Appam, Appam - Tamil

ஜனவரி 27 – முழு இருதயத்தோடு!

“உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள் (எரே. 29:13).

நீங்கள் கர்த்தரோடிருந்தால், அவர் உங்களோடிருப்பார்; நீங்கள் அவரைத் தேடினால், உங்களுக்கு வெளிப்படுவார். இந்த புதிய ஆண்டிலே முழு இருதயத்தோடு கர்த்தரை தேடும்படி தீர்மானியுங்கள். அதுதான் உண்மையான ஜெபம்.

உங்களுடைய விசுவாச ஜெபங்களுக்கு ஆதாரமாகக் கர்த்தர் நான்கு மேன்மையான ஆசீர்வாதங்களை வைத்திருக்கிறார். முதலாவது வாக்குத்தத்தங்கள், இரண்டாவது தீர்க்கதரிசனங்கள், மூன்றாவது கிருபையின் ஈவுகள், நான்காவது பரிசுத்த ஆவியானவர். இந்த நான்கு ஆசீர்வாதங்களும் நீங்கள் தேவனை நெருங்கி கிட்டிச்சேரவும், உறுதியாய் பற்றிப்பிடித்துக்கொள்ளவும், முழு இருதயத்தோடு தேடவும் உதவியாய் இருக்கின்றன.

சார்லஸ் பின்னியினுடைய வாழ்க்கை வரலாற்றைப் பாருங்கள். ஒருநாள் அவருடைய உள்ளத்திலே கர்த்தரைத் தேடவேண்டுமென்று தாங்கமுடியாத தாகம் ஏற்பட்டது. ஆகவே மூன்று மணி நேரம் தேவ சமுகத்திலிருந்து ஜெபிக்கப்போகிறேன், அவரைத் தேடப்போகிறேன் என்று சொல்லிவிட்டு தனிமையான இடத்திற்குப்போய் ஜெபிக்க முழங்கால்படியிட்டார்.

ஆனால் அவரது மனமோ இருளால் நிறைந்திருந்ததால் சிந்தையை ஒருமுகப்படுத்த அவரால் முடியவில்லை. மூன்று மணிநேரம் என்று அவர் பொருத்தனை பண்ணினபடியால் அந்த நேரத்தை எப்படிச் செலவிடுவது என்று தெரியாமல் தவித்தார். “ஐயோ, நான் தேவனை ஏதோ துக்கப்படுத்திவிட்டேனோ? அவரை வேதனைப்படுத்தி விட்டேனோ? அவருடைய பிரசன்னத்தை உணர முடியவில்லையே” என்று கதறினார்.

அப்பொழுது அவருடைய மனத்திரையில் ஒரு வசனம் பளிச்சிட்டது. “உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்” (எரே. 29:13) என்பதே அந்த வசனம். இந்த வாக்குத்தத்தத்தை உறுதியாய்ப் பிடித்துக்கொண்டார். தேவனே உம்மை எனக்கு வெளிப்படுத்தும், பாவியாகிய என்மேல் கிருபையாயிரும். உம்மைக் காணவேண்டும், உம்முடைய பிரசன்னத்தை உணரவேண்டுமென்று அவர் கதறி ஜெபித்தபோது அவருடைய கடின இருதயம் உடைக்கப்பட்டது. தேவ பிரசன்னத்தின் ஆழத்திற்குள்ளே அவர் கடந்துபோனார். அவருடைய வாழ்க்கை மாறியது.

தேவனோடுகூட இருப்பதற்கு உங்களுக்குத் தீராத தாகம் இருக்கவேண்டும். அத்தாகத்தோடு கர்த்தரைத் தேடும்போது நிச்சயமாகவே அவரைக் கண்டடைவீர்கள். அநேகரால் தேவனுடைய பாதத்தில் நீண்டநேரம் காத்திருக்கமுடியாமல் இருப்பதன் முக்கிய காரணம் தாகம் இல்லாததுதான். ஏதோ கடமைக்காக ஜெபிப்பதால் சிந்தனை சிதறிப்போய் ஜெபம் பயனற்றதாகிறது.

தாவீதின் ஜெபவாழ்க்கையிலே அவருடைய தாகமே அவரை உந்தித் தள்ளியது. “என் ஆத்துமா தேவன்மேல், ஜீவனுள்ள தேவன்மேலேயே தாகமாயிருக்கிறது; நான் எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன்?” (சங். 42:2) என்று தாவீது சொன்னார்.

தேவபிள்ளைகளே, கர்த்தரைத் தாகத்தோடு தேடுங்கள். நிச்சயமாய் கண்டடைவீர்கள்.

நினைவிற்கு:- “தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன்” (ஏசா. 44:3).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.