No products in the cart.
நவம்பர் 13 – வாயைத் தொட்டு!
“பலிபீடத்திலிருந்து, தன் கையிலே பிடித்த குறட்டால் ஒரு நெருப்புத் தழலை எடுத்து, என்னிடத்தில் பறந்து வந்து, அதினால் என் வாயைத் தொட்டு” (ஏசா. 6:6,7).
கர்த்தர் ஏசாயாவின் வாயைத் தொட்டார். ஆம், அந்த வாய் கர்த்தருக்கு அவசியமானதாய் இருந்தது! அவர் பெரிய தீர்க்கதரிசனங்களை உரைக்கவும், எழும்பிப் பிரகாசிக்கவும், அவருடைய வாயைக் கர்த்தர் பலிபீடத்தின் அக்கினியினாலும், இரத்தத்தினாலும் தொடவேண்டியது அவசியமாய் இருந்தது.
அந்த பலிபீடம் கல்வாரி சிலுவை அல்லவா? அந்த அக்கினியானது பரிசுத்த ஆவியின் அக்கினி அல்லவா? தேவபிள்ளைகளே, நீங்கள் இன்றைக்கு கர்த்தருக்குத் தேவையானவர்களாக இருக்கிறீர்கள். அவர் உங்களைத் தமது இரத்தத்தினால் கழுவிப் பரிசுத்த ஆவியின் அக்கினியினால் அபிஷேகிக்க விரும்புகிறார்.
கர்த்தர் ஏசாயாவை மாத்திரமல்ல, எரேமியாவையும் தொட்டார். அவர் எழுதுகிறார், “கர்த்தர் தமது கரத்தை நீட்டி, என் வாயைத் தொட்டு: இதோ, என் வார்த்தைகளை உன் வாயிலே வைக்கிறேன். …. உன்னை நான் இன்றையதினம் ஜாதிகளின் மேலும் ராஜ்யங்களின் மேலும் ஏற்படுத்தினேன் என்று கர்த்தர் என்னுடனே சொன்னார்” (எரே. 1:9,10).
உங்கள் வாயை கர்த்தருக்கென்று பிரதிஷ்டைபண்ணுங்கள். வீண் வார்த்தைகளை அப்புறப்படுத்திவிட்டு, ‘கர்த்தாவே உம்முடைய அக்கினி என் உதட்டைத் தொடட்டும். நான் உமக்காக எழும்பிப் பிரகாசிக்க விரும்புகிறேன்’ என்று சொல்லுவீர்களாக.
வேதத்தில் கர்த்தர் அநேகம்பேரைத் தொட்டதை நாம் காண்கிறோம். யாக்கோபின் தொடைச்சந்தை அவர் தொட்டார். தொடை என்பது, மனுஷனுடைய சுயபெலத்தைக் குறிக்கிறது. தன் பெலத்தினால் மனம்போனபடி திரியும் மனிதன் கர்த்தரால் தொடப்படும்போது நேர்ப்பாதைக்குத் திரும்புகிறான்.
பேதுருவைப் பார்த்து கர்த்தர், “நீ இளவயதுள்ளவனாயிருந்தபோது உன்னை நீயே அரைகட்டிக்கொண்டு, உனக்கு இஷ்டமான இடங்களிலே நடந்து திரிந்தாய்; நீ முதிர்வயதுள்ளவனாகும்போது உன் கைகளை நீட்டுவாய்; வேறொருவன் உன் அரையைக் கட்டி, உனக்கு இஷ்டமில்லாத இடத்துக்கு உன்னைக் கொண்டுபோவான்” என்று சொன்னார் (யோவா. 21:18). பரிசுத்த ஆவியானவராகிய தேவனே நம்மை அரைக்கட்டி வழிநடத்தும்படி இன்று அவருடைய தொடுதலுக்கு நம்மை ஒப்புக்கொடுப்போமா?
சவுலைப் பவுலாக மாற்ற கர்த்தர் அவன் கண்களைத் தொடவேண்டியதாயிற்று. சில நிமிட நேரங்கள் அவன் கண் தெரியாதவனாய் தவித்தான். கர்த்தர் மீண்டும் அந்தக் கண்களைத் திறந்தார். ஆ! அந்தக் கண்கள் தீர்க்கதரிசனங்களைக் காணும் கண்களாய் மாறின. ஆவிக்குரிய சத்தியங்களைப் புகுத்தியிருக்கிற கண்களாய் மாறின. கிறிஸ்துவைத் தரிசிக்கும் மேன்மையான கண்களாய் கர்த்தர் அந்தக் கண்களை உயர்த்தினார்.
அன்று கர்த்தர் வியாதிஸ்தர்களைத் தொட்டார். அநேகருடைய மனதைத் தொட்டார். குஷ்டரோகிகளைக் கூசாமல் தொட்டார். நாயீனூர் விதவையின் மகனைத் தொட்டு உயிரோடு எழுப்பினார். இன்று கர்த்தர் உங்களையும் தொட விரும்புகிறார்.
தேவபிள்ளைகளே, கிறிஸ்துவின் தொடுதல் அற்புதங்களை நிகழ்த்துகிறது. இன்று அவர் உங்களைத் தொடுவதற்கு இடம்கொடுப்பீர்களா? உங்களை முற்றிலும் மறுரூபமாக்க கிறிஸ்துவின் கையிலே ஒப்புக்கொடுப்பீர்களா?
நினைவிற்கு:- “என் சிநேகிதரே, எனக்கு இரங்குங்கள், எனக்கு இரங்குங்கள்; தேவனுடைய கை என்னைத் தொட்டது” (யோபு 19:21).