேழையின் நீளம் முந்நூறு முழம், அகலம் ஐம்பது முழம், உயரம் முப்பது முழம் என்று சொன்னதற்கு மாறாக ஒரு முழத்தைக் கூட்டவோ குறைக்கவோ முடியாது. கர்த்தர் தெரிவித்த அளவுகளில் ஒரு மாற்றத்தையும் செய்ய முயலக்கூடாது.
வேதம் சொல்லுகிறது, “கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்?” (மத். 6:27). கர்த்தர் எந்த அளவிலே உங்களை வைத்திருக்கிறாரோ, அந்த அளவிலே ஒன்றையும் கூட்டாமல் நிலைத்திருக்கவேண்டியது உங்களுடைய கடமை.
கர்த்தர் மோசேக்கு ஆசரிப்புக்கூடாரத்தைக் கட்டும்படி சொன்னபோது, எல்லா அளவு முறைகளையும் திட்டமும் தெளிவுமாய்க் கொடுத்துவிட்டார். மோசே அதில் ஒன்றையும் கூட்டவுமில்லை, குறைக்கவுமில்லை. கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து ஆசரிப்புக்கூடாரத்தைக் கட்டியபோது, கர்த்தருடைய மகிமை வாசஸ்தலத்தை மூடியது (யாத். 40:34,35).
அப்படித்தான் தேவாலயத்தைக் கட்டும்படியான வரைமுறைகளைக் கர்த்தர் தாவீதுக்கு எழுதிக்கொடுத்தார். சாலொமோன் அந்த அளவிலே தேவாலயத்தைக் கட்டி, பிரதிஷ்டை செய்தபோது, கர்த்தர் அந்த ஆலயத்தை அங்கீகரித்து மகிமையின் மேகங்களோடு வந்து இறங்கினார்.
கர்த்தருடைய வார்த்தையின்படியே உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுங்கள். வலதுபுறமுமோ, இடதுபுறமுமோ சாயாமல், வேத வசனங்களின்படியே நடவுங்கள். அவருடைய கட்டளைகளோ, உபதேசங்களோ எதுவாக இருந்தாலும், அவற்றுக்கு நூற்றுக்கு நூறு கீழ்ப்படியும்போது, பரலோகம் உங்களை அங்கீகரிக்கும்.
தேவபிள்ளைகளே, கர்த்தருடைய வார்த்தைக்கு முழுமையாகக் கீழ்ப்படியுங்கள். அவர் தரும் ஆலோசனைகளை உங்கள் வாழ்க்கையில் அப்பியாசப்படுத்துகள். நீங்கள் அப்படிச் செய்யும்பொழுது அவர் தம்முடைய மகிமையினால் உங்களுடைய உள்ளத்தை நிரப்புவார். நித்தியத்திலும் மிகுந்த சந்தோஷத்தோடு தேவமகிமைக்குள் பிரவேசிக்கச்செய்வார்.
நினைவிற்கு:- “பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது” (சங். 91:10).
