No products in the cart.
அக்டோபர் 28 – செருபாபேல்!
“செருபாபேலுக்குச் சொல்லப்படுகிற கர்த்தருடைய வார்த்தை என்னவென்றால், பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்” (சக. 4:6).
இன்றைக்கு நாம் சந்திக்கப்போகிற தேவமனுஷனின் பெயர் செருபாபேல் என்பதாகும். செருபாபேல் என்ற வார்த்தைக்கு, பாபிலோனின் துளிர் என்று அர்த்தமாகும். சிறையிருப்பிலே பாபிலோனுக்குச் சென்ற பெற்றோருக்கு மகனாக, அங்கே பிறந்தபடியால், இந்தப் பெயரை அவருக்குச் சூட்டியிருந்திருக்கவேண்டும்.
ஆனாலும், அவர் கர்த்தருக்காகவும், எருசலேமுக்காகவும் பக்திவைராக்கியம் கொண்டார். செருபாபேலும், ஆசாரியனாகிய யோசுவாவும், பாபிலோனிலிருந்து எருசலேமுக்கு ஜனங்களை நடத்திக்கொண்டுவந்தார்கள். எருசலேமில் ஒரு பலிபீடத்தைக் கட்டி பலியைச் செலுத்தினார்கள்.
அடுத்ததாக, செருபாபேலின் கைகள் இடிந்து நொறுங்கிக்கிடந்த ஆலயத்தை மீண்டும் கட்டும்படி அஸ்திபாரமிட்டது. முதல் ஆலயம் கட்டியது சாலொமோன். இந்த ஆலயம் அதே இடத்தில் இரண்டாவதாகக் கட்டப்படும்படி அஸ்திபாரமிடப்பட்டது. சாலொமோன் பெரிய இராஜாவானபடியால், ஆலயத்தை எளிதாய்க் கட்டிமுடிக்க அவரால் முடிந்தது.
ஆலயத்துக்கு வேண்டிய எல்லாப்பணிமுட்டுகளையும், தாவீது சேகரித்து வைத்திருந்தார். ஜனங்கள் உற்சாகமாய் கொடுத்தார்கள். சுற்றியிருந்த இராஜாக்களும் உதவிக்கரங்களை நீட்டினார்கள். ஆனால், இப்படிப்பட்ட அநுகூலங்கள் ஒன்றும் செருபாபேலுக்கு இருக்கவில்லை.
செருபாபேலின் நாட்களில் பெரும்பாலான யூதர்கள் பாபிலோனிலுள்ள சிறையிருப்பில் சிக்கியிருந்தார்கள். திரும்பிவந்தவர்களுக்கும் சரியான வேலை வாய்ப்புகள் இல்லை. தேவபணிக்கு பயங்கர எதிர்ப்புகள் எல்லா பக்கங்களிலிருந்தும் எழுந்தன. தடைகள், போராட்டங்கள் செருபாபேலின் உள்ளத்தைச் சோர்ந்துபோகப்பண்ணினது. ஆவியானவரில் சார்ந்துக்கொள் என்பதே கர்த்தர் கொடுத்த ஆலோசனையாகும்.
இன்று ஆலயம் என்று சொல்லப்படுவது, கைகளினால் கட்டப்படுவது அல்ல. ஒரு விசுவாசியின் இருதயமே கர்த்தர் தங்கும் ஆலயமாய் இருக்கிறது. “நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?” (1 கொரி. 3:16).
உங்கள் ஆவிக்குரிய ஜீவியம் மாளிகையாக, ஆலயமாக, கர்த்தருடைய வாசஸ்தலமாக கட்டி எழுப்பப்படும்போது, நிச்சயமாகவே பல எதிர்ப்புகளையும், தடைகளையும், போராட்டங்களையும் சந்திக்கவேண்டியதிருக்கும். பரிசுத்தமாய் ஜீவிக்க முடியாதபடி உலகம், மாமிசம், பிசாசு உங்களோடு போராடிக்கொண்டிருக்கும். சாத்தானும் சோதனைக்குமேல் சோதனைகளைக் கொண்டுவருவான். அப்படிப்பட்ட நேரங்களில், ஆவியானவரைச் சார்ந்துகொள்ளுங்கள். ஆவியினாலேயே எல்லாம் ஆகும்.
தேவபிள்ளைகளே, ஆவியானவர் பலத்த பராக்கிரமசாலியாய், உங்களுக்கு துணை நின்று வெற்றி தருவார்.
நினைவிற்கு:- “அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவி செய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ளவேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்” (ரோம. 8:26).