No products in the cart.
டிசம்பர் 11 – சிட்சை!
“எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்” (எபி. 12:11).
சிட்சையை யாரும் விரும்புவதில்லை. ஆனால், ஒரு மனுஷன் சீர்ப்படுவதற்கு சிட்சை மிகவும் அவசியமாயிருக்கிறது. தேவனுடைய சிட்சை என்பது ஒருவேளை அந்த நேரத்தில் துன்பமானதாயிருக்கலாம். ஆனால், பிற்காலத்தில் அதுவே நமக்கு ஆசீர்வாதமானதாக மாறுவதைக் காண்போம்.
நாம் நம்முடைய பிள்ளைகளை பிரம்பினால் சிட்சிக்கிறோம். அதன் முக்கிய நோக்கம் அந்தப் பிள்ளைகளுடைய நன்மையே. அதே நேரத்தில் பெரியவர்களை எப்படி சிட்சிப்பது? அரசாங்கம் அதற்காக பலவிதமான அபராதங்களையும், தண்டனைகளையும், சிறைக்கூடங்களையும் வைத்திருக்கிறது. இருப்பினும், உள்ளத்தில் செய்கிற பாவங்களும், அரசாங்கத்தின் கண்களில் படாதவாறு செய்கிற இரகசியச் செயல்களும் ஏராளமாக இருக்கின்றன. அவைகளிலிருந்து ஒரு விசுவாசியை திருத்தும் வழி என்ன?
வேதம் சொல்லுகிறது: “கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார் என்று பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திமதியை மறந்தீர்கள்” (எபி. 12:6).
கர்த்தர் நம்மைக் கண்டிக்கும்போது, நம்மேல் அவர் அன்பு வைத்திருக்கிறார் என்பதை நாம் மறந்துபோய்விடக்கூடாது. அந்த அன்பு காரணமாகவே, அவர் நம்மீது அக்கரைக்கொண்டவராய் சிட்சைகளையும், பாடுகளையும், கஷ்டங்களையும் நம்முடைய வாழ்க்கையிலே அனுப்பி நம்மை நல்வழிபடுத்துகிறார்.
வேதம் சொல்லுகிறது: “நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார்; தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ? எல்லோருக்கும் கிடைக்கும் சிட்சை உங்களுக்குக் கிடையாதிருந்தால் நீங்கள் புத்திரராயிராமல் வேசிப்பிள்ளைகளாயிருப்பீர்களே. அன்றியும், நம்முடைய சரீரத்தின் தகப்பன்மார்கள் நம்மைச் சிட்சிக்கும்போது, அவர்களுக்கு நாம் அஞ்சி நடந்திருக்க, நாம் பிழைக்கத்தக்கதாக ஆவிகளின் பிதாவுக்கு வெகு அதிகமாய் அடங்கி நடக்கவேண்டுமல்லவா?” (எபி. 12:7-9).
துவக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள வசனத்தில் இடம்பெற்றுள்ள பழகினவர்களுக்கு என்ற வார்த்தையை சிந்தித்துப்பாருங்கள். ஆம், சிட்சையின்மூலம் கர்த்தர் நம்மை பழக்குவிக்கிறார். பரிசுத்தப் பாதையில் நடக்க நமக்குச் சொல்லிக்கொடுக்கிறார். ஆலோசனைக்கர்த்தராகிய தேவன் சிட்சையின்மூலம் நமக்குக் கற்றுக்கொடுக்கிற நல்ல பாடம் உண்டு. அப்பாடத்தை நாம் ஆரம்பத்திலேயே கைக்கொள்ளுவோமென்றால், அது நித்திய இராஜ்யத்திற்கு நாம் சென்று சேரும்வரையிலும் நமக்குப் போதிய பாதுகாப்பைத் தரும்.
தேவபிள்ளைகளே, கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதீர்கள். அவர் தமது சிட்சையின் முடிவிலே உங்களை மேன்மையாய் உயர்த்துவார். கலங்காதீர்கள்.
நினைவிற்கு:- “நொறுங்குண்ட இருதயமுள்ளவர்ககுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார். நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும்; கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்” (சங். 34:18,19).