No products in the cart.
ஜனவரி 04 – நோவாவுக்கோ கிருபை!
“நோவாவுக்கோ, கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது” (ஆதி. 6:8).
நோவாவுக்கும், அவருடைய குடும்பத்தாருக்கும் கர்த்தர் கொடுத்த அநேக ஆசீர்வாதங்களை வேதத்தில் காணலாம். முதலாவதாக, அவருடைய குடும்பம் முழுவதற்கும் இரட்சிப்பைக் கட்டளையிட்டார். இரண்டாவதாக, அவர்களைப்பற்றிய பயத்தை சகல ஜீவராசிகளுக்கும் ஏற்படுத்தினார். மூன்றாவதாக, நோவாவின் குடும்பத்தார்மேல் அளவற்ற கிருபைபாராட்டினார்.
கிருபை ஒரு அருமையான பாதுகாக்கிற வேலி. கிருபை நம்மைச் சூழ்ந்துகொள்ளும்போது அங்கே அடைக்கலமும், பாதுகாப்பும் உண்டு. கொப்பேர் மரத்தால் செய்யப்பட்ட பேழை, நோவாவுக்கு அடைக்கலமாய் இருந்தது. “மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார்” (ஏசா. 54:10).
ஒரு மனிதன் தேவனுடைய கிருபையை அற்பமாய் எண்ணி மனம்போனபோக்கில் ஜீவிப்பானென்றால் கர்த்தர் அந்த கிருபையை அவனைவிட்டு விலக்குவார். பாதுகாப்பின் வேலியை அகற்றிவிடுவார். அப்பொழுது சாத்தானும், உலக அழிவுகளும் அவனைத் தாக்குவதற்கு அது வழிவகுக்கும். சவுல் இராஜாவாக அபிஷேகம்பண்ணப்பட்டிருந்தும் கர்த்தருடைய வார்த்தையைப் புறக்கணித்தபடியால், கர்த்தர் தம்முடைய கிருபையை அவனைவிட்டு விலக்கினார். அதைத்தொடர்ந்து பொல்லாத ஆவி சவுலைப் பிடித்து வாதித்தது.
2001-ம் ஆண்டு அமெரிக்காவின் பெருமையாக எண்ணப்பட்ட இரட்டை மாடிக்கட்டிடங்கள் தகர்க்கப்பட்டபோது, கர்த்தர் அந்த தேசத்தைவிட்டு தம்முடைய கிருபையை அகற்றுகிறாரோ என்று தேவஊழியர்கள் எண்ணினார்கள். பிற்பாடு அமெரிக்காவை திரும்பத் திரும்ப சந்தித்துக்கொண்டிருந்த பெரும்புயலும், கடும்மழையும், இயற்கைச் சேதங்களும், தேசத்தை எச்சரிக்கவே கர்த்தர் அனுப்புகிறார் என்பதை பெரும்பாலான மக்கள் சிந்திக்கத் தவறிவிட்டார்கள்.
இப்படிப்பட்ட பேரழிவுகள் ஏற்படும்போதெல்லாம் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, பாவங்களை அறிக்கையிட்டு, தங்களுடைய பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், கர்த்தரும் மனமிரங்குவார். தாம் செய்ய நினைத்த தீங்கைச் செய்யாதிருப்பார்.
1945-ம் ஆண்டு நடந்த இரண்டாம் உலக மகா யுத்தத்தில் ஹிரோஷிமா, நாகசாகி தீப்பிடித்து எரிந்து அழிந்தது. ஆனால் அந்த அழிவின்மத்தியிலும் ஒரே ஒரு வீடுமாத்திரம் கொஞ்சமும் சேதமடையாமல் நிலைத்து நின்றது. ஜப்பானிலுள்ள அத்தனை விஞ்ஞானிகளுக்கும், அரசாங்கத்திற்கும் ஒரே ஆச்சரியம்! இந்த வீடு அழிக்கப்படாமல் நிலைத்து நின்றதின் காரணம் என்ன என்பதை ஆராய்ந்துபார்த்தார்கள். முடிவில், ‘எங்களுடைய வீடு பாதுகாக்கப்படுவதற்கு ஒரே ஒரு காரணம்தான் உண்டு. அது தேவனுடைய கிருபை’ என்று அந்த வீட்டுக்குள் பாதுகாக்கப்பட்ட கிறிஸ்தவ மிஷனெரிகள் சொன்னார்கள்.
தேவபிள்ளைகளே, இந்த புதிய ஆண்டிலே, நோவாவுக்குப் பாராட்டின கிருபையை கர்த்தர் உங்களுக்கும், உங்கள் குடும்பத்துக்கும் அருளுவாராக. கர்த்தர் உங்களுக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமாய் இருப்பார் (சங். 46:1).
நினைவிற்கு:- “பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது” (சங். 103:11).
