No products in the cart.
ஜனவரி 19 – இருதயத்தின் கன்மலை!
“தேவன் என்றென்றைக்கும் என் இருதயத்தின் கன்மலையும் என் பங்குமாயிருக்கிறார்” (சங். 73:26).
“தேவனே, நீரே என் இருதயத்தின் கன்மலை, நீரே என் பங்கு, நீரே என் சுதந்திரம். நீரே என் மேன்மை, நீரே என் எதிர்காலம்” என்று போற்றிப் புகழும்போது, தேவனுடைய இருதயம் களிகூருகிறது. ஆம், தேவன் நம்முடைய பங்கானவர்!
ஒரு முறை ஒரு இராஜா தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடினபோது எல்லா போர் வீரர்களையும் அழைத்து, ‘நீங்கள் என் அரண்மனைக்குள் சென்று உங்களுக்கு என்னென்ன தேவையோ அதையெல்லாம் எடுத்துக்கொள்ளலாம்’ என்று அனுமதி கொடுத்தார். உடனே, இராஜாவைச் சூழ இருந்த அத்தனை போர்வீரர்களும், சேவகர்களும் அரண்மனையை நோக்கிப் பாய்ந்து சென்றார்கள். அங்கேயிருந்த முத்துக்கள், வைரங்கள், வைடூரியங்கள், இன்னும் விலை மதிக்கமுடியாத செல்வங்கள், பொன் ஆபரணங்கள் எல்லாவற்றையும் எடுத்துச்சென்றுவிட்டார்கள். கொஞ்ச நேரத்தில் அரண்மனையே காலியாகி விட்டது.
ஆனால் அதே நேரத்தில், ஒரே ஒரு போர்ச்சேவகன்மாத்திரம் இராஜாவினுடைய அருகிலே தனியாக நின்றுகொண்டிருந்தான். இராஜா அவனைப் பார்த்து, ஏன் ஒரு பொருளையும் எடுக்கச் செல்லவில்லை என்று கேட்க, அந்த போர்ச்சேவகன் தாழ்மையோடுகூட, “இராஜாவே, எல்லாரும் உம்மைவிட்டு ஓடினார்கள். ஆனால் உம்மைவிட்டுப் பிரிய எனக்கு மனம் இல்லை. நீரே என்னுடைய பங்கும் சுதந்தரமுமாய் இருக்கிறீர். உம்மைப் பாதுகாக்க வேண்டிய கடமை என் கைகளில் இருக்கிறது. இந்த உலகத்திலுள்ள பொன், பொருள், வெள்ளி எல்லாம் காலத்தினால் அழிந்து விடக்கூடும். ஆனால் நான் உங்கள்மேல் வைத்திருக்கிற அன்போ என்றென்றும் அழியாதது. உமக்குச் செய்யவேண்டிய கடமையை நான் தவறாமல் செய்யவேண்டுமல்லவா” என்று சொன்னபோது, இராஜாவின் உள்ளம் அப்படியே உருகினது. அந்தப் போர்வீரனைக் கட்டியணைத்து, அவனைத் தன் தேசத்திலே பெரிய மந்திரியாக உயர்த்தினார்.
நாமும்கூட இராஜாதி இராஜாவாகிய நம் ஆத்தும நேசரைப் பார்த்து, “என் தேவனே, நீரே என் பங்கானவர். நீரே என் சுதந்தரமுமானவர்” என்று சொல்லுவோமா? தாவீது தன் முழு நேசத்தையும் கர்த்தர்பேரில் வைத்து, “கர்த்தாவே, நீரே என் பங்கு; நான் உமது வசனங்களைக் கைக்கொள்ளுவேன்” என்றார் (சங். 119:57).
வேதத்திலுள்ள பரிசுத்தவான்கள் எல்லாரும் கர்த்தர்மேல் அன்புவைத்து அவரையே தங்களுடைய பங்காக, தங்களுடைய மேன்மையாக, தங்களுடைய சுதந்தரமாக தெரிந்துகொண்டார்கள். கர்த்தர் அவர்களுடைய பங்காயிருந்ததே அவர்களுடைய மகிழ்ச்சியின் இரகசியமாய் இருந்தது. “யாக்கோபின் பங்காயிருக்கிறவர்” என்று எரேமியா அவருக்கு ஒரு புதுப்பெயரைச் சூட்டினார். அவர் எழுதுகிறார்: “யாக்கோபின் பங்காயிருக்கிறவர் …. அவர் சர்வத்தையும் உருவாக்கினவர்; இஸ்ரவேல் அவருடைய சுதந்தரமான கோத்திரம்; சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம்” (எரே. 10:16).
தேவபிள்ளைகளே, தேவனை உங்கள் பங்காய் பெற்றிருந்தால் நீங்கள் பாக்கியவான்கள். மரியாள் தன்னைவிட்டு எடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டதைப்போல கிறிஸ்துவையே உங்கள் பங்காகத் தெரிந்துகொள்வீர்களாக!
நினைவிற்கு:- “கர்த்தர் என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும்; ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கைகொண்டிருப்பேன்” (புல. 3:24).
