No products in the cart.
நவம்பர் 14 – ஓடிப்போகும்!
“சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம்” (ஏசா. 35:10).
கர்த்தரால் மீட்கப்பட்டவர்களை நோக்கி சந்தோஷமும், மகிழ்ச்சியும் ஓடி வரும். அதே நேரம் சஞ்சலமும், தவிப்பும் ஓடிப்போகும். சஞ்சலத்தை நீக்கக்கூடிய இயேசு கிறிஸ்துவே அந்த அற்புதத்தை உங்கள் வாழ்க்கையில் செய்கிறார்.
ஆதாம் ஏவாள் என்றைக்கு பாவம் செய்தார்களோ, அன்றுமுதல்தான் பூமிக்கு சாபம் என்கிற சஞ்சலம் வந்தது. ஸ்திரீ சஞ்சலத்தோடு பிள்ளைப்பேற்றை சந்திக்கவேண்டியதிருந்தது. “ஸ்திரீயினிடத்தில் பிறந்த மனுஷன் வாழ்நாள் குறுகினவனும் சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான்” (யோபு 14:1). “என் ஆயுசு நாட்கள் கொஞ்சமும் சஞ்சலமுள்ளதுமாயிருக்கிறது; அவைகள் பரதேசிகளாய்ச் சஞ்சரித்த என் பிதாக்களுடைய ஆயுசு நாட்களுக்கு வந்து எட்டவில்லை” (ஆதி. 47:9).
சாலொமோனுக்கு திரளான ஞானமும், செல்வமும், ஐசுவரியமும், பேரும் புகழும் இருந்தபோதிலும்கூட, சஞ்சலம் அவரையும் விட்டுவைக்கவில்லை. “சூரியனுக்குக் கீழே செய்யப்படுகிற காரியங்களையெல்லாம் கவனித்துப் பார்த்தேன்; இதோ, எல்லாம் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது” என்று அவர் சொல்கிறார். (பிர. 1:14).
இயேசுகிறிஸ்து இந்த சஞ்சலத்தின் வேதனையிலிருந்து நம்மை மீட்கச் சித்தமானார். அதற்காகவே அவர் இந்த சஞ்சலம் நிறைந்த உலகத்திற்கு இறங்கி வந்தார். சஞ்சலத்திலிருந்தும், வேதனையிலிருந்தும் நம்மை மீட்கும்படி தன்னுடைய இரத்தத்தையே, மீட்கும்பொருளாக ஒப்புக்கொடுத்தார்.
வேதம் சொல்லுகிறது, “அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல், குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே” (1 பேது. 1:18,19).
நாம் சஞ்சலத்தார் கூட்டத்தில் நிற்காமல், மீட்கப்பட்டவர்களின் கூட்டத்தில் நிற்கிறோம். “கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி, ஆனந்தக்களிப்புடன் பாடி, சீயோனுக்கு வருவார்கள்” என்று வேதம் சொல்லுகிறது (ஏசா. 35:10). நாம் கர்த்தரால் மீட்கப்பட்டது உண்மையானால் கலங்கவேண்டியதோ, சஞ்சலப்படவேண்டிய அவசியமோ இல்லை. ‘நான் இயேசு கிறிஸ்துவினால் மீட்கப்பட்டிருக்கிறேன், நான் இராஜாதி இராஜாவின் பிள்ளை, நான் கர்த்தரின் சுதந்தரம்’ என்று உற்சாகமாய் சொல்லமுடியும். “நீ உன் இருதயத்திலிருந்து சஞ்சலத்தையும், உன் மாம்சத்திலிருந்து தீங்கையும் நீக்கிப்போடு” என்று ஞானி கூறுகிறார் (பிர. 11:10).
வேதம் சொல்லுகிறது, “உன் சிருஷ்டிகரே உன் நாயகர்; சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம், இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் மீட்பர், அவர் சர்வ பூமியின் தேவன் என்னப்படுவார். கைவிடப்பட்டு மனம்நொந்தவளான ஸ்திரீயைப்போலவும், இளம்பிராயத்தில் விவாகஞ்செய்து தள்ளப்பட்ட மனைவியைப்போலவும் இருக்கிற உன்னைக் கர்த்தர் அழைத்தார் என்று உன் தேவன் சொல்லுகிறார்” (ஏசா. 54:5,6). தேவபிள்ளைகளே, பலவிதமான சஞ்சலங்கள் உங்களை நெருக்க முயற்சிக்கும்போது உங்களை மீட்டுக்கொண்ட இயேசுவை நோக்கிப்பாருங்கள். அவரே உங்களைத் தேற்றுவார், ஆற்றுவார், பட்சமாய் பேசுவார்.
நினைவிற்கு:- “அவர் (கர்த்தர்) சஞ்சலப்படுத்தினாலும் தமது மிகுந்த கிருபையின்படி இரங்குவார். அவர் மனப்பூர்வமாய் மனுபுத்திரரைச் சிறுமையாக்கிச் சஞ்சலப்படுத்துகிறதில்லை” (புல. 3:32,33).